சிறப்புக் கட்டுரைகள்

காணாமல் போன இந்தியப் பகுதி

கே.என்.ராமசந்திரன்

இந்தியா, யூரேசியா பரப்பிலிருந்து பாதியளவு காணாமல் போய்விட்டது என்று சமீபகால ஆய்வுகள் காட்டுகின்றன. அதை பூமியின் பொருக்குக்குக் கீழேயுள்ள வெளியுறைப் படலம் விழுங்கியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கண்டங்கள் இடம்பெற்றுள்ள பூமிப் பொருக்குகளின் மிதப்புத்தன்மை அவ்வாறு வெளியுறைப் படலத்துக்குள் அழுந்திவிடும் அளவுக்குக் குறைவானது அல்ல என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்.

வெளியுறைப் படலம் நெகிழ்வுத் தன்மையுள்ள பாகு போன்ற பொருட்களால் ஆனது. அதன் மேல்பரப்பில் கண்டத் தகடுகள், பாலின் மேற்பரப்பில் மிதக்கும் ஆடையைப் போல மிதந்துகொண்டிருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் மிகக் குறைவான அளவிலேயே ஊடாட்டங்கள் நிகழ்வதாக இதுவரை பொதுவாக நம்பப்பட்டுவந்தது. ஆனால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்த ஊடாட்டம் தீவிரமானதாக இருப்ப தாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. கண்டத் தகடுகளிலிருந்து திடப் பகுதிகள் வெளியுறைப் படலத்தில் கரைந்துவிடுவதும், வெளியுறைப் படலத்திலிருந்து திடப் பகுதிகள் கண்டத் தகடுகளில் வந்து ஒட்டிக்கொள்வதும் மிகப் பரவலாக நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

மோதும் கண்டத் திட்டுகள்

சிகாகோ பல்கலைக்கழகத்தில் புவியியல் ஆய்வராக உள்ள டேவிட் ரெளலியின் ஆய்வுக் குழுவினர், இந்தியத் துணைக் கண்டம் அமைந்த கண்டத் தகடு யூரேசியா அமைந்துள்ள கண்டத் தகட்டுடன் மோதிக் கொண்டிருப்பதை ஆய்வு செய்கிறார்கள். அவை இன்றளவும் முட்டி மோதிக்கொண்டு இருக்கின்றன. அதன் காரணமாகவே இமயமலைப் பகுதியிலும் இந்துகுஷ் மலைத் தொடர் பகுதியிலும் சதா நிலநடுக்கங்கள் சிறிதும் பெரிதுமான அளவில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவை மோதியபோதுதான் இமயமலைத் தொடரும் பாமிர் பீடபூமியும் மேலே எழுந்தன.

மோதலுக்கு முன்பிருந்த தரைப் பரப்பின் அளவையும் மோதலுக்குப் பின்னரான தரைப் பரப்பின் அளவையும் கணக்கிட்டபோது, கொஞ்சம் பற்றாக்குறை இருப்பதாக வெளிப்பட்டது. இந்த இரு கண்டத் திட்டுகளும் கடந்த ஆறு கோடி ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டிருக்கின்றன. அதன் காரணமாக அவற்றின் தொடு விளிம்புகள் மடிந்து மேலெழும்பி, இமயமலைத் தொடர்களும் இந்துகுஷ் மலைத் தொடர்களும் உருவாயின. சிகாகோ ஆய்வர்கள் இரண்டு கண்டத் தகடுகளும் சந்திப்பதற்கு முன், அவற்றின் பரப்பளவுகளை நவீனக் கணித முறைகள் மூலம் கணித்தறிந்தார்கள். ஆனால், மோதலுக்குப் பின்னிருந்த அவற்றின் பரப்பளவு கணிசமாகக் குறைந்திருந்தது.

