சிறப்புக் கட்டுரைகள்

பிரிட்டிஷ் சதி மட்டும்தான் பிரிவினைக்குக் காரணமா?

முகம்மது அயூப்

ந்தியா, பாகிஸ்தான் பிரிவினை என்பது இந்தியத் தலைவர்களை இரையாக்கிய பிரிட்டிஷ் சதி மட்டுமன்று, அதில் காங்கிரஸ் தலைவர்களுக்கும் பங்கு உண்டு. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாகாணங்களைப் பிரித்து தனி நாடு வேண்டும் என்று கேட்ட முஸ்லிம் லீக் தலைவர்கள், அப்படிப் பிரித்தால் சிறுபான்மையினர்களாக முஸ்லிம்கள் வாழும் மாகாணங்களில் என்ன எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று சிந்தித்துப் பார்க்கவேயில்லை. இந்திய முஸ்லிம்களின் நலனைப் பாதுகாக்கத்தான் முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டது. அதைத் தொடங்கிய தலைவர்களில் சிலர் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் மாகாணங் களிலிருந்து வந்தவர்கள்தான். முகம்மது அலி ஜின்னாவே முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கும் மாகாணத்தைச் சேர்ந்தவர்தான்.

அதேசமயம், பிரிவினையானது காங்கிரஸ் கட்சியிலிருந்த இந்து தேசியவாதி களுக்கும் ஏற்புடையதாக இருந்தது. வல்லபபாய் படேல் அவர்களில் ஒருவர். பாஜக அவருக்குச் சொந்தம் கொண்டாடுவதிலிருந்தே இதைத் தெரிந்துகொள்ளலாம். நாடு பிரிக்கப்படாவிட்டால் மொத்த மக்கள் தொகையில் கால்வாசிக்கும் மேல் முஸ்லிம்களாக இருப்பார்கள் என்பதால், சுதந்திர இந்தியாவின் தேசிய அடையாளமாக இந்துக்கள் இருக்க முடியாது என்று அவர்கள் நினைத்தனர். வங்காளம், பஞ்சாப் உட்பட ஆறு மாகாணங்களுக்கும் மேல் முஸ்லிம்கள்தான் பெரும்பான்மைச் சமூகத்தினராக இருந்தார்கள்.

மதச்சார்பற்ற கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவரான ஜவாஹர்லால் நேரு, வேறு காரணங்களுக்காக பிரிவினையை ஏற்கும் மனநிலைக்கு வந்தார். முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள மாகாணங்களில் முஸ்லிம் லீக் செல்வாக்குடன் இருக்கும் என்பதால், தான் விரும்பியபடி 'திட்டமிட்ட பொருளாதாரம்' - 'வலுவான அரசு' என்ற லட்சியத்தை நிறைவேற்றுவது எளிதாக இருக்காது என்று நேரு சிந்தித்தார். 1946 மாகாண கவுன்சில் தேர்தல் முடிவுகள் அதை அவருக்கு உணர்த்தின. எனவே, இந்தியா வலுவற்ற அரசாக இருப்பதைத் தவிர்க்க சில மாகாணங்களை விட்டுக் கொடுக்கலாம் என்ற மனநிலை அவருக்கு ஏற்பட்டது.

விடுதலைக்குப் பிறகு மத்திய அரசிலும் மாகாண அரசுகளிலும் முஸ்லிம்களுக்கு அதிக அரசியல் பிரதிநிதித்துவமும் முக்கியத்துவமும் பெறுவதற்காகவே, பாகிஸ்தான் கோரிக்கையை ஜின்னா ஆரம்பத்தில் முன்வைத்தார், பிரிவினை அவருடைய முதல் நோக்கமல்ல; இந்திய வரலாற்றுக்குப் பொருத்தமில்லாத இந்த கோரிக்கை, நாளடைவில் தானாக வலுப்பெற ஜின்னாவின் பேச்சுகளே உரமாயின.

மத அடிப்படையில் இந்தியாவை இரு நாடுகளாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்படியொன்றும் மோசமானதில்லை என்ற முடிவுக்கு காங்கிரஸ் தலைமையும் வந்தது. தான் வைத்த கண்ணியில் ஜின்னா தானே விழுந்தார். வலுவான மத்திய அரசு இல்லாமல், மாநில அரசுகளுடனான கூட்டாட்சி முறையை அளிப்பது என்ற சமரச யோசனையோடு பிரிட்டிஷ் அமைச்சரவைக் குழு இந்தியா வந்தது.

நேரு அதன் முயற்சியை முறியடித்தார். கடைசியில் வங்காளத்தை யும் பஞ்சாபையும் இரண்டாகப் பிளந்து வரும் மாகாணங்களைக் கொண்டு பாகிஸ்தான் (மேற்கு பாகிஸ்தான் + கிழக்கு பாகிஸ்தான்) என்று இரண்டாகப் பிரிக்கப்பட்ட பகுதிகளைக் கொண்ட தனி நாடு உருவாக்கப்பட்டது. 'துண்டிக்கப்பட்ட - கரையான் அரித்த பகுதிகளே பாகிஸ்தானாகத் தரப்பட்டுள்ளது' என்று ஜின்னா அப்போது அதிருப்தியுடன் கூறியிருந்தார்.

மகாத்மா காந்தி, மவுலானா அபுல்கலாம் ஆசாத், எல்லை காந்தி கான் அப்துல் கபார் கான் ஆகியோர் கடுமை யாக எதிர்த்த பிறகும், மத அடிப்படையிலான பிரிவினையை காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏற்றது.

இந்த வகையில், தேசப் பிரிவினைக்கான பொறுப்பு ஜின்னாவால் மட்டுமல்ல, காங்கிரஸாலும் ஏற்கப்பட வேண்டும். சிலர் இன்னமும் கூறுவதைப் போல பிரிட்டிஷாரின் சதிக்கு இந்தியத் தலைவர்கள் இரையாகிவிடவில்லை.

- முகம்மது அயூப், மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின்

கௌரவப் பேராசிரியர்

தமிழில்: சாரி

SCROLL FOR NEXT