சிறப்புக் கட்டுரைகள்

சாதி அரசியல் கணக்குகள்

செய்திப்பிரிவு

சுதந்திரப் போராட்ட வீரரும் சோஷலிஸ இயக்கத் தலைவருமான ராம் மனோகர் லோகியா, நமது நாட்டின் அரசியலைக் காப்பீட்டு நிறுவனத்தின் பாலிஸியோடு ஒப்பிட்டார். ஆனால், இந்த அரசியலில் நீங்கள் எந்தவொரு பிரிமியமும் கட்ட வேண்டியதில்லை. சாதி நம்மை நல்ல முறையில் தேவையானபோது பயன்படுத்திக்கொள்ளும். பிரிமியம் கட்டினால் வரக்கூடிய பணப் பயன்களையும் அது தரும் என்றார் அவர்.

சாதியை அடிப்படையாகக்கொண்ட கட்சிகளோடு தேர்தல் உடன்பாடுகள் வைத்துக்கொண்டு, சாதி வாக்குகளை வாங்குவது தேர்தல் கால உத்திகளில் ஒன்று. இந்த வழியில்தான் தேர்தல் ஜனநாயகம், சாதி ஜனநாயகமாக மாறுகிறது. 2017-ல் வரவிருக்கும் தேர்தலில், சாதிய உணர்வுகளை விசிறிவிடுவதற்கு இப்போதே அரசியல் கட்சிகள் புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்துவருகின்றன.

இது சமாஜ்வாதி பாணி

யாதவ் சாதியினரும் இஸ்லாமியர்களும் இணைந்து நின்றதால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. ஆனால், இந்த முறை இஸ்லாமியர்கள் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால், இந்த முறை சமாஜ்வாதி கட்சி மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சாதிகளைத் தங்கள் கட்சியின் ஆதரவுத்தளமாக மாற்றுவதற்கு அவற்றைப் ‘பட்டியல் சாதிகள்’ என்று அறிவிப்பதாக அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

2005-ல் முலாயம்சிங் யாதவ் முதல்வராக இருந்தபோதே இது போன்ற ஒரு முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள பட்டியல் சாதியினர் என்ற பிரிவில் மேலும் 17 சாதிகளைச் சேர்க்க அவர் முயன்றார். அதற்காக, உத்தரப் பிரதேசத்தில் உள்ள சட்டத்தையும் அவர் திருத்தினார். ஆனால், மத்திய அரசு அந்தச் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் தரவில்லை. தற்போது அவரது மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருக்கிறார். அவரும் இந்தச் சாதிகளின் கோரிக்கையில் உறுதியாக இருக்கிறார். பிராமணர்கள் மத்தியில் கட்சியை வளர்ப்பதற்காக பரசுராம் ஜெயந்தியையும் அந்தக் கட்சி கொண்டாடுகிறது.

இது பகுஜன் சமாஜ் பாணி

தலித் - பிராமணர்கள் கூட்டணி என்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றிகரமாகக் கையாண்ட ‘சமுதாயங்களின் இணைப்பு விஞ்ஞானம்’. ஆக, அது மீண்டும் இதே உத்தியைப் பரீட்சித்துப் பார்க்க முடிவெடுத்திருக்கிறது. அதே நேரத்தில் தலித் - முஸ்லிம் கூட்டணியையும் அது கைவிடாமல் பற்றிக்கொள்ள முயல்கிறது.

பிராமணர்களுக்கு மிகப் பெரிய எண்ணிக்கையில் தேர்தல்களில் போட்டியிடத் தனது கட்சியில் வாய்ப்புகள் வழங்க மாயாவதி திட்டமிட்டுள்ளார். நலிவடைந்த மக்களின் நலன் மீது கடந்த காலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி அதிகக் கவனம் செலுத்தியது. மாயாவதி இப்போது அனைத்துச் சாதியினரையும் ஒருங்கிணைப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். அவருடைய பேச்சும் எல்லாச் சமூகங்களின் முன்னேற்றத்தையே வலியுறுத்துவதாக இருக்கிறது.

வாக்குச்சாவடி முதல் மாநில அளவிலான குழுக்கள் வரையில் தனது கட்சியின் பதவிகளில் அனைத்துச் சாதியினர்களுக்கும் போதுமான பிரதிநிதித்துவத்தை பகுஜன் சமாஜ் கட்சி தந்துள்ளது.

கட்சியின் மைய ஆதாரம் தலித் வாக்குகள். இம்முறை அதைக் கைப்பற்ற பாஜக திட்டமிடுகிறது. ஆனால், மாயாவதி தலித் வாக்கு வங்கியைத் தொடர்ந்து உற்சாகமூட்டி வைத்திருக்கத் தனித் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். அதே நேரத்தில், பொதுத் தொகுதிகளில் உள்ள மற்ற சாதியினரையும் கவர்வதற்குப் பொருத்தமான கோஷங்களைப் பிரச்சாரங்களில் பயன்படுத்துகிறார். “தலித் மக்கள் என் மீது உள்ள அபிமானத்தில் மட்டுமே வாக்குகளை அளித்துவிடுவார்கள் என்று நினைத்துச் சும்மாயிருந்துவிடக் கூடாது. அவர்களைக் கட்சித் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று சந்திக்க வேண்டும்” என்று சமீபத்தில் லக்னோவில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியிருக்கிறார்.

