சிறப்புக் கட்டுரைகள்

சுதேசிகளும் விதேசிகளும்

செய்திப்பிரிவு

கடந்த வாரம் கோவா மாநிலத்தில் பெனாலிம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேலியன் செல்வாவின் உறுப்பினர் பதவியை தகுதியிழப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் போர்ச்சுகல் நாட்டின் குடிமகன் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்ததுதான் அதன் பின்னணி. சட்டமன்ற (அ) நாடாளுமன்ற உறுப்பினர் இந்திய குடியுரிமைப் பெற்றவராக இருக்கவேண்டும். மற்ற நாட்டின் குடியுரிமையைப் பெற்றவர் பதவி வகிக்கத் தகுதியற்றவரென்று அரசியலமைப்பு சட்டத்தின் 102(d) மற்றும் 191(d) பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது. இதேபோல பா.ஜ.க.வைச் சேர்ந்த அல்தோனா தொகுதி உறுப்பினர் க்ளென் டிக்ளோவை போர்ச்சுகல் நாட்டு குடிமகன் என்று கூறி தகுதியிழப்பு செய்ய முயன்றும் உள்துறை அமைச்சகம் அவரது குடியுரிமை பற்றி எவ்வித அறிவிப்பும் செய்யவில்லையாதலால் அது தோல்வியுற்றது.

கோவா, போர்ச்சுகலின் காலனியாக இருந்தபோது அங்கு பிறப்பவர்களுக்கு போர்ச்சுகல் நாட்டின் குடிமகனாக இருப்பதற்கு உரிமையிருந்தது. இந்திய ராணுவ நடவடிக்கையால் 1961-ல் கோவா விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1987-ல் கோவா மாநில அந்தஸ்து பெற்றது. இந்தியாவின் 25-வது மாநிலமான பிறகும் கணிசமானவர்கள் போர்ச்சுகல் குடியுரிமையைப் பெற்று வசிக்கின்றனர். புதுச்சேரி விடுதலை பெற்ற பின்னரும் அங்கு பிரெஞ்சு குடியுரிமையுடன் பலர் வாழ்வதைப் போல கோவாவிலும் போர்ச்சுகல் குடியுரிமையுடன் வாழ்கின்றனர். இந்தியாவின் இணைப்புக்கு முன் அங்கு பிறந்தவர்கள் தங்களை போர்ச்சுகீசிய குடிமகன் என்று பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற்றால் அவர்களுக்கு இந்திய சட்டமன்ற / நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட தகுதியற்றவராகி விடுவர்.

இந்தியர்களில் பலர் மற்ற நாடுகளில் குடியேறி அந்நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். இந்தியரொருவர் குடியுரிமையைத் தாமாகவே துறந்துவிட்டால் இந்தியத் தேர்தல்களில் அவர்கள் வாக்களிக்கவோ (அ) போட்டியிடவோ முடியாது. பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பல லட்சம் மக்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். அச்சமயம் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தியாவின் குடியுரிமை வழங்குவதைப் பற்றி விவாதித்து, குடியுரிமை பற்றி அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 5 முதல் 9 வரையில் கூறப்பட்டது. இந்திய எல்லைக்குள் பிறந்தவர்கள் (அ) இந்தியாவில் பிறந்த பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகள் (அ) இந்திய அரசியலமைப்புச் சட்டம் வருவதற்கு முன்னால் 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் குடியேறியவர்களுக்கான விசேஷ பிரிவுகளும் உண்டு. மேலும் இந்தியக்குடியொருவர் வேறொரு நாட்டின் குடியுரிமையை தன்னிச்சையாகப் பெற்றால் அவரது இந்தியக் குடியுரிமை தானாகவே ரத்தாகிவிடும். நாடாளுமன்றம் குடியுரிமைச் சட்டத்தை 1955-ல் இயற்றியது. அதற்கு முன்னரே 1946-லிருந்து வெளிநாட்டவர் சட்டம் நடைமுறையிலிருந்தது.

