சிறப்புக் கட்டுரைகள்

வங்கிகள் கொள்ளைக்கு யார் காரணம்?

ஜெயதி கோஷ்

ற்கெனவே, வாராக் கடன்கள் அதிகரிப்பால் வங்கித் துறை விழிபிதுங்கியிருக்கும் நிலையில்தான் பஞ்சாப் தேசிய வங்கி (பிஎன்பி) மோசடியும், பேங்க் ஆஃப் பரோடாவில் (பிஓபி) நடந்த மோசடியும் வெளியாகியிருக்கின்றன. வங்கிகளின் வாராக் கடனின் மொத்த அளவு இந்த மார்ச் மாதத்தில் ரூ.10 லட்சம் கோடியைத் தொட்டுவிடும் என்று தெரிகிறது. ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட ரூ.6 லட்சம் கோடி இதில் சேராது! இதனால் வங்கிகள் கடன் வழங்குவது மந்தப்பட்டுள்ளது. பயனுள்ள முதலீடுகள் குறைந்துவருகின்றன.

இதுவரை தெரிந்துள்ள மோசடிகள் வெறும் எள் முனையளவுதான். இன்னும் மலையளவு பாக்கி இருக்கிறது. மிக நீண்ட காலமாகவும், மிக எளிதாகவும் இந்த ஊழல்கள் நடந்திருப்பதைப் பார்க்கும்போது இது வெகுவாகப் புரையோடியிருப்பது புலனாகிறது. கடன் வாங்கியவர்களால் திருப்பிச் செலுத்த முடியுமா என்று முறையாக ஆராயாமல் அளிக்கப்பட்ட கடன்கள் ஏராளம்; திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வே இல்லாமல் கடன் வாங்கியவர்களும் அதிகம். மேலும் பல கடன்கள் வாராக் கடன்களாகவே முடிவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஊழல் நடவடிக்கைகளால் நாட்டை யாரும் கொள்ளையடித்துவிடாமல் விழிப்புடன் காவல் காப்பேன் என்று அறிவித்த பிரதமர் மோடிக்கும் ஆளும் கூட்டணிக்கும் இது நிச்சயம் நெருக்கடியைத்தான் ஏற்படுத்தும்.

முறையான கட்டுப்பாடுகளும் கண்காணித்தல்களும் இல்லாததால்தான் இத்தகைய மோசடிகள் நடைபெறுகின்றன என்பது தெளிவாகிவிட்டது. வங்கி நிர்வாகத்தின் எல்லா நிலைகளிலும் இந்தத் தவறுகள் நிகழ்ந்துள்ளன. மிகச் சிலர் மட்டுமே சேர்ந்து இவ்வளவு பெரிய மோசடியைச் செய்திருப்பார்கள் என்று நம்ப முடியவில்லை. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் எங்கே போகின்றன என்று ஆராயாமலேயே இருந்திருக்கிறார்கள் மூத்த அதிகாரிகளும் தணிக்கையாளர்களும். இந்திய ரிசர்வ் வங்கியும் வங்கிகளைச் சரியாகக் கண்காணிக்கவில்லை. நிதியமைச்சகமும் தனது கடமையில் தவறிவிட்டது.

கடன் உறுதியேற்புக் கடிதம் (எல்ஓயு) மூலம் பிஎன்பி மோசடியின் பெரும்பகுதி நடந்திருக்கிறது. தனது வாடிக்கையாளர் வெளிநாட்டில் உள்ள இன்னொரு இந்திய வங்கியின் கிளையில் பெருந்தொகையை மிகக் குறுகிய காலத்துக்குக் கடனாகப் பெற, மூல வங்கி இந்தக் கடன் உறுதியேற்புக் கடிதத்தை அளிக்கிறது. இந்த நடைமுறை பிற வெளிநாடுகளிலோ, வெளிநாட்டு வங்கிகளிலோ கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்தக் கடிதங்கள் வங்கியில் வாடிக்கையாளர் கணக்கிலும் ஏற்றப்பட்டு, வங்கியின் பதிவேட்டிலும் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யவில்லை. பிற வங்கிகளிடம் வாங்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மோடி-சோக்சி ஜோடியால் நிர்வகிக்கப்பட்ட முகமூடி நிறுவனங்களின் கணக்குகளில் போடப்பட்டு, பிறகு துடைத்தெடுக்கப்பட்டிருக்கிறது. வியாபாரத்துக்காகக் கொடுக்கப்பட்ட கடன் அதற்குப் பயன்படுத்தப்படாமலும், எந்த வகையிலும் வங்கியின் பதிவேட்டில் எழுதப்படாமலும், மேலதிகாரிகளால் கண்காணிக்கப்படாமலும் சூறையாடப்பட்டிருக்கிறது. ரூ.20,000 கோடிக்கும் மேல் இது இருக்கலாம் என்று தெரிகிறது.

