சிறப்புக் கட்டுரைகள்

நோ ஸ்டாண்டீ – மாயாண்டி

செய்திப்பிரிவு

‘பஸ் தினம்’ என்று பேருந்துகளின் கூரை மேல் களிநடனம் புரியும் மாணவர்களின் புகைப்படங்கள் தினசரி வருகின்றன. இதை எதிர்த்துப் போடப்பட்ட பொதுநல வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்தவில்லை. புளி மூட்டைகள்போல தொங்கிச் செல்லும் பயணிகளின் அவல நிலையைக் களைய பேருந்துகளின் சேவை அதிகரிக்கப்படுவது இல்லை. பீகார், மேற்குவங்க மாநிலங்களில் பேருந்துகள், ரயில் வண்டிகளில் பயணிகளின் கூரைப் பயணம் நிரந்தரக் காட்சி.

ஏர்-இந்தியா விமானங்களில் உள்ள நெருக்கமான இருக்கைகளைப் பார்த்து கால்நடை வகுப்புகள் (cattle class) என்று அழைத்த மத்திய அமைச்சர் சசிதரூர் பதவி விலக நேரிட்டது. கோழிகளையும் ஆடுகளையும் பேருந்தில் ஏற்றிச் செல்ல அனுமதித்த வடிவேலுவின் நகைச்சுவையை திரையரங்கில் ரசித்தது போதாது என்று நிஜத்திலும் அனுபவித்து அவதிப்படுகின்றனர் மக்கள்.

1970-களுக்கு முன்பு பேருந்துகளை அரசுப் போக்குவரத்துத் துறை இயக்கியது. அன்றைய ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.150-க்கும் குறைவு. பேருந்தில் எத்தனை இருக்கைகள் இருக்கலாம் என்பதும், நகரப் பேருந்துகளில் நின்றவண்ணம் எத்தனை பயணிகள் செல்லலாம் என்பதும் மோட்டார் வாகனச் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி 25 பேர் மட்டுமே நின்றபடி பயணம் செய்ய அனுமதி உண்டு. மீறுபவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கவும், பேருந்துக்கான உரிமத்தை ரத்து செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது.

மாயாண்டி என்கிற அரசுப் பேருந்து ஓட்டுநர் 1960-களில் ஒருநாள் மாலை சென்னை சைதாப்பேட்டையில் இருந்து பாரிமுனைக்கு பேருந்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார். பேருந்தில் அனைத்து இருக்கைகளும் நிறைந்திருந்தன. ஜெமினி ஸ்டுடியோ நிறுத்தத்தில் 25 பயணிகள் ஏறினர். அங்கிருந்த ஆய்வாளர் அதற்கு மேலும் பயணிகளை ஏற்ற முனைந்தபோது மோட்டார் வாகனச் சட்டத்தை சுட்டிக்காட்டி ஏற்ற மறுத்தார் மாயாண்டி. அதற்காக குற்றம்சாட்டப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டார்.

மாயாண்டி உயர் நீதிமன்றத்தை நாடினார். அதிகாரிகளின் சட்டபூர்வ உத்தரவுக்கு மட்டுமே ஊழியர்கள் பணிய வேண்டும் என்றும், சட்ட விரோத உத்தரவுகள் அவர்களைக் கட்டுப்படுத்தாது என்றும் தனி நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதை எதிர்த்த இயக்குநரின் மேல்முறையீட்டை டிவிஷன் பெஞ்ச் ஏற்றுக்கொண்டு தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. தளர்ந்துபோகாத மாயாண்டி உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார்.

மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி டி.ஏ.தேசாய் 22.1.1981 அன்று அளித்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், “உயர் அதிகாரிகளின் சட்ட விரோத உத்தரவுகளுக்கு ஊழியர்கள் கட்டுப்பட வேண்டாம். அப்படி மீறிய செயல்களை கீழ்ப்படியாமை என்று கூறமுடியாது” என்று கூறப்பட்டது. முழுச் சம்பளம் மற்றும் சர்வீஸ் தொடர்ச்சியுடன் பணிக்குத் திரும்பிய மாயாண்டி திருச்சியில் சில காலம் பணியாற்றினார்.

மாயாண்டி போலவே அவரது வெற்றியும் அல்ப ஆயுசில் மரணித்தது. அந்த உத்தரவை முறியடிக்கும் வண்ணம் போக்குவரத்து நிர்வாகம் ஊக்க ஊதியங்களை (collection bata) அமல்படுத்தியது. பேருந்தின் தினசரி வருவாயில் குறிப்பிட்ட விழுக்காட்டை நடத்துனரும் ஓட்டுநரும் பகிர்ந்துகொள்ள உத்தரவிடப்பட்டது. பிறகு கேட்பானேன்? புளி மூட்டையாக பயணிகளின் தொங்கல்களுடன் சென்ற பேருந்துகளின் நிறுத்தங்களில் டபுள் விசிலோ, ரை ரைட்ஸ் சத்தங்களோ கேட்பது மறைந்தேவிட்டது.

கூரைப் பயணங்களுக்கு பொறுப்பு அரசு மட்டுமல்ல.. பேருந்து ஊழியர்களான மாயாண்டி குடும்பத்தார்க்கும் உண்டு.

SCROLL FOR NEXT