‘‘நீதிபதியின் ஆளுமையைத் தவிர்த்து நீதியை உறுதி செய்யக்கூடிய விஷயம் வேறெதுவும் இல்லை’’ என்று சட்ட மேதை யூஜின் எர்லிக் கூறியதை மீண்டும் ஒரு முறை தனது பங்குக்கு இந்திய உச்ச நீதிமன்றம் நிரூபித்திருக்கிறது. ஒருபால் உறவு இயற்கைக்கு மாறானது என்பதால், அது குற்றம் என்று கூறும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (இ.த.ச) 377-ம் பிரிவு சரியே, ஒருபால் உறவில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாம் என்று உறுதிசெய்திருப்பதன் மூலம், அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்க, உயர்த்திப் பிடிக்கத் தனக்குக் கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாய்ப்பைத் தவறவிட்டிருப்பதுடன் இந்திய சமூகத்தை 150 ஆண்டு காலம் பின்னோக்கி நகர்த்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம். 2009-ல் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த புரட்சிகரமான ஒரு தீர்ப்பு தவறாகத் திருத்தப்பட்டிருப்பதன் மூலம், லட்சக் கணக்கானவர்கள் இன்று குற்றவாளிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
ஒருபால் உறவின் வரலாறு
ஒருபால் உறவு (ஹோமோசெக்ஸ்), எதிர்பால் உறவு (ஹெட்ரோசெக்ஸ்) என்ற பாகுபாடே 18ம் நூற்றாண்டு ஐரோப்பாவில் செயற்கையாக உருவான பிரிவினை. அதற்கு முன்னர் அத்தகைய பிரிவினை இல்லை என்பதுடன் ஒருபால் உறவுக்காக யாரும் தண்டிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. ஒருபால் உறவு இயற்கைக்கு மாறானது. ஆகவே, அது தண்டனைக்குரியது என்ற நிலை உருவானது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான்.
பழங்கால கிரேக்கத்தில், சாக்ரடீஸ் மற்றும் பிளாட்டோ உட்பட பலரும் இளம் வாலிபர்களுடன் பாலியல் உறவு கொண்டிருந்ததையும் அது இயல்பானதாக ஏற்கப்பட்டிருந்ததையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தியப் புராணங்களைக் கட்டுடைத்துப் படிக்கும்போது, இதற்கான சில மறைமுக அடையாளங்களை ஒருவர் பார்க்க முடியும். ஒருபால் உறவு இல்லாத வரலாற்றுக் காலம் என்ற ஒன்று எப்படி மனித வரலாற்றில் ஏதுமில்லையோ, அதைப் போல உலகின் எந்த நாடும், பகுதியும் இதற்கு விதிவிலக்காக இருந்ததும் இல்லை.
மனநோயா? மனப்பிறழ்வா?
ஒருபால் உறவு இயற்கைக்கு மாறானது என்று இ.த.ச. பிரிவு. 377 கூறுவதே 18-ம் நூற்றாண்டுச் சிந்தனையின் அடிப்படையில். கடந்த 300 ஆண்டுகளில் அறிவியல் வெகுதூரம் பயணித்துவிட்டது. 1970-களின் தொடக்கம் வரையில் ஒருபால் உறவை மனநோயாக, மனப்பிறழ்வாகவே பார்த்தது அறிவியல் உலகம். மரபணுவியல் துறையில் ஏற்பட்ட மாற்றங்களும், விலங்குகளின் உலகில் ஒருபால் உறவு பரவலாக இருப்பது அவதானிக்கப்பட்டதும் அறியலாளர்களின் கண்ணோட்டத்தை மாற்றியது.
இதன் விளைவாக 1970-களின் மத்தியில், அமெரிக்க மனநல மருத்துவக் கழகமும், அமெரிக்க உளவியல் கழகமும் இதை மனநோய், மனப்பிறழ்வு ஆகியவற்றின் பட்டியலிலிருந்து நீக்கின. ஆனால், பொதுமக்களின் பார்வையில் மாற்றம் ஏற்படவில்லை. இதில், கற்றவர்கள், கல்லாதவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவராலும் ஒருபால் உறவு மனப்பிறழ்வு என்பதையும் தாண்டி அநாகரிகமானதாக, அவமானத்துக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இன்றும் உளவியல் நிபுணர்களில் கணிசமானவர்கள் இந்தக் கருத்துக்கு ஆட்பட்டிருக்கிறார்கள்.
