சிறப்புக் கட்டுரைகள்

இயல்பான கூட்டணியின் வரையறைகள்

செய்திப்பிரிவு

இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த காலக் கசப்புகளை ஒதுக்கியிருக்கின்றன

இந்திய ஜனநாயக வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆதரிப்போரும் எதிர்ப்போரும் ஆவேசமான சொற்போர்களில் வேகம் காட்டினாலும், முன்னேறத் துடிக்கும் இந்தியாவுக்கு நம்பிக்கையும் ஆற்றலுமாக வெளிநாடுகளில் பரவலாகப் பார்க்கப்படுகிறவர் பிரதமர் நரேந்திர மோடி. அவர் பதவிக்கு வந்தவுடன் எல்லாத் தரப்பினரும் ஏகத்துக்கு அவரிடமிருந்து சாதனைகளை எதிர்பார்த்தார்கள், அந்த எதிர்பார்ப்பு அலை இன்னமும்கூட வடியவில்லை. உலகின் மிக முக்கியமான இரு ஜனநாயக நாடுகளின் நலன்கள் பரஸ்பரம் பின்னிப் பிணைந்து காட்சியளிப்பதுவே மோடி சகாப்தத்தின் முக்கியமான கட்டம்.

வாஷிங்டனுக்கு பிரதமர் மோடி மீண்டும் சென்றிருக்கிறார். உலக அளவில் இரு பெரும் ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான உறவைத் தொடர்ந்து வலுப்படுத்தும் கொண்டாட்டமாக அந்நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. இந்த உறவு எப்போதும் விரிவடைந்துகொண்டே வருகிறது, அதிலும் பன்முகத்தன்மை உள்ளதாகவும் இருக்கிறது. இரு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக மோடி மேற்கொண்டிருக்கும் இப்பயணம் உறவை அனைத்து வகைகளிலும் ஒருங்கிணைக்க உதவியிருக்கிறது என்கிறார் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கர். இரு நாடுகளுக்கும் பொதுவான அக்கறையுள்ள விஷயங்களில் உலக அளவில் தலைமை தாங்க உறுதியேற்பதாக இரு நாடுகளும் கூட்டாக விடுத்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

ஆசிய பசிபிக் உலகம்

ஜனநாயகக் கோயிலான அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற மோடிக்குக் கதவு திறந்துவிடப்பட்டது. பிரதமராகப் பதவியேற்பதற்கு முன்னால் அமெரிக்காவுக்கு வருவதற்குக்கூட ‘விசா’ மறுக்கப்பட்ட மோடியை அந்நாட்டு நாடாளுமன்றமே அழைத்து கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற வாய்ப்பளித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனைப் பொருத்தமாக மேற்கோள் காட்டிப் பேசினார் மோடி. அமெரிக்கர்களுக்குப் புரிகிற பாணியில், அவர்களுடைய மரபான வாசகங்களைப் பேசி காய்களை நகர்த்தியிருக்கிறார்.

இரு நாடுகளின் கலந்துறவாடல்களுக்கு ஜனநாயகம் என்ற பொதுவான அம்சம் மையமாக இருக்கிறது. இந்தியாவில் மதச் சுதந்திரத்துக்கு ஆபத்து என்று கூக்குரல்கள் எழும்பி இந்திய அரசைக் குறிவைக்கின்றன. ஆனால், இந்திய ஜனநாயகம் துடிப்பாகவும் வலுவாகவும் இருப்பதால் அமெரிக்காவில் அச்சம்பவங்கள் பெரும்பாலானவர்களால் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதில்லை. இந்தியாவின் ஜனநாயகத் தன்மை தொடர்பாக அவசியம் குறிப்பிட வேண்டிய செய்திகளை மோடி அழகாகத் தொட்டுச்சென்றார்.

அமெரிக்க இந்திய வர்த்தகப் பேரவைக் கூட்டத்தில் பேசும்போது ‘சீர்திருத்தத்திலிருந்து மாற்றத்தை நோக்கி’ என்ற பரிணாமத்தை மோடி விவரித்தார்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான சீர்திருத்த வேகம் குறைவாக இருப்பது குறித்தும், தொழில் தொடங்குவதற்குள்ள நிர்வாக நடைமுறைச் சிக்கல் மற்றும் காலதாமதங்கள் தொடர்வது குறித்தும் அமெரிக்கத் தொழில் துறையினர் கவலை தெரிவித்தனர். இந்தியப் பொருளாதாரத்தைத் தாராளமயப்படுத்த தனது அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை விளக்கமாகப் பேசி நம்பிக்கை ஊட்டினார் மோடி. “என்னுடைய கண்ணோட்டத்தில் அமெரிக்க மூலதனம் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கும், இந்தியாவின் மனித ஆற்றல் மற்றும் தொழில் முனைவுக்கும் இடையில் வலுவான பிணைப்பை ஏற்படுத்த முடியும் என்றார் அவர். வளர்ந்த நாடுகள் தங்களுடைய கதவுகளை வளரும் நாடுகளின் பொருட்களுக்கு மட்டுமல்ல, சேவைகளுக்கும் திறந்துவிட வேண்டும் என்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நல்ல நிலையில் இருக்கிறது என்று கூறிவிடலாம். வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்புள்ள அம்சங்களில், தயக்கமான காலகட்டத்தைத் தாண்டி வசதியான, வெளிப்படையான, ஒரே நோக்கில் சிந்திக்கக்கூடிய நிலைமைக்கு இரு நாடுகளும் அசாதாரணமான முறையில் ஒரு புள்ளியில் இணைந்திருக்கின்றன. அணுமின் உற்பத்தி, பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பெருக்குவது, ரசாயன உயிரி அணுசக்தி கதிர்வீச்சுப் பொருட்களாலான ஆயுதங்கள் பயங்கரவாதிகளுக்குக் கிடைக்காமல் தடுப்பது போன்றவற்றில் நீண்டகால நோக்கில் கூட்டாகச் செயல்பட வேண்டியது குறித்து இப்போது முக்கியத்துவம் தரப்படுகிறது. இணையவெளி துறையில் இணைந்து செயல்படுவது, இணையவெளி பாதுகாப்பில் ஒத்துழைப்பு அளிப்பது ஆகியவை தொடர்பாகக் கூட்டறிக்கை சில உறுதிமொழிகளை அளித்துள்ளது.

