ஃப் ராங்ஃபர்ட் புத்தகச் சந்தை, பதிப்பாளர்களின் மெக்காவாக அறியப்படுவது. ஆண்டுக்கொரு முறை அங்கு செல்வது உலகப் பதிப்பாளர்களுக்குப் பொருள் பொதிந்த ஒரு சடங்கு. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பதிப்பாளர்கள், புத்தக விநியோகிப்பாளர்கள், எழுத்தாளர்கள், அச்சகப் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், திரைப்படத் துறையினர் என நூல்கள் தொடர்பான பலதரப்பட்டவர்களும் கலந்து கொள்கிறார்கள். சுமார் 7,300 நூல் அரங்குகள், 12 கால்பந்தாட்ட மைதானங்கள் அளவு அரங்கம் அமைக்கப்படுகின்றன. உள்ளே பயணிக்க இலவசப் பேருந்துகளும் ஏறும் படிகளும் நகரும் பாதைகளும் உண்டு. சுமார் மூன்று லட்சம் பேர் வருகைதருகிறார்கள். ஆனால், புத்தக விற்பனை கிடையாது. தொழில்சார் பரிவர்த்தனைகளுக்கான சந்தை இது. பதிப்புலகச் செய்திகளைச் சேகரிக்க உலகெங்குமிருந்து சுமார் 10,000 பத்திரிகையாளர்கள் வருகை தருகிறார்கள்.
ஆயிரம் ஆண்டு மரபு
இந்தச் சந்தையின் பூர்வீகம் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்குகிறது. 12-ம் நூற்றாண்டில் கைப்பட எழுதப்பட்ட நூல்களின் பரிவர்த்தனை ஃப்ராங்ஃபர்ட்டில் நடந்திருப்பதற்கான சான்று இருக்கிறது. ஜோனஸ் குட்டன்பர்க் என்ற ஜெர்மானியக் கொல்லர் 1439-ம் ஆண்டு அச்சுக்கோக்கும் முறைமையை உருவாக்கிய பின்னர், அச்சு நூல்களின் சந்தையாக ஃப்ராங்ஃபர்ட் ஊக்கம் பெற்றது. இன்றுவரை தொடர்ந்துவரும் இந்தப் புத்தகச் சந்தை மரபு, சில காலங்களில் செழித்தோங்கியது, சில காலகட்டங்களில் நலம் குன்றித் தத்தளித்தது. போர்க் காலங்களில் தடைப்பட்டதும் உண்டு.
நவீன ஃப்ராங்ஃபர்ட் புத்தகச் சந்தையின் வரலாறு இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் 1948-ல் தொடங்குகிறது. இந்தச் சந்தையை ஜெர்மானியப் பதிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஃப்ராங்ஃபர்ட் புத்தகச் சந்தை நிறுவனம் செயல்படுத்திவருகிறது.
ஃப்ராங்ஃபர்ட்டில் என்ன நடக்கிறது?
மொழிபெயர்ப்பு உரிமைப் பரிமாற்றம், விநியோக உரிமைகள், அச்சகர் - பதிப்பாளர் சந்திப்பு, நூல்களுக்குத் திரைப்பட உரிமை பெறுதல், பழம்பதிப்புகளின் கண்காட்சி, மின்நூல்களுக்கு உரிமை என அனைத்தும் இந்தச் சந்தையில் நடக்கும். சுமார் 50,000 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இது நீங்கலாக, நூற்றுக் கணக்கான நிகழ்வுகள்: எழுத்தாளர்கள் சந்திப்பு, மென்பொருள் அறிமுகம், பதிப்புத் துறை, கல்வி தொடர்பான மாநாடுகள். மாலையில் பல விருந்துகளும் நடக்கும். சந்தையின் உள்ளேயே சிறிய, பெரிய உணவகங்கள், காபிக் கடைகள், மதுபானக் கடைகள் உண்டு.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் ஒரு புதன்கிழமை தொடங்கி ஞாயிறு அன்று புத்தகச் சந்தை முடிவடைகிறது. ஐந்து நாட்களில் புதன், வியாழன், வெள்ளி முழுவதுமாகத் தொழில்சார் பணிகள். சனியன்று அனுமதிக் கட்டணம் குறைக்கப்படு கிறது. பார்வையாளர் சிலர் வருவதுண்டு. முன்திட்டமிடாத சந்திப்புகளும் நடக்கும். ஞாயிறு முழுவதுமாகப் பார்வையாளர் நாள். பார்வைக்கு வைத்திருக்கும் புத்தகங்களை விற்பனை செய்ய அன்று மட்டும் அனுமதி உண்டு.
