சிறப்புக் கட்டுரைகள்

ஐ.எஸ். அமைப்பு: ஊடுருவும் அந்நியர்கள்

தாமஸ் எல்.ஃப்ரைட்மேன்

ஊடுருவும் தாவர இனங்கள் உள்நாட்டு இனங்களை அழித்துவிடும்; ஐ.எஸ்ஸுக்குப் பொருத்தமான உவமை இது.

இராக் நாட்டின் உயரதிகாரி ஒருவர் இந்தத் தகவலை என்னிடம் தெரிவித்தார்: “ஐ.எஸ். என்று அழைக்கப்படும் அமைப்பைச் சேர்ந்த சன்னி ஜிகாத் போராளிகள், மோசுல் நகரைக் கடந்த கோடை காலத்தில் கைப்பற்றினர். உடனே, வீடுவீடாகச் சென்று அங்கே வசிப்பவர்கள் யார் என்று கேட்டனர். கிறிஸ்தவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு வெளியே ‘நஸ்ஸாரா’ என்று எழுதிவைத்தனர். கிறிஸ்தவர்களைக் குறிக்கும் அந்த அரபிச் சொல் இப்போது அதிகமாக வழக்கத்தில் இல்லை. ஷியா முஸ்லிம்களின் வீடுகளுக்கு வெளியே ‘ரஃபீதா’ என்று எழுதினர். அப்படியென்றால், ‘நிராகரிப்பவர்கள்’ என்று பொருள். இறைத் தூதர் முகம்மது நபிக்குப் பிறகு, யார் கலீஃபாவாக வேண்டும் என்ற கேள்விக்கு, சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் வரக் கூடாது என்று நிராகரித்ததால் அவர்களுக்கு அந்தப் பெயர். சவூதி அரேபியாவைச் சேர்ந்த வஹாபி பிரிவினர்தான் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள், இராக்கியர்களான எங்களுக்கு இது பரிச்சயமில்லை” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

அவருடைய இந்தக் கூற்று எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஐ.எஸ். என்ற இயக்கம், பிராணிகள், தாவரங்கள் இடையே ஊடுருவும் ஒரு புது இனத்தைப் போல, இராக்கிய சமுதாயத்துக்கு இடையே ஊடுருவுவதைப் போலத் தோன்றியது. இராக் மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளுக்குமே இந்த இயக்கம் அந்நியமானது. இதற்கு முன்னால் இந்தப் பகுதியில் இது இங்கே வேர்விட்டதில்லை.

ஊடுருவும் தாவரம்

புவி அரசியலிலும் உலகமயமாக்கலிலும் ஏற்பட்டுவரும் மாற்றங்களை உலகத்தினர் அறிந்துகொள்வது நல்லது. அந்த வகையில் இது ஒரு புது அனுபவம். தாவர உலகில் வேறிடத்திலிருந்து படையெடுக்கும் ஒரு இனம், உள்நாட்டுத் தாவரத்தை அழிப்பதற்கு முன்னால், புதிய கட்டிடக் கட்டுமானப் பகுதிகளிலும் சாலை சந்திப்புகளிலும்தான் முதலில் வளரும். அப்படியே பரவி, உள்நாட்டுத் தாவரத்துக்குக் கிடைக்கும் தண்ணீர், இதர சத்துகளை விழுங்கி, நாட்டுத் தாவரங்களை வளர விடாமல் அழித்துவிடும். இப்படிப்பட்ட படையெடுப்புகளைத் தாங்கிக்கொள்ளும் இயல்பும் நாட்டுத் தாவரங்களுக்கு இயலாமல் போய்விடும்; கடைசியில், ஊடுருவிய தாவரம் எல்லா இடங்களிலும் வளர்ந்து உள்நாட்டுத் தாவரங்களைப் போக்கடித்துவிடும் என்று தேசிய தாவரவியல் மன்றம் தெரிவிக்கிறது.

ஐ.எஸ். அமைப்பைப் புரிந்துகொள்ள இதைவிட வேறு சிறந்த உதாரணம் எனக்குத் தெரியவில்லை. அது ஒரு அமைப்பு என்பதைவிடக் கூட்டணி என்பதே பொருத்தம். அதன் ஒரு பகுதி, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சன்னி பிரிவு ஜிகாதிகளைக் கொண்டது. செசன்யா, லிபியா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் இருக்கின்றனர். மறு பகுதி உள்நாட்டவர்களைக் கொண்டது. எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் ஐ.எஸ். வேகமாகப் பரவிவருவதற்கு முக்கிய காரணம் இராக், சிரியா ஆகிய இரு நாடுகளிலும் சன்னி சமூகம் கலங்கி நிற்கிறது. எனவே இராக், சிரிய நாடுகளைச் சேர்ந்த மதச்சார்பற்ற பழங்குடிகளும், பாத் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரிகளும் அவர்களுடன் சேர்ந்துவிட்டனர். இராக்கிலும் சிரியாவிலும் இப்போது சரியான நிர்வாகம் இல்லை என்ற அதிருப்தியில் பலர் ஐ.எஸ். அமைப்புடன் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

செல்வாக்கு பெற்றது எப்படி?