இயல்பானதே
‘ஆண் - பெண் உறவு எப்படி இயல்பானதோ, இயற்கையானதோ அப்படித்தான் ஆண் - ஆண் உறவும், பெண் - பெண் உறவும் இயல்பானவை என்பது அறிவியலாளர்களால் உறுதியாக நிலைநாட்டப்பட்டுவிட்ட உண்மை. ஒருவேளை, அப்படியல்லாது அது இயற்கைக்கு மாறானதாக இருந்தாலும், குற்றமாகப் பார்க்கப்பட வேண்டிய செயல் அல்ல’ என்பதே மனித உரிமைகள் கோட்பாடு வலியுறுத்தும் விஷயம்.
ஆங்கிலேயே தத்துவ மேதை ஜான் ஸ்டூவர்ட் மில்லின் தீங்குக் கோட்பாட்டின்படி (ஹார்ம் ப்ரின்சிபிள்), ஒருவரது செயல்கள் பிறருக்குத் தீங்கிழைக்காதவரை அவர் தனது விருப்பப்படி நடந்துகொள்ளலாம். பிறருக்கோ சமூகத்துக்கோ தீங்கு இல்லாதவரை அவரது செயல்களில் சமூகமோ அரசோ குறுக்கிட வேண்டிய அவசியமில்லை. இந்தக் கோட்பாட்டைப் புரிந்துகொள்ள ஒருவர் சட்ட மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், உச்ச நீதிமன்றம் இந்தக் கோட்பாட்டைப் புறந்தள்ளியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
பாலியல் உரிமை
இந்திய அரசியல் சட்டத்தின் 14, 15, மற்றும் 21 பிரிவுகள் வழங்கும் வாழ்வுரிமை, தனிநபர் சுதந்திரம், கண்ணியம் ஆகிய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக, 1860-ம் ஆண்டு இயற்றப்பட்ட இ.த.ச. பிரிவு 377 இருப்பது கண்கூடு. ஆக, ஒருபால் உறவு குற்றமல்ல என்று தீர்ப்பளிக்க ஒரு நீதிமன்றம் புரட்சிகரமானதாக இருக்க வேண்டிய அவசியம்கூட இல்லை. மதம் மற்றும் அரசியல் சித்தாந்த விவகாரங்களில் ஒருவருக்கு, தான் விரும்பும் (வன்முறை தவிர்த்த) பாதையை மேற்கொள்ள உரிமை உண்டெனில், அதே உரிமை பாலியல் சுதந்திரத்துக்கும் பொருந்தும் என்பது ஓர் எளிய உண்மை.
சில வாதங்கள்
மதத் தலைவர்கள், பெரும்பாலான அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களில் பலர் ஒருபால் உறவுக்கு எதிராக வைக்கும் வாதங்கள் விவாதத்துக்குரியவை. ஒருபால் உறவு இயற்கைக்கு மாறானது என்பதே இவர்களது தலையாய வாதம். இதே வாதத்தின்படி மனிதன் ஆடை அணிவதையே இவர்கள் எதிர்க்க வேண்டும், வேட்டையாடலைத் தாண்டி மனிதகுலம் முன்னேறியதை அனுமதித்திருக்கவே கூடாது. இவர்களது அடுத்த முக்கிய வாதம், ஆண்/ஆண், பெண்/பெண் உறவு குடும்ப அமைப்பையே சிதைத்துவிடும், மனித இனப்பெருக்கமே பாதிக்கப்பட்டுவிடும் என்பது.
நூற்றுக்கு மூன்று அல்லது நான்கு பேர் இத்தகைய வாழ்க்கை முறையைக் கைக்கொள்வது எந்த வகையிலும் மனித இனப்பெருக்கத்தைப் பாதிக்காது. அப்படிப் பாதிக்குமெனில், இந்த மூன்று அல்லது நான்கு சதவீதத்தினர் எப்போதும் மனித குலத்தில் இருந்துவந்திருக்கும் உண்மை, நமது இனப்பெருக்கத்தையோ குடும்ப அமைப்பையோ இதுவரை பாதிக்காதது ஏன்? ஒருபால் உறவாளர்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்றாலும், குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதன் மூலம் தங்களுக்கென குடும்பத்தை அவர்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்.
