விக்கிபீடியா வருவதற்கு முன்பு தமிழில் விக்கிபீடியாவின் இடத்தில் இருந்தது மணிமே கலைப் பிரசுரத்தின் வெளியீடுகள். அந்தப் பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவரும் பிரபல எழுத்தாளருமான லேனா தமிழ்வாணனுடன் ஒரு மின்னல் வேகப் பேட்டி.
இணைய யுகத்தில் மணிமேகலைப் பிரசுரம்?
எங்கள் பதிப்பக நூல்கள் அனைத் தும் இணையதளத்தின் வழியாகப் பெறுவ தற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். எங்கள் இணையதளத்தின் வழியாக மட்டுமின்றி, பிற இணையதளங்களின் வழியாகவும் எங்கள் நூல்களைச் சந்தைப்படுத்தி, உலகெங்கிலும் கிடைக்கும்படி செய்துள்ளோம். விரைவில், எனது ‘1000 ஒரு பக்கக் கட்டுரைகள்’, ‘மாணவர்களுக்கான நேர நிர்வாகம்’ ஆகியவற்றை ஒலி நூல்களாக வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டுவருகிறோம்.
உங்களின் ‘எப்படி?’ வரிசை புத்தகங்கள் விமர்சனத்துக்கு உள்ளாயின அல்லவா?
எந்த ஒரு கலையையும் புத்தகத்தின் வழியாக மட்டுமே கற்றுக்கொள்ள முடியாது. அப்படிக் கற்றுக்கொள்ளலாம் என்றால், ஆசிரியர்களின் தேவையே இல்லாமல் போயிருக்கும். புத்தகம், அடிப்படையான தூண்டுதலைத் தரும். அதைப் பயன்படுத்தி, அடுத்தடுத்த நிலைக்கு வாசகர்கள் தங்களை வளர்த்தெடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் புரிதலோடு எழுதப்பட்ட எனது நூல்களை வாசித்த பலரும் அடுத்த கட்ட வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள்.
புதிய எழுத்தாளர் உங்கள் பிரசுரத்தில் புத்தகம் வெளியிடுவற்கு அடிப் படையான அளவுகோல்கள் என்ன?
எனது 39 ஆண்டுகால பத்திரிகை அனுபவத்தில், ஒரு பக்கத்தைப் படிக்கும்போதே இது என்ன வகையான படைப்பு என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடியும். எங்கள் பதிப்பகத்தின் ‘புலவர் குழு’ முழுமையாய்ப் படித்துவிட்டுப் பரிந்துரைக்கும் படைப்புகளை மட்டுமே பதிப்பிக்கிறோம். தனிமனித சாடல், அமைப்புகளை வசைபாடுவது போன்ற படைப்புகளை நாங்கள் எப்போதும் வெளியிடுவதேயில்லை.
தீவிர எழுத்தாளர்களின் புத்தகங்களை நீங்கள் வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?
வெகுஜன ரசனையோடும் வாசிப்பு சுவாரசியத்தோடும் இருக்கிற நூல்களை மட்டுமே நாங்கள் வெளியிடுகிறோம். தனது மேதாவித்தனத்தைக் காட்டி, பாமர வாசகனை மிரட்டும் எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதில்லை என்கிற எனது தந்தையாரின் அடியொற்றியே எங்கள் பதிப்புப் பயணமும் தொடர்கிறது.
அடுத்த திட்டங்கள்?
இதுவரை 2,600 தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ளோம். அதில், 1,000 புத்தகங்கள் இளைய-புதிய எழுத் தாளர்களின் முதல் நூல்கள் என்பது குறிப்பிடத் தக்கது. புதிதாக எழுத விரும்புபவர்களுக்குப் பயிற்சிப் பட்டறைகள் நடத்த வேண்டுமென்ற எண்ணம் உள்ளது. பலரையும் எழுதுவதற்கு ஊக்க
மளிப்பதோடு, அவற்றைத் தரமான வெளியீடுகளாகக் கொண்டுவர வேண்டு மென்பதே அடுத்தடுத்த திட்டங்கள்.