இந்தியாவில் இயற்கைக் குடியுரிமை பெற்றவர்கள் மற்ற நாடுகளில் குடியேறி அந்நாட்டின் குடியுரிமை பெற்றிருந்தால் அவர்களுக்கு இந்தியாவில், தேர்தல் தவிர பல சட்ட உரிமைகள் முடக்கப்படுவதால் இரட்டைக் குடியுரிமை கொண்டு வரலாம் என்ற வாஜ்பாய் அரசின் முயற்சி (2003) பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கைவிடப்பட்டது.

மோனி குமார் சுப்பா

அசாம் மாநிலத்தில் தேஜ்பூர் தொகுதியி லிருந்து 1998-லிருந்து தொடர்ந்து மூன்று முறை நாடாளுமன்றத்துக்கு காங்கிரஸ் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோடிக்கணக்கில் சொத்துள்ள தொழிலதிபர் மோனி குமார் சுப்பா. அவர் 2009-ல் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானபோது, அவர் மீது புகார் ஒன்று கூறப்பட்டது. அவர் நேபாளத்தைச் சேர்ந்தவரென்றும், கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டதிலிருந்து தப்பிக்கவே அசாமில் தஞ்சம் புகுந்தாரென்றும் கூறப்பட்டது. தான் 1958-ல் அசாமில் பிறந்தவரென்றும், 1972 வரை காந்தி வித்யாலயாவில் பள்ளிப்படிப்பு படித்ததாகவும் தேர்தல் கமிஷனிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார் அவர். 1972-ல் அப்படியொரு பள்ளிக்கூடம் அவர் கூறிய கிராமத்தில் இல்லையென்றும் அவர் நேபாளி என்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உண்மைகளைக் கண்டறியும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. சாட்சியப் பற்றாக்குறை காரணமாக அவரது பின்னணி பற்றி சரியான தகவல் கிட்டவில்லையென்று கூறிவிட்டது. சுப்பா நேபாள கொலைக் குற்றவாளியா (அ) அசாம் தொழிலதிபரா என்று தெரியவருவதற்கு முன் அவரது மூன்றாவது நாடாளுமன்ற பதவிக் காலமும் 2014-ல் முடிந்துவிடும்.

இந்திய குடியுரிமை பெற்றவராயிருப்பினும் வேறொரு நாட்டுடன் பற்றோ (அ) விசுவாசமோ கொண்டிருந்தால் அந்நபரும் இந்திய சட்டமன்ற (அ) நாடாளுமன்றங்களில் உறுப்பினராகப் பதவி வகிக்க முடியாதென்று அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஹாஜா ஷெரீப்

1984 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹாஜா ஷெரீப் திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் துருக்கி நாட்டின் வர்த்தகத் தூதரானதால் அந்நாட்டு தேசியக் கொடியுடன் காரில் பவனி வந்து கொண்டிருந்தார். சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவரை தகுதியிழப்பு செய்ய மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் ஆர். உமாநாத் மற்றும் சில உறுப்பினர்களிடமிருந்தும் மனுக்களைப் பெற்ற அன்றைய ஆளுநர் அதை தேர்தல் கமிஷனின் முடிவுக்கு அனுப்பினார். மனுக்களை விசாரித்த தேர்தல் கமிஷன், வேற்றொரு நாட்டின் வர்த்தகத் தூதராக இருப்பதனால் அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவி வகிக்க முடியாதென்று கருத்து தெரிவித்ததின் பேரில் அவரது உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. அதை எதிர்த்து ஹாஜா ஷெரீப் தொடர்ந்த வழக்கை 1985-ல் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தேர்தல் கமிஷனின் முடிவை ஏற்று அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

துருக்கியும் இந்தியாவும் நேச நாடுகளென்றும் அவற்றுக்கிடையே போர் ஏதும் நடக்காதபோது துருக்கி நாட்டுடன் பற்று (அ) விசுவாசம் என்ற பேச்சுக்கே இடமில்லையென்றும் அவரது வக்கீல் வாதாடினார். போர் என்பது நேரடியாக இரு நாடுகளின் ராணுவம் மோதிக் கொள்வது மட்டுமல்ல, அரசியலின் வேற்று உபாயங்களின் தொடர்ச்சியே என்று உமாநாத் தரப்பில் வாதாடியதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வேறு நாட்டின் வர்த்தகத் தூதரொருவர் மன்ற உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் சட்டமன்றத்தில் எடுக்கக்கூடிய வர்த்தக சம்பந்தமான தகவல்களை அந்நாட்டுக்கு முன்னதாகவே கசியவிடும் அபாயமுள்ளதென்றும் கருத்து தெரிவித்தனர்.

