சிறப்புக் கட்டுரைகள்

மாணவர் ஓரம்: குடிநீர் வழங்கலின் வரலாறு!

செய்திப்பிரிவு

இந்தியா விடுதலை அடைந்தபோது மிகப்பெரிய பிரச்சினை குடிநீர்தான். மத்திய அரசு கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்கான குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகள் தொடர்பாக ஆராய்வதற்காக 1960-ல் ‘தேசியக் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரக் குழு’ அமைத்தது. அதன் தலைவராக தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராக இருந்த லூர்து அம்மாள் சைமன் நியமிக்கப்பட்டார்.

பல்வேறு மாநிலங்களில் ஆய்வுசெய்தது இக்குழு. இறுதியில், “குடிநீர் விநியோகமும், கழிவுநீர் அகற்றலும் மிகவும் அவசியமானவை. வழங்கப்படும் குடிநீரில் 80% உடனடியாகக் கழிவுநீராக மாறுகிறது. அதனால், இவை இரண்டையும் இணைத்தே பார்க்க வேண்டும். இல்லையென்றால், கழிவுநீர் தேங்குதல், கொசு உற்பத்தி போன்ற சுகாதாரப் பிரச்சினைகள் எழும். குடிநீர் திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் தொடங்குவதோ, தொடர்ந்து பராமரிப்பதோ இயலாது. எனவே, தன்னாட்சி அதிகாரம் பெற்ற குடிநீர் வடிகால் வாரியங்களை அந்தந்த மாநிலங்களே அமைத்துக்கொள்ள வேண்டும். குடிநீர் மற்றும் கழிவுநீர்த் திட்டங்களைத் திட்டமிடல், வடிவமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடிநீருக்கும், கழிவுநீர் நிர்வாகத்துக்கும் சேர்த்து ஒரே வரி மட்டுமே மக்களிடம் வசூலிக்க வேண்டும்” என்று தனது முடிவுகளை அறிவித்தது அந்தக் குழு. இதனை அமல்படுத்த 1961-ல் மத்திய அரசு ஆணையிட்டது. மத்தியில் தனித் துறையும், ஒவ்வொரு மாநிலத்திலும் குடிநீர் வடிகால் வாரியங்களும் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் 1971-ல் குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கப்பட்டதன் வரலாறு இதுதான்.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறையின்படி, ஒரு லிட்டர் குடிநீரில் 1.5 மில்லி கிராம் வரையில்தான் ஃப்ளோரைடு இருக்கலாம். அதுவே, 10 மி.கி. அளவுக்கு இருக்குமானால் எலும்பு, பற்களை மோசமாகப் பாதிக்கும். இந்தியாவில் 19 மாநிலங்களில் உள்ள 14,132 ஊர்களில் குடிநீரில் ஃப்ளோரைடின் அளவு அதிகமாக இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதனால், ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், அசாம், ஆந்திரம், பிஹார், சத்தீஸ்கர், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்தத் தகவல் கூறுகிறது. நல்ல தண்ணீருக்கான தாகம் இந்தியாவில் இன்னும் தீரவில்லை.

SCROLL FOR NEXT