சிறப்புக் கட்டுரைகள்

தவழ்ந்தாய் வாழி தாமிரபரணி: சங்குமுகத்தில் சங்கமம்

டி.எல்.சஞ்சீவி குமார்

நதி கடலுடன் சங்கமிப்பதை, மணப்பெண் புகுந்த வீட்டுக்குச் செல்வதுடன் ஒப்பிடுவார் கள். ஒப்பீடுகளை எல்லாம் தாண்டி ஒரு நதி கடலுடன் கலப்பது இயற்கையானது.நதியின் நன்னீர் கடலில் கலப்பதற்கும் பருவ மழைக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக் கின்றன. அறிவியல் பூர்வமாக அது ஒரு நீர்ச்சுழற்சி. கடலில் கலக்கும் நதியின் நீர் ஆவியாகி, மழையாக பொழிந்து மீண்டும் நதியாக பிறக்கிறது. இயற்கையின் இனிய சங்கிலித் தொடர் இது. ஆகவே, ‘நதி நீர் விணாகக் கடலில் கலக்கிறது’ என்று இனியும் சொல்ல வேண்டாம்.

காயல்களின் கதை

தாமிரபரணி ஆத்தூர், முக்காணி, சேந்த பூமங்கலம் வழியாக புன்னைக்காயலுக்குச் சென்று அங்கு கடலுடன் சங்கமிக்கிறது. பொதிகை மலை உச்சியில் தொடங்கிய நமது பயணத்தில் இதோ தாமிரபரணியின் கடைப்பகுதிக்கு வந்து விட்டோம். தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை யில் சுமார் 18-வது கி.மீட்டரில் ஆத்தூரிலிருந்து உள்ளடங்கி இருக்கிறது புன்னைக்காயல். ஆனால், நதி சங்கமிக்கும் சங்குமுகம் பகுதிக்கு செல்ல பழையகாயலுக்குச் சென்று, அங்கிருந்து படகில் செல்ல வேண்டும்.

மிக சிறிய மீனவக் கிராமம் பழைய காயல். உடைந்த கட்டு மரப்படகில் கடற்கரை தண்ணீரில் துடுப்பு வழித்து விளையாடிக்கொண் டிருக்கிறார்கள் சிறுவர்கள். இந்தப் பகுதி யில் காயல்பட்டினம், புன்னைக்காயல், பழைய காயல், மஞ்சள் நீர்க்காயல் என நான்கு ‘காயல்’-கள் இருக்கின்றன. இவை எல்லாம் ஒருகாலத்தில் பெரும் வணிக நகரங்கள். இந்தக் காயல்களில் கணிசமான அளவு கத்தோலிக்க கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் வசிக்கிறார்கள்.

9-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற் றாண்டு வரை முத்து வணிகத்துக்காக வந்த அரேபியர்கள் இங்கேயே வசிக்கத் தொடங் கினார்கள். முத்துக்குளித்தல் தொழிலில் நிலவிய கடும் போட்டியை சமாளிப்பதற்கும் கடல் கொள்ளையர்களிடம் இருந்து தங்களை காத்துக்கொள்வதற்கும் வலிமையான கடற் படையைக் கொண்டிருந்த போர்ச்சுகீசியர்களின் உதவியை நாடினார்கள் பரதவர்கள். இதன் நீட்சியாக கணிசமானோர் கத்தோலிக்க சம யத்தை தழுவினார்கள். ஒருகட்டத்தில் போர்ச்சு கீசியர்களின் வசமிருந்து இந்தப் பகுதி மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. தொடர்ந்து விஜய நகரம், முகம்மதியர், போர்ச்சுக் கீசியர் என்று ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. கடைசியாக, முத்துவளம் எல்லாம் சுரண்டப்பட்ட பின்பு ‘காயல்கள்’ கைவிடப்பட்டு, தமது முக்கியத்துவத்தை இழந்தன.

அலையாத்தி காடுகள்

பழையகாயலின் கடற் கரையிலிருந்து கடலுக்குள் சுமார் 4 கி.மீ. சென்றால் தாமிர பரணி நதி, கடலுடன் சங்க மிக்கும் பகுதியான சங்குமுகத்தை பார்க்க முடியும்.உதவிக்கு வந்தார் கடலோடி ராஜேந்திரன். அலையாத்தி காடுகளால் சூழந்து வித்தியாசமாக காட்சியளிக்கிறது பழையக்காயல் கடற்கரை. ‘காயல்’ என்றால் கழிமுகம். நதிகொண்டு வந்து சேர்ந்த வளமான வண்டலில் நன்னீரும் உவர் நீரும் உறவாடி செழிப்பான உயிரி னங்களை உருவாக்கும் இடம் இது. அப்படி உருவானவைதான் அலையாத்திக்காடுகள். இவை கடல் அலைகளின் சீற்றத்தை ஆற்றுப் படுத்தி, நம் வாழ்விடங்களை காக்கின்றன. இந்தப் பகுதி மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய காப்பகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கரையிலிருந்து கட்டுமரப் படகைக் கிளப்பினார் ராஜேந்திரன்.