இந்திய விடுதலைக்குப் பிறகு இத்துணைக் கண்டத்தின் அண்டைய நாடுகளிலிருந்து அகதிகளாகவும், சட்டவிரோத குடியேறிகளாகவும் பல லட்சம் பேர் குடிபுகுந்துள்ளனர். பர்மா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை பகுதிகளிலிருந்து வந்தவர்கள் குடிபுகுந்த மாநிலங்களிலெல்லாம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. அன்றைய கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (தற்பொழுது பங்களாதேஷ்) லட்சக்கணக்கானோரின் குடியேற்றத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டது அசாம் மாநிலமே. வந்தேறிகளை அவரவர் நாட்டுக்கே திருப்பியனுப்பக் கோரி அசாமில் போராட்டங்களும், இனக்கலவரங்களும் இன்றும் நடந்தவண்ணமாயுள்ளன.

அசாமியர்களது கோபத்தைத் தணிக்க மத்திய அரசு சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. குடியேறியவர்கள் லட்சக்கணக்கில் இருந்ததாலும், பல ஆண்டுகள் அசாமில் தங்கிவிட்டதனாலும் அவர்களைக் கண்டுபிடித்து, முன்னறிவிப்பு வழங்கி அதன் பின்னர் நாடுகடத்தும் முயற்சியாக 1983-ல் “சட்டவிரோதக் குடியேறிகள் (தீர்ப்பாயங்கள் மூலம் முடிவு செய்தல்) சட்டத்தை” இயற்றியது. மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்திலுள்ள நீதிபதிகளின் தலைமையில் பல தீர்ப்பாயங்கள் அசாமில் உருவாக்கப்பட்டன. பிரச்சினைகளைக் கிடப்பில் போடுவதற்கும், நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதற்கும் வேறுபாடு ஏதுமில்லாததனாலும் இப்பிரச்சினையை மத்திய அரசு தாமதப்படுத்தும் சூழ்ச்சி எனக்கூறி, அச்சட்டத்துக்கு எதிராக சர்பானந்த சோனோவால் என்பவர் வழக்குத் தொடுத்தார். வெளிநாட்டினரைக் கட்டுப்படுத்தும் சட்டம் 1946-லிருந்து நடைமுறையிலிருக்கும்போது அசாம் மாநிலத்துக்கு மட்டும் பொருந்தும்படியான ஒரு தனிச்சட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது அரசியலமைப்பு சட்டத்துக்கே விரோதமெனக் கூறி 2005-ல் உச்ச நீதிமன்றம் அச்சட்டத்தை ரத்து செய்தது.

தீர்ப்பின் சாராம்சத்தை தோற்கடிக்கும் வகையில் மத்திய அரசு 1946-ம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டத்தின்கீழ், உருவாக்கப்பட்ட 1964-ம் ஆண்டு வெளிநாட்டினர் (தீர்ப்பாயங்கள்) ஆணையைத் திருத்தி, 2006-ம் ஆண்டு வெளிநாட்டினர் (அசாமிற்கான தீர்ப்பாயங்கள்) ஆணையை உருவாக்கியது. மறுபடியும் சர்பானந்த சோனோவால் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். இரண்டாம் முறை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாகக் கண்டித்தது. 1946-ம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டத்தின்கீழ் மத்திய அரசுக்கு வெளிநாட்டினரை வெளியேற்றுவதற்கான கடுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும்போது, குடியேறிகளுக்கு வாய்ப்பு தரும் வண்ணம் தீர்ப்பாயங்களை உருவாக்கியிருப்பது பிரச்சினைகளை நீர்த்துப்போகச் செய்யுமென்று கூறி 2007-ல் புதிய ஆணையையும் ரத்து செய்தது. அதே சமயத்தில் அப்பாவி மக்களுக்கு அநீதி இழைக்காவண்ணம் முடிவெடுக்க குறைந்தபட்ச இயற்கை விதிகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டுமென்றும் கூறியது.