அணுசக்தித் தயாரிப்புக்கானவற்றை வழங்குவோர் குழுவில் (என்.எஸ்.ஜி.) உறுப்பினராகத் தன்னையும் சேர்த்துக்கொள்ள இந்தியா விண்ணப்பித்திருக்கிறது. இந்தக் கோரிக்கையை அமெரிக்காவும் ஆதரிக்கிறது. இம்மாத இறுதியில் இக்கோரிக்கை பரிசீலனைக்கு வரும்போது ஆதரிக்குமாறு இக்குழுவில் இடம் பெற்றுள்ள பிற நாடுகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவின் வலுவை இச்செயல் உணர்த்துகிறது. பாதுகாப்புத் துறை (ராணுவம்) தொடர்பானவற்றில் இந்தியாவைச் சம அந்தஸ்துள்ள கூட்டாளியாக அமெரிக்கா அங்கீகரித்திருக்கிறது. ராணுவத் தேவைக்கும் சிவிலியன் தேவைக்கும் பயன்படக்கூடிய சில தொழில்நுட்பங்களைப் பெற ‘உரிமம் தேவையில்லை’ என்ற பிரிவின் கீழ் இந்தியாவைச் சேர்த்திருக்கிறது. பாதுகாப்புத் துறையில் விரிவானதாகவும் ஆழமானதாகவும் கடந்த சில ஆண்டுகளில் நட்பு வளர்ந்துவருவதை இது காட்டுகிறது. கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்குத் தேவைப்படும் அதி நவீன சாதனங்களை இணையாகத் தயாரிக்கவும் மேம்படுத்தவும் பாதுகாப்புத் தொழில்நுட்ப, வர்த்தக முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த காலக் கசப்புகளை ஒதுக்கியிருக்கின்றன. ஜனநாயகம், நல்ல நிர்வாகம், வளர்ச்சியை மையமாகக் கொண்ட நடவடிக்கைகள், பன்முகத்தன்மை, விரிவான பண்புகள், அனைவரையும் உள்ளடக்கிய, வெளிப்படையான பாதுகாப்பு அரண்கள், பிராந்திய பதற்றங்கள் கையை மீறாமல் பார்த்துக்கொள்வது குறிப்பாக கடல்வழிப் பாதைகளைப் பாதுகாப்பது என்ற அம்சங்களில் முன்னர் இருந்த கருத்து வேற்றுமைகள் மறக்கப்பட்டுவிட்டன. வங்கக் கடல் தென் சீனக் கடல் உள்ளிட்ட பெருங்கடல்கள் பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு பெய்ஜிங்கில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. இரு நாடுகளும் தென் சீனக்கடல் தொடர்பாகக் கொண்டிருக்கும் கொள்கையை சீனா ஏற்கெனவே ஆட்சேபித்தது. இருந்தாலும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் எந்தவித தயக்கமோ அச்சமோ இன்றி பெருங்கடல் பகுதி பாதுகாப்புப் பற்றி உறுதிபடப் பேசியிருக்கிறது இந்தியா.

இந்தியாவின் நிலையான ஆட்சியமைப்பும் வலுவான ஜனநாயகமும் அமெரிக்காவுக்கு ஆர்வமுள்ள அம்சங்கள் என்று அமெரிக்க அரசியல் விமர்சகர் சுட்டிக்காட்டினார். இப்போதைக்கு மட்டுமல்ல, கடந்த காலங்களிலும் அமெரிக்கா இவ்விரு அம்சங்களைக் கவனித்து வந்திருக்கிறது. கடந்த கால உறவுகளைவிட இப்போதைய உறவு வலுவாக இருப்பதன் காரணம் என்னவென்றால் அரசியல், பொருளாதாரரீதியாக அது பெற்றுள்ள முக்கியத்துவம்தான். இதைச் சாதித்ததில் வாஜ்பாய், மன்மோகன் சிங் தலைமையிலான அரசுகளுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.

ஒபாமாவின் பங்களிப்பு

இன்னும் சில மாதங்களில் ஒபாமாவுக்கு விடை தரும்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வளர உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படப் போகும் எவரும் கடந்த காலத்திலும் இப்போதும் நிலவும் உறவை மேலும் வலுப்படுத்துவதுடன் புதிய எல்லைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்; அப்போதுதான் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவியாக இருக்கும்.

(நிருபமா ராவ், முன்னாள் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர்)

தமிழில்: சாரி

© ‘தி இந்து’ ஆங்கிலம்.

SCROLL FOR NEXT