கிரீஷ் கார்னாட் இறந்த செய்தி காலையில் வந்த உடனே அவரது அந்திம கிரியைகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் அறிவித்துவிட்டார். ஆனால், அவரது குடும்பத்தார் அதைத் தவிர்த்து தனிப்பட்ட முறையில் நடத்த விருப்பம் தெரிவித்தனர். இறந்து சில மணி நேரங்களிலேயே அவரது உடல் எரியூட்டப்படடது. அந்தஸ்தின் அடையாளங்களையும் படாடோபத்தையும் பொருட்படுத்தாத கலைஞனின் விடைபெறல் அவரது இயல்பிற்கேற்ப, எந்த ஒரு மத, சாதி சடங்காச்சாரமும் இல்லாமல் எளிமையானதாக நடந்தேறியது.
1938-ல் மகாராஷ்டிரத்தில் உள்ள மாதெரென்னில் பிறந்த கிரீஷ், அடிப்படையில் ஒரு கணித மாணவர். தார்வாரில் கல்லூரிப் படிப்பை முடித்த உடனே அவருக்கு ஆக்ஸ்போர்டில் மேல் படிப்புக்கு நல்கை கிடைத்தது. பெற்றோர்கள் இருவருமே மராத்தி நாடகத்தில் ஈடுபட்டிருந்ததால் படிக்கும்போதே அவருக்கு நாடகத்தில் ஆர்வம் உண்டானது. தனது 23-வது வயதிலேயே முதல் நாடகமான ‘யயாதி’யை கன்னடத்தில் எழுதி வெளியிட்டார். இந்தியா திரும்பிய பின் அவர் சென்னையில் ‘ஆக்ஸ்போர்டு யுனிவெர்சிடி பிரஸ்’ பதிப்பகத்தில் பணியில் அமர்ந்தார். ஏ.கே.ராமானுஜன், யு.ஆர்.அனந்தமூர்த்தி, எஸ்.எல்.பைரப்பா என்று கன்னடத்தின் இலக்கிய ஆளுமைகள் ஆங்கிலம் வாயிலாக உலகளாவிய அறிமுகம் பெற்றதிலும் கிரீஷுக்கு முக்கியமான பங்குண்டு.
சென்னையில் ஆங்கில நாடகங்களை மேடையேற்றிக்கொண்டிருந்த ‘மெட்ராஸ் ப்ளேய்ர்ஸ்’ நாடகக் குழுவின் நாடகங்களில் நடிக்கும் அனுபவம் அந்த சமயத்தில்தான் அவருக்கு கிடைத்தது. பெங்களூரில் யு.ஆர். அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’ நாவலைப் படமாக்க பட்டாபிராம ரெட்டி திட்டமிட்டுக்கொண்டிருந்தார். கிரீஷின் சினிமாப் பிரவேசம் ‘சம்ஸ்காரா’ (1971) படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்ததின் மூலம் நடந்தது. இதே சமயத்தில்தான் எஸ்.எல்.பைரப்பாவின் ‘வம்சவிருக்ஷா’ நாவலை பி.வி.காரந்துடன் இணைந்து இயக்கினார் கிரீஷ். ‘வம்சவிருக்ஷா’ (1972) படத்தில் இளம் பேராசிரியரின் பாத்திரத்தில் நடிக்கவும் செய்தார். நாடகம், சினிமா தவிர தூர்தர்ஷனுக்காக தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். கணிதம், இலக்கியம், பதிப்பு, மொழிபெயர்ப்பு, நடிப்பு, நாடக மற்றும் திரைப்பட இயக்கம் என்று பன்முக ஆளுமையாக விளங்கி ஒவ்வொன்றிலும் தனது முத்திரைகளைப் பதித்தவர் கிரீஷ்.
அறுபதுகளில் இந்தியாவில் உருவான புதிய சினிமா அலையின் முக்கிய காரணகர்த்தாவாக கிரீஷ் இயங்கினார். குமார் சாகினி, அடூர் கோபாலகிருஷ்ணன், கிரீஷ் காசரவல்லி போன்றோர் இந்திய சினிமாவுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்து, உலகளவில் அதைக் கொண்டுசென்ற காலம் அது. சத்யஜித் ரே படங்கள் யதார்த்த பாணியைக் கையாண்டுகொண்டிருந்த காலகட்டத்தில், கிரீஷ் அதைத் தாண்டி தொன்மங்கள், மரபு வழிக் கதைகளை நாடினார். அவரது படங்களில் அற்புதங்களும் அசாதாரண நிகழ்வுகளும் இருக்கும். கிரீஷ் சில படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் ‘நிஷாந்த்’ (1975), ‘மான்த்தன்’ (1976) போன்ற முக்கியமான படங்களில் நடித்தார்.