உண்மையான இந்தியக் குடிமகனை வெளியேற்ற இவ்விதிகளின் கீழ் உத்தரவிடப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து உயர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர இன்றைக்கும் வாய்ப்புகளுண்டு. 90களில் தமிழக சோதனைச்சாவடியொன்றில் அத்து மீறி சென்ற லாரியை மடக்கிய காவலர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்களென்று கூறி கிரிமினல் குற்றங்கள் தவிர, அவர்கள் மீது வெளிநாட்டவர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிலொருவர் ஈரோட்டிலேயே பிறந்து, பள்ளி மற்றும் பாலிடெக்னிக்கில் பயின்றவர். யாழ்ப்பாணத்தில் குருசடி வீதியைச் சேர்ந்தவரென்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டதால் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் தன் மீது நடவடிக்கையெடுத்ததை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருடைய ஆவணங்களைப் பரிசோதித்து மாவட்ட செஷன்ஸ் நீதிபதியை இறுதி முடிவெடுக்கும்படி உத்தரவிட்டது. அதனால் வழக்கு முடிந்தவுடன் இலங்கைக்கு அவர் நாடு கடத்தப்படுவது தடுக்கப்பட்டது.

சட்டவிரோத குடியேற்றத்துக்கும், அகதிகளாக தஞ்சம் புகுவதற்கும் வேறுபாடுகளுண்டு. அகதிகளாக தஞ்சமடைந்தோருக்கான பாதுகாப்புகள் பற்றி ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்கள் பலவுண்டு. தஞ்சமடைந்த அகதிகளை அவர்களது விருப்பத்துக்கு விரோதமாகவும், பலவந்தமாகவும் அவர்களது தாய்நாட்டுக்கு திருப்பியனுப்ப முடியாதென்று அகதிகள் பற்றிய சர்வதேச விதிகள் கூறுகின்றன. 90களில் விருப்பமற்ற இலங்கை அகதிகளை தாய்நாட்டுக்கு திருப்பியனுப்ப முயன்ற மத்திய அரசின் செயல்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவ்விதிகளைக் சுட்டிக்காட்டி தடை விதித்தது.

நளினி குழந்தையின் குடியுரிமை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான நளினியும், முருகனும் சிறையிலேயே திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு 1992-ல் ஒரு மகள் பிறந்தாள். செங்கல்பட்டில் பிறந்த ஹரித்ரா இந்தியக் குடிமகளாவாள். ஆனால் அவள் சிறையில் வளர முடியாததனால் தனது பாட்டியின் கண்காணிப்பில் இலங்கையில் வளர்ந்து வந்தாள். 2005-ம் ஆண்டு அவளுக்கு இந்தியாவுக்கு வர மூன்று மாதம் விசா வழங்கிய மத்திய அரசு, 2006-ல் விசா வழங்க மறுத்துவிட்டது. சிறுமி ஹரித்ராவுக்காக இலங்கை அரசிடமிருந்து அவளது பாட்டி கடவுச் சீட்டு பெற்றதனால் அவள் இந்தியக் குடியுரிமையை இழந்துவிட்டாளென்று வாதாடப்பட்டது. அதை எதிர்த்து நளினி முருகன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ததுடன் மீண்டும் அப்பெண்ணின் குடியுரிமைத் தகுதி பற்றி பரிசீலிக்க உத்தரவிட்டது. 6 வயது குழந்தைக்கு தனது இந்திய குடியுரிமையை விட்டுவிடப்போகிறோம் என்று தெரிய வாய்ப்பில்லையென்று தீர்ப்பில் கூறப்பட்டது.

குடிமகன்கள், குடியேறிகள் மற்றும் குடியுரிமைகள் பற்றிய சட்ட விவாதங்கள் இப்படியாக இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

SCROLL FOR NEXT