இது பாஜக பாணி

ஓரளவு கணிசமான எண்ணிக்கையில் உள்ள ஏராளமான சாதியினர் தங்களுக்கெனத் தனித்தனியாகச் சிறுசிறு கட்சிகளை உருவாக்கியுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி இம்முறை இவர்களைப் பெரிய அளவில் குறிவைத்திருக்கிறது. உதாரணமாக, குர்மி சாதியினரின் கட்சி எனப்படுவது அப்னா தளம். ராஜ்பார் சாதியின் கட்சி சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி. இவற்றோடு பாஜக கூட்டணி வைத்துள்ளது மட்டுமல்ல, ஜன்வாதிக் கட்சி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரான லோனியா, நோனியா, கோலே - தாகூர், லோனியா - சவுகான், டோபி ஆகிய சாதிகள் அமைத்துள்ள குட்டிக் கட்சிகள் எல்லாவற்றையும் பாஜக தனது கூட்டணிக்குள் கொண்டுவருகிறது. கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் தேர்தல் கணக்கு இதுதான் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

பாஜகவின் மைய ஆதாரம் ஆதிக்க சாதியினரின் வாக்குகள். அவற்றோடு இணைப்பதற்கு ஜாதவ் அல்லாத தலித் வாக்குகளையும் யாதவ் அல்லாத பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வாக்குகளையும் கைப்பற்ற பாஜக முயல்கிறது. அதற்கான முறையில் தனது தேர்தல் உத்தியை வைத்துள்ளது. ஆனால், ஆதிக்கச் சாதியினரின் மனதைக் குளிர வைப்பது எப்படி? அதற்காகத் தனது கட்சியில் போதுமான பிரதிநிதித்துவத்தை அவர்களுக்கு அது கொடுத்துள்ளது. கூடவே, வழக்கம்போல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது போன்ற இந்துத்வா நோக்கங்களை உறுதியோடு நிறைவேற்றுவதைப் போலவும் பாஜக தன்னைக் காட்டிக்கொள்கிறது.

வரவிருக்கும் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட சாதிகளையும் தலித் சாதிகளையும்தான் பாஜக குறிவைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஒருவரை பாஜக தனது கட்சிக்கு இழுத்துள்ளது. தலித் சாதிகளுக்குத் தனது கட்சியின் நிர்வாக அமைப்பில் பிரதிநிதித்துவம் அளித்துள்ளது. சாதி அடிப்படையிலான ஊர்வலங்களை நடத்துகிறது. சாதித் தலைவர்களுக்கான நினைவு விழாக்களைக் கொண்டாடுகிறது. அவர்களின் கோயில்களையும் கட்டிக்கொடுக்கிறது.

வாக்குச்சாவடி குழு முதல் மாநிலக் குழு வரையிலான தனது கட்சி அமைப்பின் பதவிகளில் முதல் முறையாகப் பாஜக தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. அவர்களுக்கான கடமைகளையும் நிச்சயித்துள்ளது.

கேசவ் பிரசாத் மவுரியாவைத் தனது மாநிலத் தலைவராக நியமித்ததன் மூலம் மவுரியா, முராவ், கச்ஹி சாதிகளுக்குத் தனது தேர்தல் திட்டங்களில் முக்கியத்துவத்தை அளித்துள்ளது பாஜக. லோத் - நிஷாத் சாதிகளின் வாக்குகளை வெல்வதற்காக முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மற்றும் அவரது மகன் ராஜ்பிர் ஆகியோரை ஈடுபடுத்துவதற்கான வேலைகளும் நடைபெறுகின்றன.

உத்தரப் பிரதேசத்தில் சாதிகள் நடத்துகிற பேரணிகளில் பாஜகவின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். மவுரியா, மற்றும் படேல் சாதிகளின் பேரணிகளில் அவர் சமீபத்தில் பங்கேற்றார். பாஜக தேசியச் செயற்குழுக் கூட்டம் அலகாபாத்தில் நடைபெற்றபோது, ஒரு பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி நிஷாத் சாதியினரின் தெய்வமான நிஷாத் ராஜ் பற்றி பல தடவை குறிப்பிட்டார். நிஷாத், மல்லா, கேவச் சமூகங்களின் வாக்குகளைக் குறிவைத்து அவரது பேச்சு இருந்தது.

தேர்தல் நெருங்க நெருங்க சாதி மேலும் மேலும் சக்தி பெறுகிறது.

- பத்ரி நாராயணன், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர்.

© ‘தி இந்து’ ஆங்கிலம்

தமிழில்: த.நீதிராஜன்

SCROLL FOR NEXT