நிதின் கட்கரி, நெடுஞ்சாலை, சாலை, கப்பல் போக்குவரத்து - அருண் ஜேட்லி - நிதியமைச்சர்
*
ஐமுகூ ஆட்சியின் இறுதிப் பகுதியில் ஒரு நாளைக்கு 2 கி.மீ. என்று தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. அதை ஒரு நாளைக்கு 20 கி.மீ. என்று ஆக்கியிருக்கிறார் கட்கரி. இந்த ஆண்டின் இறுதியில் 30 கி.மீ. ஆக்குவேன் என்றும் சொல்கிறார். கிராமப்புறச் சாலை திட்டத்தின் கீழ் 30,000 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம். கங்கையில் வாரணாசி முதல் ஹால்டியா வரை 1,620 கி.மீ. நீர்வழிப் போக்குவரத்துத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் 10,000 கி.மீ. சாலைத் திட்டங்களுக்கு ரூ.57,000 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறார். ஜப்பானிடம் 1.6 லட்சம் கோடி டாலர் கடன் பெற்று, அடித்தளக் கட்டமைப்பை மேம்படுத்த முன்வைத்திருக்கும் திட்டமும் ரூ.3 லட்சம் கோடியில் 50,000 கி.மீ-க்கு தேசிய நெடுஞ்சாலை களை அமைக்க முன்மொழிந்திருக்கும் திட்டமும் நிறைவேறினால், இவருடைய பயணத்தில் அவை முக்கியப் பங்கு வகிக்கும். இந்தியத் துறைமுகங்களை இணைத்து விரிவுபடுத்தும் ‘சாகர் மாலா’ திட்டமும் மிக முக்கியமானது.
மோடியின் வளர்ச்சி முழக்கம் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால் அருண் ஜேட்லி. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை வெளியான உடனேயே, ‘ஜேட்லியை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கினால்தான், மோடி நினைத்ததை அரசு செயல்படுத்த முடியும்’ என்ற குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. உண்மையில், காங்கிரஸ் பாதைக்கு மாற்றுப் பாதையும் இல்லாமல், அதே பாதையில் பீறிட்டுப் பயணிப்பதற்கான உத்வேகமும் இல்லாமல் ஜேட்லி திணறுவதுபோல இருக்கிறது. மோடி வாக்களித்தபடி கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கவும் விலைவாசியைக் குறைக்கவும் ஜேட்லியிடம் எந்த யோசனையும் இருப்பதாகத் தெரியவில்லை. கருப்புப் பணம் விவகாரம், நிலம் கையகப்படுத்தல் மசோதா விவகாரம் என்று பல விஷயங்களில் ஜேட்லி தடுமாறினார். வருங்கால வைப்பு நிதியில் புதிதாக அமலாக்க முற்பட்டு, கடும் எதிர்ப்புக்குப் பின் கைவிட்ட வரி; தொழிலாளர் வைப்பு நிதி மீதான வட்டிவீதத்தை 8.7% ஆகக் குறைக்கும் முடிவு என்று அவர் முன்மொழிந்த பல விஷயங்கள் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன. வருமான வரிவிலக்கு வரம்பு கணிசமாக உயர்த்தப்படும் என்று பாஜகவை ஆதரித்த மத்தியதரக் குடும்பங்கள் எதிர்பார்த்தன. அந்த எதிர்பார்ப்பையும் பொய்யாக்கிவிட்டார் ஜேட்லி. புதுமையான திட்டங்களோ, துணிச்சலான நடவடிக்கைகளோ, சமூக நலத் துறைக்குக் கணிசமான ஒதுக்கீடுகளோ இல்லாத பசப்பு பட்ஜெட்டுகளையே ஜேட்லி தாக்கல் செய்திருக்கிறார். மானியச் செலவுகளைக் கணிசமாகக் குறைத்துவிட்டதாகக் கூறிக்கொண்டாலும் அதில் மிச்சமான தொகையைக் கல்வி, சுகாதாரம், வேளாண்மை வளர்ச்சி போன்றவற்றுக்கு நிதியை அதிகம் ஒதுக்கீடு செய்து உதவவில்லை. மகாராஷ்டிரம் உள்ளிட்ட வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு நிதியுதவி விரைந்து அளிக்கப்படவில்லை. ஒருகாலத்தில் மோடி வர வேண்டும் என்று பேசியவர்களே இன்று “தேசிய வருவாயைக் கணக்கிட அரசு இப்போது கையாண்டுள்ள புதிய வழிமுறை காரணமாகத்தான் ஜி.டி.பி. வளர்ச்சி ஏற்பட்டதுபோலத் தெரிகிறது” என்று எழுதுகிறார்கள். நாடு முழுவதற்கும் பொது சரக்கு, சேவை வரி அமலுக்கு வருவதால் மட்டுமே தொழில், வர்த்தகம் பெருகிவிடாது என்று சுப்பிரமணியன் சுவாமியே கூறியிருப்பது கவனிக்க வேண்டியதாகும்!