ருவாண்டா, அளவில் நம் இமாச்சலப் பிரதேசத்தைப் போன்றது. மக்கள்தொகையோ இமாச்சலப் பிரதேசத்தைப் போல இருமடங்கு. நான்கு சக்கர வாகனப் பயன்பாடு ஒரு சதவீதம் மட்டுமே. 60% மக்கள் இன்னமும் வானொலி யைத்தான் பொழுதுபோக்குச் சாதனமாகப் பயன்படுத்துகிறார்கள். கோயம்புத்தூரிலுள்ள மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கையைப் பத்தால் வகுத்தால் என்ன வருமோ, அத்தனை எண்ணிக்கையில்கூட அந்த தேசத்தில் மருத்துவர்கள் இல்லை. சிறிய அறுவைச் சிகிச்சைகளுக்குக்கூடப் பக்கத்து நாடுகளிலிருந்து மருத்துவர்கள் வரக் காத்திருக்க வேண்டிய சூழல். தலைநகர் கிகாலியில்கூட மொத்தமே மூன்று பல் மருத்து வர்கள்தாம்.
சர்வதேசச் சுழற்சங்கத்தின் (ரோட்டரி) முன்னாள் தலைவர் சாபூ, 80 வயதானவர். ரோட்டரி பணிகளி லிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட பின்னரும், மானுட சேவையைத் தொடர்பவர். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து சிறிய மருத்துவக் குழு ஒன்றைத் திரட்டி, முடிந்த அளவில் மருந்துகளையும் உபகரணங்களையும் சேகரித்து ருவாண்டாவுக்குச் சென்று அங்கு காத்திருக்கும் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் பெரும் தொண்டை நிகழ்த்திவருகிறார்.
இந்த ஆண்டு ருவாண்டா அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் எலும்பு மருத்துவர்கள், முகச்சீரமைப்பு நிபுணர்கள் உள்ளடங்கிய 10 பேர் கொண்ட குழு ருவாண்டாவுக்குப் பயணமானது. அந்தக் குழுவில் ஒருவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த மருத்துவர் கண்ணன் பலராமன். கோயம்புத்தூர் சுழற்சங்கத்தின் இளம் உறுப்பினர். அவரது பயண அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
ருவாண்டாவில் கிடைத்த வரவேற்பு
ருவாண்டா செல்லும் விமானத்தில் 20 கிலோவுக்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. முடிந்த அளவில் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால் சொந்த உபயோகத்துக்கான பொருட்களை மருத்துவர்கள் குறைத்துக்கொண்டனர். தலைநகர் கிகாலியில் இந்திய மருத்துவக் குழுவுக்கு மிகப் பெரிய வரவேற்பு. அவர்களது வருகை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. நாளிதழ்கள் முதல் பக்கத்தில் மகிழ்ச்சியோடு செய்தி வெளியிட்டன.
இந்திய மருத்துவக் குழு 8 நாட்கள் தினமும் 11 மணி நேரம் உழைத்து அறுவைச் சிகிச்சைகள் மேற்கொண்டது. நம் மருத்துவர்களுக்காக ஒதுக்கப் பட்ட அறுவைக்கூடங்கள் பலவற்றில் அடிப்படை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவில் இல்லை. எனினும் மருத்துவர்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்து 142 அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்தனர். அதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் எய்ட்ஸ் நோயாளிகள். மொத்த ருவாண்டாவிலும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கும், மஞ்சள் காமாலை பாதிப்பு வந்தவர்களுக்கும் சிகிச்சையளிக்கும் வழக்கமே கிடையாது.
குழுவில் இடம்பெற்றிருந்த அனைத்து மருத்துவர்களும் இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களின் பிரபல மருத்துவர்கள். 15 நாட்கள் அவர்களது தினசரி வாழ்விலிருந்து விலகி, பணம் பெறாமல் - அதுவும் சாப்பிடுவதற்குக்கூடச் சரியாக எதுவும் கிடைக்காத ருவாண்டாவில் - இந்தப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
கடக்க வேண்டிய தூரம்
மோசமான இனப்படுகொலை ஒன்றிலிருந்து ருவாண்டா மீண்டுவிட்டது. இன்று அவர்கள் தங்களை ஹூட்டு என்றோ டூட்ஸி என்றோ அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. ருவாண்டாவியன் என்றே சொல்லிக்கொள்கிறார்கள். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அவர்கள் நாட்டின் பொருளா தாரம் 8% வளர்ச்சியடைந்துவருகிறது. ‘‘2,50,000 பேர் படுகொலை செய்யப்பட்டதன் நினைவிடங்கள் நாடெங்கிலும் உள்ளன. அவை எங்களுக்கு வரலாற்றை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன. நாங்கள் கடக்க வேண்டிய தூரத்தையும்கூட’’ என்கிறார்கள் ருவாண்டாவியன்கள்.
விடைபெறும்போது கண்ணன் பலராமன் சொன்னார்: “இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கனவு நாடெங்கிலும் உள்ளது. ஆனால், உலகின் ஏதோ ஒரு மூலையில் உள்ள சக மானுடர்களுக்கு உதவக்கூடிய நிலையில் நாம் இருப்பதே நல்லரசின் அடையாளம். வளர வேண்டியதன் அவசியமே உதவ வேண்டும் என்பதற்காகத்தான்.”
- செல்வேந்திரன், தொடர்புக்கு: selventhiran.k@thehindu.co.in