இப்படி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்நாட்டவர்களும் சேர்ந்து, இராக்கிலும் சிரியாவிலும் உள்ள பன்மைச் சமூகங்களுக்கு நெருக்குதலை ஏற்படுத்தி, அவர்களுக்கிடையே நிலவும் கலாச்சார வேற்றுமைகளை வெட்டி, அனைவரையும் ஒரே மதக் குழுவினராக்க முயல்கின்றனர். ஐ.எஸ். எப்படி இவ்வளவு எளிதாக செல்வாக்கு பெற்றது என்பதை ஒரு உதாரணத்திலிருந்து பார்ப்போம்.

மோசுல் நகரில் உள்ள சன்னி பிரிவைச் சேர்ந்த அவருக்கு வயது 50. அவரை முதலில் ஈரானுக்கு எதிராக இராக் நடத்திய 8 ஆண்டுகள் போரில் ஈடுபடுத்தினார்கள். அந்தப் போர் 1988-ல் முடிந்தது. அதற்குப் பிறகு குவைத்தை சதாம் உசைன் ஆக்கிரமித்தபோது மூண்ட பாரசீக வளைகுடாப் போரில் ஈடுபடுத்தப்பட்டார். அதற்குப் பிறகு, ஐ.நா. சபை விதித்த பொருளாதாரத் தடையால், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார். அடுத்ததாக, அமெரிக்கா இராக்கை ஆக்கிரமித்தபோது அதைவிடக் கடுமையான இன்னல்களுக்கு ஆளானார். எல்லாத் துயரங்களையும் தாங்கிக்கொண்டார். அதன் பிறகு, நூரி கமால் அல்-மாலிகி தலைமையில் பாக்தாதில் ஷியா பிரிவினரின் ஆட்சி அமைந்தது. அது ஊழல் மிக்கதாகவும் கொடூரமானதாகவும் ஈரானுக்குச் சார்பாகவும் செயல்பட்டுவருகிறது. அதே சமயம், சன்னிகளை ஏழைகளாகவும் அதிகாரமற்றவர்களாகவும் வைத்திருக்க முயல்கிறது. இதுதான் ஐ.எஸ். அமைப்பு ஆதரவைப் பெருக்கிக்கொள்ள இராக்கை உற்ற களமாக்கியிருக்கிறது.

ஊடுருவும் பயிர்களை எப்படிச் சமாளிப்பது? முதலில் களைக்கொல்லிகளைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் (அதிபர் ஒபாமாவின் வான் தாக்குதல் களைக்கொல்லி). உள்நாட்டுப் பயிர்களைப் பாதுகாத்து, வலுப்படுத்த வேண்டும். (ஷியாக்கள், சன்னிகள், குர்துகளைக் கொண்ட ஐக்கிய தேசிய அரசு இராக்கில் ஏற்பட வேண்டும் என்று ஒபாமா முயற்சி செய்கிறார்). பொதுவாகச் சொல்வதென்றால், இராக்கிலும் ஆப்கானிஸ் தானிலும் நாம் களைக்கொல்லிகளுக்கு (துப்பாக்கிகள், ராணுவப் பயிற்சி) நிறைய செலவழித்துவிட்டோம், ஊடுருவும் பயிர்களுக்கு இடமில்லாதபடி உள்நாட்டுப் பயிரை வலுப்படுத்த (ஊழலற்ற, நேர்மையான அரசு) தவறிவிட்டோம். அதாவது, உள்நாட்டுப் பயிர்களையும் சேர்த்து அழித்துவிட்டோம்.

செய்ய வேண்டியது என்ன?

இராக்கிய அரசிடம் நிதிவளம் இப்போது நிரம்பி வழிகிறது. இராக்கில் நாள் முழுவதும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கச் செய்ய வேண்டும்; வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட வேண்டும்; தரமான பள்ளிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்; மக்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்; சமூகத்தின் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர் என்றாலும், எந்த இனத்தவர் என்றாலும், எந்த மதத்தவர் என்றாலும் அவர்கள் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும் அவர்களுடைய உரிமைகள் மதிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் உள்நாட்டுப் பயிர்கள் தானாக வலுப்படும்; ஊடுருவும் பயிர்களுக்கு வளர இடம் கிடைக்காது.

“இராக்கிய அரசின் நிர்வாகக் கோளாறு காரணமாகவே, மக்களில் பலர் ஐ.எஸ்ஸுக்கு ஆதரவாகத் திரும்பினர், ஷியாக்கள் ஆதிக்கம் மிகுந்த அந்த அரசைவிட ஐ.எஸ். குறைந்த அளவே தீங்கானது என்று நினைத்தனர்” என்கிறார் சாரா சேயஸ். இவர் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க அரசின் ஆலோசகராகச் செயல்பட்டார்.

அமெரிக்கர்களாகிய நாம் எப்போதுமே ராணுவப் பயிற்சியையும் படைபலத்தையும் பெரிதாக நினைத்துக்கொண்டு, அரபு மக்களும் ஆப்கானியர் களும் விரும்புவது கண்ணியமான, நியாயமான நிர்வாகத்தை என்பதைப் புரிந்துகொள்ளாமல் கோட்டைவிடுகிறோம். நியாயமான நிர்வாகத்தை அளிக்கவில்லையென்றால், நாட்டுக்காகப் போராடும் மக்கள் உருவாக முடியாது. போரிடும் மனமும் துணிவும் இல்லாத மக்களுக்கு எவ்வளவு பயிற்சி கொடுத்தாலும் வீண்தான். இதை எந்த ராணுவத் தளபதியிடமும் தோட்டக்காரரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

- © தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

SCROLL FOR NEXT