கடலில் கரைந்த நிலம்

மோதிய பரப்பில் இமயமலையாக மடிந்து சுருங்கிய பரப்பு, தென்கிழக்கு ஆசியாவாகப் பிய்ந்துபோன பரப்பு, கடந்த ஆறு கோடி ஆண்டுகளாக அந்தக் கண்டங்களின் வெளி விளிம்புகளிலிருந்து உதிர்ந்து, கடலில் கரைந்துபோன பரப்பு எல்லாவற்றையும் கழித்துப் பார்த்த பின்னரும் கணக்கு சரியாக வரவில்லை. ஆகவே, துண்டு விழுந்த பகுதி கடலில் கரைந்துபோயிருக்க வேண்டும் என ரெளலி குழுவினர் முடிவுகட்டினார்கள். ஆனாலும், இந்தியா மற்றும் யூரேசியாவின் நிலப் பரப்பில் கிட்டத்தட்ட பாதியளவு காணாமல் போனதை விளக்க முடியாமல் திகைத்தார்கள். அதன் விளைவாக, அவர்கள் ஓர் எதிர்பாராத முடிவை வெளியிட்டார்கள். காணாமல்போன நிலத்தை வெளியுறைப் படலம் கரைத்துக் குடித்துவிட்டது என்று கூறினார்கள். அது உருகி, பூமியின் வெளியுறைப் படலத்தில் கரைந்துபோயிருக்கலாம் என்று அவர்கள் கருதினார்கள். அது குழம்பாக மாறிச் சுற்றிவந்து, பின்னொரு காலத்தில் எரிமலைகள் மூலம் வெளிப்பட்டு, மீண் டும் கல்லாகவும் மண்ணாகவும் பூமிப் பரப்பில் பரவக்கூடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், கண்டங்களின் மேல் பொருக்கு அவ்வளவு எளிதாகப் பூமிக்குள் மூழ்கிவிட முடியாது. கடலடித் தரையின் அடியில் உள்ள அடர்வுமிக்க பொருக்கு வேண்டுமானால், வெளியுறைப் படலத்தில் ஓரளவு கரையக் கூடும். பல கோடி ஆண்டுகள் கழித்து அது மீண்டும் கல்லாகி, மண்ணாகிப் பூமியின் மேற்பரப்புக்கு மீண்டும் வரக்கூடும். கடலடித் தரைப் பொருக்கு தன்னைவிட அடர்த்தி குறைந்த கண்டப் பொருக்குக்குள் அமிழ்ந்து ஊடுருவும். தற்போதுகூட கலிபோர்னியாவின் கடற்கரைகளில் இத்தகைய அமிழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அங்கு தரை களிமண்ணைப் போன்ற நெகிழ்வும் கொழகொழப்பும் பெற்று வெளியுறைப் படலத்தில் கலக்கும்.

புவி வேதியியல் புதிர்

கண்டங்களின் மேற்பொருக்கு அதிக மிதப்புத் தன்மையைப் பெற்றிருப்பதன் காரணமாக, நீரில் மிதக்கும் பலகையை அழுத்தினால் அது மீண்டும் மேலே வந்து மிதப்பதைப் போல, மேற்பொருக்கும் அழுந்திய பிறகு மீண்டும் மேலே வந்துவிடுகிறது. இவ்வாறு மேற்பொருக்கு மிதப்பதாலும் அமிழ்வதாலும் அது நீரில் மிதக்கும் கட்டுமரத்தைப் போல மேலும் கீழுமாக அசைகிறது என்று விஞ்ஞானிகள் அனுமானிக்கிறார்கள். இந்த அனுமானத்தின் அடிப்படையில் சில புவியியற்பியல் மற்றும் புவி வேதியியல் புதிர்களுக்கு விடை காண முடியும். உதாரணமாக, எரிமலைகள் வெடிக்கும்போது வெளிப்படும் எரிமலைக் குழம்பில் சில சமயங்களில் காரீயம், யுரேனியம் போன்ற தனிமங்கள் வெளிப்படுகின்றன. அவை பூமியின் வெளியுறைப் படலத்தில் இடம்பெறாதவை. அவை பூமிப்பொருக்கில் மட்டுமே காணப்படுகின்றன.

இவ்வாறான கண்டுபிடிப்புகளிலிருந்து கண்டத் திட்டுகள் நிரந்தரமானவை அல்ல என்று ஊகிக்கத் தோன்றுகிறது. இந்தியக் கண்டத் திட்டும் ஆசியக் கண்டத் திட்டும் மோதி முட்டுவது இன்றளவும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம்பவம். கண்டத் திட்டுகளின் அடிப் பரப்பிலிருந்து கல்லும் மண்ணும் கரைந்து உருகி வெளியுறையில் கலப்பதும், வெளியுறையி லிருந்து மண் குழம்பு வெளிப்பட்டுக் கண்டத் திட்டுகளில் படிவதுமாக ஒரு சுழல் நடந்துகொண்டேயிருக்கிறது!

- கே.என். ராமசந்திரன்,

அறிவியல் கட்டுரையாளர்.

SCROLL FOR NEXT