சிறப்புக் கட்டுரைகள்

என்ன நினைக்கிறது உலகம்?- கைகழுவிவிட்டார் ஒபாமா!

செய்திப்பிரிவு

உலக வல்லரசு, உலக போலீஸ்காரர் என்ற அடைமொழிக்கெல்லாம் சொந்தக்காரராக விளங்கும் அமெரிக்கா, உலகின் பல நாடுகளில் நடைபெறும் உள்நாட்டுப் போர்களைத் தீர்க்கும் ஆர்வம் இல்லாமல், எட்டயிருந்தே எட்டிப்பார்க்கும் மனநிலைக்கு ஆட்பட்டிருக்கிறது.

2008-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது மக்களுடைய ஆதரவைக் கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒபாமா “இராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து நமது துருப்புகளை வாபஸ் பெற்றுவிடுவேன்” என்று வாக்குறுதி தந்துதான் வெற்றி பெற்றார். அமெரிக்க மக்களில் பெரும்பான்மையானவர்கள் அந்தக் கருத்தையே கொண்டிருந்ததை அவர்களிடம் நடத்திய பல கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து வலியுறுத்தின. சொல்லியபடியே இராக்கிலிருந்து துருப்புகளை அழைத்துவந்துவிட்டார். ஆப்கானிஸ்தானிலும் கணிசமான துருப்புகளை வெளியேற்றிவிட்டார். ஆனால், இவ்விரு நாடுகளிலும் பூரண அமைதியும் திரும்பவில்லை, உள்நாட்டிலும் வலுவான அரசுகள் பதவிக்கு வந்துவிடவில்லை.

இது ஏதோ அவ்விரு நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினை என்று ஒதுங்கியிருக்க முடியாதபடிக்கு இப்போது மதத்தின் பெயரால் அமைப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ள பயங்கரவாதிகள், இராக்கிலும் சிரியாவிலும் ரத்தக் களரியை ஏற்படுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அரசுத் துருப்புகள் மீதும் அரசுக்கு உதவும் வெளிநாட்டுத் தூதரகங்கள் மீதும், வெளிநாட்டவர்கள் மீதும் தாக்குதல்கள் குறையவில்லை.

இந்த நிலையில்தான், இரட்டைக் கோபுரங்கள் தகர்ப்புச் சம்பவத்தின் 13-வது ஆண்டு நினைவுதினக் கூட்டத்தில் பேசும்போது, “அமெரிக்கப் படைகள் மீண்டும் ஒரு போரில் இறங்காது, இராக்கில் அமெரிக்கத் துருப்புகள் வான்தாக்குதலில் மட்டுமே ஈடுபடும், தரையில் இறங்கிச் சண்டை போடாது” என்று கூறியிருக்கிறார். இது அவருடைய வெளிநாட்டுக் கொள்கையின் வலுவற்ற தன்மையைத்தான் காட்டுகிறது என்று அமெரிக்க செனட்டர்கள் ஜான் மெக்கெய்ன், லிண்ட்சே கிரகாம் ஆகியோர் சாடியிருக்கின்றனர். இராக்குடன் நிறுத்திக்கொள்ளாமல் சிரியாவிலும் வான் தாக்குதல் நடத்தி, ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். 2011-ல் அமெரிக்கத் துருப்புகள் இராக்கிலிருந்து முற்றாக விலகாமல் ஒரு பெரும் படைப்பிரிவு அங்கே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதுகிறார் மெக்கெய்ன்.

ஆனல், ஒபாமாவின் புதிய அணுகுமுறையால் இராக், சிரியா போன்ற நாடுகளின் பிரச்சினைகளை அந்தந்த நாடுகளின் அரசுகள்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று புலனாகிறது.

SCROLL FOR NEXT