இது முழுக்க முழுக்க மோசடி நோக்கிலான குற்றச்செயல்தான்; திட்டமிட்ட மோசடிக்கும், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத உண்மை நிலைக்கும் இடையில் சிறிய இடைவெளிதான் இருக்கிறது. வங்கிகள் வணிகத்துக்குக் கடன் கொடுப்பது பெருமளவுக்கு சொந்த விருப்பின் பேரிலேயே இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி 2016 மார்ச்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, எல்லா வங்கிகளிலும் தரப்பட்ட மொத்தக் கடனில் 38% தொகையை, வெறும் 11,643 வாடிக்கையாளர்கள் மட்டும் பெற்றுள்ளனர். வாராக் கடன்களில் 84% பெரிய வணிக நிறுவனங்களால் வாங்கப்பட்டவை. வங்கிகளின் மிகப் பெரிய 12 வாராக் கடன்களின் கூட்டுத் தொகை மட்டுமே ரூ.2,50,000 கோடி. காங்கிரஸ் கூட்டணி அரசில் வாங்கியதைப் போலவே பாஜக ஆட்சியிலும் பெருநிறுவனங்கள் தாராளமாகக் கடன் பெற்றுவருகின்றன. தங்களுக்கு நன்கொடை தரும் பெருநிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏராளமான நிதிச் சலுகைகளையும், வரிச் சலுகை உள்ளிட்டவற்றையும் அளிக்கிறது. அரசுக்குப் பிடித்த நிறுவனங்கள், வாங்கிய கடனை குறிப்பிட்ட நோக்கத்துக்குப் பயன்படுத்தாமல் மடைமாற்றியது தெரிந்தாலும் கூட, அந்தக் கடன்களை வாராக் கடன் என்று அறிவிப்பதில்லை என்பதைப் புலனாய்வு நிறுவனங்கள் பலமுறை கண்டுபிடித்துள்ளன. கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பித் தராமல் ஏமாற்றுபவர்கள் என்று சிலரை அறிவித்தாலும்கூட அவர்களைக் கைதுசெய்வதும் இல்லை, நாட்டைவிட்டு ஓடாமல் தடுப்பதும் இல்லை. அவர்களுடைய பெயர்களைக்கூட பகிரங்கமாக வெளியிட மறுப்பதால், அவர்கள் மேலும் பல வங்கிகளை அணுகிக் கடன் பெற முடிகிறது.

'அரசுத் துறை வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் பெரிய தொழிலதிபர்களால் எளிதில் சூறையாட முடிகிறது, சலுகைசார் முதலாளித்துவம் வளர வாய்ப்பு ஏற்படுகிறது' என்று சிலர் கூறுகின்றனர். எனவே அரசுத் துறை வங்கிகளைத் தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்கின்றனர். தனியார் துறையிடம் ஒப்படைத்தால் இதைவிடப் பெரிய கொள்ளைகளும் மோசடிகளும்தான் நடைபெறும். இங்குப் பிரச்சினைகளுக்குக் காரணம் வங்கியின் உரிமையாளர் யார் என்பதல்ல, கண்காணிப்பு சரியாக இல்லை என்பதுதான். இவ்வளவு பெரிய தொகை மோசடி நடந்ததாகச் செய்திகள் வந்த பிறகும்கூட பஞ்சாப் தேசிய வங்கி நொடித்துப் போகாமல் இருக்கக் காரணம், 'இது அரசு வங்கி, இதில் செலுத்திய நம்முடைய முதலீட்டுக்கு அரசு பொறுப்பேற்கும்' என்ற மக்களுடைய நம்பிக்கைதான். இதுவே தனியாரிடம் இருந்திருந்தால் எழ முடியாத அளவுக்கு வங்கி வீழ்ந்திருக்கும். முறையான கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் இல்லாவிட்டால் தனியார் வங்கிகளும் மோசடிக்கும் இழப்புக்கும்தான் ஆளாகும்.

1969-ல் 14 பெரிய வங்கிகள் அரசுடைமையாக்கப்படுவதற்கு முன்னால் ஆண்டுக்கு சராசரியாக 35 தனியார் வங்கிகள் திவாலாகிக்கொண்டிருந்தன; 1990-களில் தாராளமய சீர்திருத்தங்களுக்குப் பிறகு குளோபல் டிரஸ்ட் வங்கி, செஞ்சுரியன் வங்கி இரண்டும் திவாலானதால் இணைக்கப்பட்டன. இழப்புகள் அரசுத் துறை வங்கிகளால் தாங்கப்பட்டன. தனியார் துறையில் உள்ள ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கிகளிலும் வாராக்கடன் அளவு அதிகம். தனியார் வங்கிகளின் செயல்பாடுகள் மூடுமந்திரமாக இருப்பதால் தெரிவதில்லை, அரசுத் துறை வங்கிகளைக் கட்டுப்படுத்துவது எளிது.

ரிசர்வ் வங்கி தன்னுடைய முக்கியக் கடமையான கண்காணித்தலைச் செய்ய முடியாமல் பணமதிப்பு நீக்கத்தின் பாதகங்களைச் சரிசெய்வதற்கும், வங்கிக்கு வந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை எண்ணுவதற்குமே நேரத்தைச் செலவிடுகிறது. இதனால் வங்கிகளைக் கண்காணித்து முறைப்படுத்தும் வேலை பாதிக்கப்பட்டிருக்கிறது.

பெருந்தொழில் நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் கடன் தரவும், அவற்றிடம் நீக்குப்போக்குடன் நடந்துகொள்ளவும் வங்கிகளுக்கு இந்த அரசும் ஊக்குவிப்புகளை அளித்ததால், பெருநிறுவனங்கள் வாங்கிய கடன்களைத் திருப்பி அளிக்காதபோதும் அரசு வங்கிகள் மெத்தனமாக இருந்தன. பெருநிறுவனங்களுக்கு அதிகம் கடன் கொடுத்தால் பொருளாதார வளர்ச்சி தொடரும் என்று அரசு நம்புகிறது.

இந்த நிலையிலிருந்து மீள, வங்கித் தொழிலுக்கான விதிகளை அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் வங்கி நிர்வாகங்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். வங்கிகளின் உயர் தலைமை தாங்கள் எடுக்கும் முடிவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். வங்கிகளைக் கண்காணிக்க வேண்டிய ரிசர்வ் வங்கியும் தனது கடமையைத் தவறாமல் செய்ய வேண்டும்!

- ஜெயதி கோஷ்,

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப்

பொருளாதார பேராசிரியர்.

தமிழில்: சாரி,

© தி இந்து ஆங்கிலம்.

SCROLL FOR NEXT