சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தில் கடந்த பத்து தினங்களில் மட்டும் எழுநூறுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். உலகை அதிரச் செய்திருக்கும் இந்தப் படுகொலைகளுக்கு மிக முக்கியக் காரண கர்த்தாவென்று ISIS சுட்டிக்காட்டப்படுகிறது.
Islamic State of Iraq and Syria என்றும் Islamic State of Iraq and Levant என்றும் (Levant என்பது லெபனான், சைப்ரஸ், சிரியா, பாலஸ்தீன், ஜோர்டன், இஸ்ரேல் மற்றும் துருக்கியின் சில தென் பிராந்தியங்களை உள்ளடக்கிய மத்திய தரைக்கடல் பகுதியைக் குறிக்கும்.) அழைக்கப்படும் இந்த இயக்கம் அல் காயிதாவின் பூரண ஆதரவு மற்றும் ஆசீர்வாதத்துடன் 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இன்றுவரை இது அல் காயிதாவின் ஆசி பெற்ற இயக்கம் மட்டும்தானா, அல் காயிதாவேதானா என்கிற சந்தேகம் இல்லாமல் இல்லை. எப்படியானாலும் அல் காயிதா சம்பந்தம் உண்டு. ஏனெனில் இதன் ஆதி தலைவர்களுள் ஒருவரான அபூ முஸாப் அல் ஜர்காவி 2006ம் ஆண்டு அமெரிக்கப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டபோது “யூப்ரடிஸ், டைக்ரீஸ் பாயும் நிலப்பரப்பில் பிராணனை விட்ட இராக்கிய அல் காயிதாவின் எமிர்” என்று அல் காயிதாவினரே இரங்கல் தெரிவித்ததை நினைவுகூர்ந்து பார்த்தால் அதுதான் உண்மையோ என்று தோன்றும். ஆனால் அஃபிஷியலாக இது உறுதிப்படுத்தப்படவில்லை.
ISISக்கு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பேர் மாற்றிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. முதலில் இந்த இயக்கம் ஜமாஅத் அல் தவ்ஹீத் வால் ஜிஹாத் என்று அழைக்கப்பட்டது. பிறகு தன்ஸிம் கைதாத் அல் ஜிஹாத் ஃபி பிலாத் அல் ரஃபிதயான் எனப்பட்டது. பிறகும் வேறு பல பெயர்கள் மாற்றப்பட்டன. உச்சரிப்புப் பிரச்னையால் அவஸ்தைப்பட்ட அமெரிக்கர்கள்தான் இந்த அமைப்பை இராக்கிய அல் காயிதா என்று சுருக்கிச் சொன்னார்கள்.
எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று ஜனாப் ஜவாஹிரி லிகிதம் ஏதும் எழுதாதபடியால் அது அவ்வாறாகவே இன்றுவரை இருந்துவருகிறது.
இது இவ்வாறிருக்க, ஒசாமா பின் லேடன் மறைவுக்குப் பிறகு அத்தனை வீரியமுடன் செயல்படாதிருந்த அல் காயிதா, இன்றைக்கு அல் ஷபாப் மற்றும் இந்த ISISக்கு ஆதரவு சொல்லி வளர்த்து, ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பதன் தொடர்ச்சியாக உலகெங்குமே இவ்வாறான சிஷ்யகோடி அமைப்புகளை உருவாக்கத் திட்டம் தீட்டக்கூடும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் சரவண பவன் இருந்தாலும் அண்ணாச்சியா கல்லாவில் இருக்கிறார்? அந்த மாதிரிதான். பொறுப்புள்ள நபர்களைத் தேர்ந்தெடுத்து, பயிற்சியளித்து புதிதாக ஒரு பெயரிட்டு செயல்பட வைப்பது. ஐஎஸ்ஐ முத்திரை மாதிரி முதுகில் ஒரு அல் காயிதா முத்திரை.
ஏனெனில் முன்னர் சூடான், அதன்பிறகு ஆப்கனிஸ்தான் என்று அல் காயிதாவுக்கு உறுதியான ஒரு தளம் அமைந்த மாதிரி சம காலத்தில் ஓரிடம் இல்லை. உதிரிகளாகச் சிதறிப் போய்விடாதிருக்க, உள்ளூரிலேயே சிறு சிறு குழுக்களாக, வேறு வேறு பெயர்களில் அல் காயிதாவின் புதிய தலைமுறையை உருவாக்குவதில் லாபங்கள் அதிகம்.
ISISஇன் திடீர் எழுச்சியும் ஆக்ரோஷத் தாக்குதல்களும் மத்தியக் கிழக்கு தேசங்களின் நிம்மதியை, அமெரிக்காவைக் காட்டிலும் அதிகம் குலைத்துவிடுமென்று தோன்றுகிறது. உண்மையில் மிகவும் கவலைப்படத்தக்க சங்கதி இது.