கடல் சில இடங்களில் ஆழம் குறைவாகவும் சில இடங்களில் ஆழமாகவும் காணப்படுகிறது.

சமயங்களில் பழையக்காயலிலிருந்து புன்னைக்காயலுக்கு கடலில் நடந்தே வந்து மீன் பிடிப்போம் என்றார் ராஜேந்திரன். இருபக்கமும் அலையாத்திக்காடுகள், பல்வேறு கடற்பறவை கள் என ரம்மியமாக காட்சியளிக்கிறது தாமிரபரணியின் கழிமுகம். படகுடன் போட்டி போட்டுக்கொண்டு வெள்ளி நிறத்தில் ஏராளமாக துள்ளி வருகின்றன மணலை மீன்கள்.

தண்ணீரை உறிஞ்சும் மேகங்கள்

தாமிரபரணியில் வெள்ளக் காலங்களில் வேகமாக பெருக்கெடுக்கும் நதியின் நீர், கடலைக் கிழித்துக்கொண்டு தனித்த நீரோட்ட மாக இலங்கை தீவின் பாதி தொலைவில் கடலில் இருக்கும் சுமார் 1300 மீட்டர் ஆழ முள்ள பள்ளத்தாக்கு வரை பாய்கிறது. வெள் ளக்காலங்களில் பச்சை நிறத்திலான அந்த நீரோட்டத்தை கடலின் நீல நிறப்பரப்பில் தனித்து காண முடியும் என்கிறார்கள் கடலோடிகள். பெரும்பாலும் இதுபோன்ற நன்னீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்துதான் மேகங்கள் அதிகமான தண்ணீரை உறிஞ்சுகின்றன. சிலசமயங்களில் வானத்திலிருந்து உருவாகும் சூறைக்காற்று தண்ணீரை அப்படியே சுருட்டிக்கொண்டு வானத் துக்கு உறிஞ்சி செல்வதை இங்குள்ள கடலோடி கள் பார்த்திருக்கிறார்கள்.

“பொதுவாக நதியின் நீரோட்டம் கடலின் மேற்பரப்பில் அல்லாமல் சுமார் 5 மீட்டர் கீழ் பரப்பில் பயணிக்கும். கடலில் சுமார் 200 மீட்டர் ஆழம் வரை வளரும் மீன் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுக்கு ஆதாரமே இந்த நன்னீர்தான். உவர் நீருடன் நன்னீர் கலப்பதால் தான் லட்சக்கணக்கான நுண்ணுயிர்கள் பெருகி கடலின் உயிர்ச்சூழலை சமநிலையில் வைத்திருக்கின்றன.” என்கிறார் கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு.

நதிக்கு நன்றிக்கடன்

கிட்டத்தட்ட கடலை நெருங்கிவிட்டோம். சங்குமுகத்தில் கடல் பழுப்பும் பச்சையும் கலந்து சற்றே நிறம் மாறி காட்சியளிக்கிறது. இங்கே தாமிரபரணி மூன்று கரங்களாக பிரிந்து கடலை தழுவுகிறாள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதுபோல கடல் அலைகள் ஓங்கும்போது நதியலைகள் பின்வாங்குகின்றன. நதியலைகள் ஓங்கும்போது கடல் அலைகள் உள்வாங்கின்றன. நதிக்கும் கடலுக்கும் இருக்கும் பரஸ்பர புரிதல் உறவு இது. சின்ன சின்னதாய் மணல் திட்டுகள் இருக்கின்றன. அவற்றில் கூட்டமாக ஓய்வெடுக்கின்றன பறவைகள். இங்கிருக்கும் சிறு தீவில் சிறு பிள்ளையார் கோயில் இருக்கிறது. இன்னொரு தீவில் அந்தோணியார் ஆலயம் இருக்கிறது. சங்குமுகத்தில் மக்கள் மலர் தூவி வழிபடுகிறார்கள். காலமெல்லாம் தங்களை வாழ்விக்கும் தாமிரபரணி தாய்க்கு செய்யும் நன்றிக்கடன்.

SCROLL FOR NEXT