இந்தியத் தொன்மங்களில் கிரீஷுக்கு ஈடுபாடு ஏற்பட கவிஞர் ஏ.கே.ராமானுஜன் ஒரு காரணம். கதைகளுக்கு வற்றாத மூலம் நமது தொன்மங்கள், மரபு வழிக்கதைகள் என்பார் கிரீஷ். தளரா இளமையை வரமாகக் கேட்கும் ஒருவனைப் பற்றிய ‘யயாதி’ கிரீஷின் முதல் நாடகம். கிரீஷின் நாடகக் கதைகளுக்கு வரலாறும் ஒரு ஊற்றுக்கண்ணாக இருந்தது. அடுத்து கிரீஷ் எழுதிய ‘துக்ளக்’ நாடகம் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தது. நேருவின் மீதான கிரீஷின் விமர்சனம் இது என்று சொல்வார்கள். பின்னர் அவர் எழுதிய ‘திப்புவின் கனவுகள்’ என்ற நாடகத்துக்காக காலனியாட்சிக் காலத்தை ஆராய்ந்தார். மெக்கென்சியின் ஆவணங்களைப் பற்றி கிரீஷ் மிக விரிவாகப் பேசுவார்.
புனே திரைப்படக் கல்லூரியில் இயக்குநராக இருந்தபோது கிரீஷை நான் முதன்முதலில் சந்தித்தேன். பத்து ஆண்டுகள் கழித்து பெங்களூருக்குப் பணிபுரிய சென்றபோதுதான் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. மருத்துவராக அவரது மனைவி சரஸ்வதியும் என் மனைவி திலகாவும் ஒரே மருத்துவக் கல்லூரியின் ஆய்வுத் துறையில் பணியாற்றியதால் நாங்கள் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிரீஷுக்கு நெருங்கிய நண்பரான ஓவியர் வாசுதேவ் வீட்டிலும் சில மாலைகளில் ஒன்றுகூடுவது உண்டு.
ஏ.கே.ராமானுஜன் பெங்களூரு வரும் சமயங்களில் நாங்கள் அடிக்கடி சந்திப்போம். ஆர்.கே. நாராயணுக்கு கிரகாம் கிரீன் வாய்த்தாற்போல ராமானுஜனின் கவிதைகள் முதன்முதலாக அச்சேறுவதற்கு கிரீஷின் உதவி முக்கியமாக இருந்தது என்று சொல்வார்கள். அப்போது அவர் ‘ஆக்ஸ்போர்டு யுனிவெர்சிட்டி பதிப்பக’த்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். புனே திரைப்படக் கல்லூரி இயக்குநராக இருந்த ஆண்டுகளை கிரீஷ் நன்றியுடன் நினைவுகூர்வார். “அங்கு நான் இயக்குநர் என்பதைவிட ஒரு மாணவனாகத்தான் இருந்தேன்” என்பார். அவர் இயக்கிய ‘ஒந்தான காலதள்ளி’ (1978) படத்தில் சினிமாவின் மீது அவர் கொண்ட பிடிப்பைக் காண முடிகிறது.
சினிமாவிலும் நாடகத்திலும் ஒரு முக்கிய ஆளுமையாக விளங்கியது கிரீஷின் சிறப்பு. இரண்டு ஊடகங்களின் தனித்துவங்களை நன்கு அறிந்திருந்ததால் அவர் படைப்புகளில் குழப்பம் ஏதும் இருந்ததில்லை. ஆனால், தான் முதலில் ஒரு நாடகாசிரியர் பின்புதான் திரைப்பட இயக்குநர் என்பார். சமணத் தொன்மத்தை ஆதாரமாகக் கொண்ட ‘ஹிட்டின ஹூஞ்சா’ என்ற நாடகம் உருவான சமயத்திலேயே ‘ஒந்தான காலதள்ளி’ வெளியானது. இப்படம் அகிரா குரோசவாவுக்கு கிரீஷ் செய்த மரியாதை.
ஆட்சியாளர்களை எப்போதும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு அணுகிய கலைஞர் கிரீஷ். புனே திரைப்படக் கல்லூரியின் இயக்குநராக இருந்த காலகட்டத்தில் இந்திரா காந்தியின் நெருக்கடிநிலைப் பிரகடனத்துக்கு எதிராகத் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். கருத்தரங்குகளிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் மட்டுமே பங்கெடுத்துக்கொள்கிற அறிவுஜீவியாக அவர் இருந்ததில்லை. கருத்துரிமைக்காக வீதியில் இறங்கிப் போராடியவர் அவர். பெங்களூருவில் கருத்துரிமைக்கான போராட்டங்கள் நடக்கிறபோதெல்லாம் அங்கு கிரீஷையும் கண்டிப்பாகப் பார்க்க முடியும். முஸ்லிம்களைப் பசு குண்டர்கள் தாக்கியபோது ‘என் பெயரால் கூடாது’ என்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. மூச்சுத்திணறல் குறைபாட்டால், ஒரு சிறிய சிலிண்டர் - மூக்கில் ரப்பர் குழாய்களைப் பொருத்தியபடி, 79 வயதான கிரீஷ் பெங்களூருவில் நடந்த போராட்டத்தில் கொட்டும் மழையிலும் கலந்துகொண்டார். 2018 செப்டம்பரில் நடந்த போராட்டம் ஒன்றில் ‘நானும் நகர்ப்புற நக்சல்தான்’ என்று கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட அட்டையைக் கழுத்தில் தொங்கவிட்டபடி கலந்துகொண்டார். சமூகத்தின் தார்மிகக் குரலாக ஒரு கலைஞன் எப்போதும் இருக்க வேண்டும் என்று எண்ணியவர் அவர். அப்படியே வாழ்ந்தார்.
-தியடோர் பாஸ்கரன்,
கிரீஷ் கார்னாடின் நண்பர்,
‘கையிலிருக்கும் பூமி’ நூலின் ஆசிரியர்,
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com