புத்தகச் சந்தை காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6:30 மணிக்கு முடிவடைகிறது. ஒவ்வொரு சந்திப்பும் 30 நிமிடங்கள். அக்டோபரில் நடக்கும் சந்திப்புகளுக்கு ஜூன் மாதமே மின்னஞ்சல் வழி நேரம் குறிக்கும் பணி துவங்கிவிடுகிறது. நாளொன்றுக்குச் சுமார் 15 சந்திப்புகள். ஒவ்வொரு சந்திப்பையும் நேர விரயமின்றி முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முன்தயாரிப்பு அவசியம்.
பதிப்பாளர்களுக்கு உதவும் இரண்டு திட்டங்கள்
1998-ல் ஃப்ராங்ஃபர்ட் புத்தக நிறுவனம் தனது பொன்விழாவைக் கொண்டாடிற்று. அந்த ஆண்டு ‘ஃப்ராங்ஃபர்ட் புக்ஃபேர் ஃபெலொஷிப் புரோகிராம்’ என்ற புதிய பயிற்சித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டு அந்தத் திட்டத்தின் 15-ம் ஆண்டு. இதுவரை 48 நாடுகளைச் சேர்ந்த 270-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். 2007-ல் இந்தத் திட்டத்தில் பங்குபெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 18 இளம் பதிப்பாளர்களை உலக நாடுகளிலிருந்து தேர்வுசெய்கின்றனர். அவர்களை ஃப்ராங்ஃபர்ட்டுக்கு அழைத்து ஜெர்மனியின் பல நகரங்களில் பரந்திருக்கும் பதிப்பாளர்களைச் சந்திக்க 10 நாள் பயணமாக அழைத்துச்செல்கின்றனர். இந்தத் திட்டம் ஃப்ராங்ஃபர்ட் புத்தகச் சந்தைக்கு முன்னர் துவங்குகிறது. பயணத்துக்குப் பின்னர், இவர்களைப் புத்தகச் சந்தைக்கு அழைத்துவந்து அதன் செயல்முறைகளை அறிமுகப்படுத்துகின்றனர். இதில் பங்கேற்கும் பதிப்பாளருக்கு இரண்டு முக்கியப் பயன்கள் விளைகின்றன. உலகப் பதிப்புச் சூழல் பற்றிப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும், ஜெர்மானியச் சந்தையை மதிப்பிடுவதன் வழியும் கிடைக்கின்றன. இரண்டு வாரங்கள் உடன் பயணிக்கும் பதிப்பாளர்களுடன் ஏற்படும் நட்பும் பிணைப்பும் பலவற்றைக் கற்கவும் செயல்படவும் துணைசெய்கிறது.
இதே போன்ற இன்னொரு திட்டம் பதிப்பாளர் அழைப்புத் திட்டம் (இன்விடேஷன் புரோகிராம்). இதில் வளரும் உலக நாடுகளின் பதிப்பாளர்கள் அழைக்கப்பட்டு, சிறிது பயிற்சிக்குப் பின்னர், அவர்களுக்கு அன்பளிப்பாக ஒரு அரங்கு வழங்கப்படுகிறது. சந்தையில் பங்கேற்பில்லாத நாடுகளுக்கு முன்னுரிமை. எளிய பதிப்பாளர்கள் ஃப்ராங்ஃபர்ட் சந்தையில் கால்பதிக்க அரிய வாய்ப்பாக இது அமைகிறது.
புதியன சாதிக்க…
தமிழ்ப் பதிப்பாளர்கள் புதியனவற்றைச் சாதிக்க விரும்பினால், உலகப் புத்தகச் சந்தைகளில் பங்கேற்பது அவசியம். தனியாகவோ, குழுவாகவோ செல்லலாம். சிறப்புத் திட்டங்கள் வழியாகவும் செல்லலாம். தற்போது தமிழகத்திலிருந்து சில அச்சகப் பிரதிநிதிகளும், இலக்கியம், கல்வி, குழந்தை இலக்கியம் மற்றும் ஆன்மிக நூல்களின் பதிப்பாளர்கள் சிலரும் உலகப் புத்தகச் சந்தைகளில் கலந்துகொள்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும்.
இந்த ஆண்டு பதிப்பாளர் பயிற்சித் திட்டத்தில் தேர்வுபெற்றவர்கள், நட்சத்திர மதிப்பு கொண்ட, மூத்த ஜெர்மானியப் பதிப்பாளர் ஒருவரைச் சந்தித்தனர். அவர் வழங்கிய அறிவுரை: வாசியுங்கள்! தமிழ்ப் பதிப்புலகின் சாபக்கேடு, அநேக பதிப்பாளர்கள் வாசகர் அல்ல என்பதுதானோ?
கண்ணன், பதிப்பாளர் - தொடர்புக்கு: kannan31@gmail.com