ஒருபால் உறவைச் சட்டரீதியாக அனுமதிப்பதன் மூலம் பலரும் இதைப் பின்பற்றத் தொடங்குவார்கள், மொத்த சமூகத்தையே இது பாதிக்கும் என்பது மற்றொரு வாதம். 96 அல்லது 97 சதவீதமாக இருக்கும் எதிர்பால் உறவாளர்களால், வெறும் மூன்று சதவீத ஒருபால் உறவாளர்களை மாற்ற முடியவில்லை என்கிறபோது, இதற்கு நேரெதிரான தாக்கம் நிகழ்வது மிகக் கடினம். இது சட்டப்படி சரி என்ற நிலை வந்தால், எதிர்பால் உறவாளர்களில் ஓரிரு சதவீதத்தினர் சோதனை முயற்சியாக இதில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. அதுவும் அவர்களது விருப்பம், அதில் தலையிட அரசுக்கோ சமூகத்துக்கோ உரிமையில்லை.
நவீன அணுகுமுறை
19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளின் பல மேதைகள், மிஷெல் பூக்கோ உட்பட, ஒருபால் உறவாளர்களாக இருந்துள்ளனர். 19-ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய மேதை ஆஸ்கார் வைல்ட் மற்றும் 20-ம் நூற்றாண்டின் கணித மேதையும், கணினி அறிவியலின் தந்தையுமான ஆலன் டூரிங் ஆகிய இருவரும் ஒருபால் உறவு குற்றம் என்று கருதிய பிரிட்டனின் சட்டத்தால் மோசமாகத் தண்டிக்கப்பட்டவர்கள். வைல்ட் இரண்டு ஆண்டுகள் சிறைக்கு அனுப்பப்பட்டார். தனது கணினி ஆராய்ச்சி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகச் சிறைக்குச் செல்வதற்குப் பதிலாக, வேதியியல் முறையிலான ஆண்மை நீக்கம் என்ற தண்டனையை ஏற்றுக்கொண்டார் டூரிங். இந்த தண்டனைகளுக்குப் பிறகு இந்த இரண்டு மாபெரும் ஆளுமைகளும் ஒடிந்துபோனார்கள்.
ஸ்டீவன் ஹாக்கிங் உட்பட பல அறிவியல் மேதைகள் எடுத்த முயற்சியின் விளைவாக 57 ஆண்டுகள் கழித்து, பிரிட்டன் அரசு டூரிங்குக்கு இழைத்த அநீதிக்காக 2009-ல் மன்னிப்பு கேட்டது. வைல்டும் டூரிங்கும் புகழ்பெற்ற உதாரணங்கள். சட்டத்தாலும் சமூகத்தாலும் இப்படித் தினம்தினம் தண்டிக்கப்படும் சாதாரணர்கள் இந்தியாவிலும் உலகெங்கிலும் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள். இ.த.ச.-ன் 377-ம் பிரிவை நமக்குத் தந்த பிரிட்டிஷ்காரர்கள் வெகு தூரம் முன்னேறி, இன்று ஒருபால் திருமணத்தைச் சட்டரீதியாக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், நாமோ அந்தச் சட்டத்தை இன்னமும் தாங்கிக்கொண்டிருக்கிறோம். ஏதோ பெரும் ஒழுக்க விதியைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பதைப் போன்ற பெருமிதம் வேறு.
அனைத்துக் குடிமக்களுக்கும் வாக்கு என்பது, முன்னேறிய மேலை நாடுகள் பலவற்றிலேயே அமலில் இல்லாதபோது மிகவும் பின்தங்கியிருந்த சுதந்திர இந்தியா தனது முதல் தேர்தலிலேயே அதை அமல்படுத்தி சாதனை படைத்தது. அதைப் போலவே ஒருபால் உறவு குற்றமல்ல என்றாக்குவதுடன், அத்தகைய திருமணங்களையும் இந்தியா சட்டரீதியானதாக்கி, பல மேலை நாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய நேரமிது.
- க.திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: kthiru1968@gmail.com