சிறப்புக் கட்டுரைகள்

ஸ்ரீதேவி: மனங்களை வென்ற நாயகி!

பிரகாஷ்ராஜ்

ந்தியத் திரையுலகத்தில் தென்னிந்திய சினிமா, பாலிவுட் என்று இரண்டு பிரிவுகள் பிரதானமானவை. இந்தி மொழியில் அமிதாப்பச்சன் உச்ச நட்சத்திரம் என்றாலும் தென்னிந்தியாவில் அவருக்குப் பெரிய ஆதரவு இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதேபோல், தென்னிந்தியாவில் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு உச்ச நட்சத்திரம் உண்டு. ஆனால், அவர்கள் வடஇந்தியாவில் புகழ் பெற்றிருக்க மாட்டார்கள். எந்த மொழியாக இருந்தாலும் திரையுலகில் நடிகர்கள் அளவுக்கு நடிகைகள் நிலைத்திருக்க மாட்டார்கள். இந்த விதிகள் அனைத்தையும் உடைத்தெறிந்தவர் ஸ்ரீதேவி.

15 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு ‘இங்கிலிஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலமாக ஸ்ரீதேவி திரும்பி வந்தபோது, இந்தி மட்டுமல்லாமல், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என்று எல்லா மொழி ரசிகர்களும் அவரது வருகையைக் கொண்டாடினார்கள். இந்த அன்பும் மதிப்பும் எல்லாக் கலைஞர்களுக்கும் கிடைக்காது.

எனக்கும் ஸ்ரீதேவிக்கும் ஒரே வயதுதான். ஆனால், பள்ளியில் படிக்கிற காலத்தில் என் வயதையொத்த எல்லாப் பையன்களுக்கும் ஸ்ரீதேவி மாதிரி ஒரு காதலி வேண்டும் என்று ஆசை இருந்ததை மறுக்க முடியுமா? வெறும் ஆசை மட்டுமல்ல; பெரிய கனவு அது. ஸ்ரீதேவியைத் திரையில் பார்ப்பது என்பது கிட்டத்தட்ட ஒரு தரிசனம். வெறுமனே உடல் அழகை ரசிப்பது என்பதல்ல. அவர் அழுதால், ரசிகர்களின் கண்கள் குளமாகும். அவரது பார்வையில், பேச்சில் குழந்தைமை இருக்கும். திரையில்கூட அவரை ஒருவர் ஏசினால், ஏமாற்றினால் ரசிகரின் மனம் பதறும். ஒட்டுமொத்த நாடும் தங்கள் வீட்டு பெண்ணாக, உறவாக ஏற்றுக்கொண்ட ஒரே நடிகை ஸ்ரீதேவிதான். அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு என் மனைவி அழுததைப் பார்த்தேன். ஆண்களைப் பொறுத்தவரை மானசீகக் காதலியாக அவர் இருக்கலாம்; பெண்களைப் பொறுத்தவரை அவர் ஒரு நம்பிக்கை நாயகி. ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த ஒவ்வொரு துறையிலும் சாதிக்க நினைக்கிற பெண்களுக்கு ஸ்ரீதேவியின் வெற்றி என்பது ஒரு தோழியின் வெற்றி; ஒரு சகோதரியின் வெற்றி. இப்படி அனைவரின் மனங்களையும் வென்ற நாயகி அவர்.

அவரது மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான கருத்துகள் வேதனையைத் தந்தன. மாரடைப்பால் இறந்தார் என்று செய்தி வெளியானபோது அவருக்குப் பலவிதமாகப் புகழஞ்சலி செலுத்தியவர்களின் வார்த்தைகள், இறக்கும் தறுவாயில் அவர் மது அருந்தியிருந்தார் என்று தகவல் வெளியானவுடன் முற்றிலும் மாறியதைப் பார்க்க முடிந்தது. சில ஊடகங்கள் அவர் குளியல் தொட்டியில் மூழ்கி மறைந்தது தொடர்பாக வெளியிட்ட செய்திகள் ஊடக அறத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் விதத்தில் இருந்தன. ஒரு நடிகையின் மரணம் புனிதமாவதற்கும், புனிதத்தை இழப்பதற்கும் இடையில் வெறும் 12 மணி நேர இடைவெளிதான் போலும்!“ஒரு பெண் எப்படிக் குடிக்கலாம்? அப்படிப்பட்ட நடிகை இறந்தால் நாம் ஏன் வருந்த வேண்டும்?” என்று கேட்டவர்கள் உண்டு. “குடிப்பழக்கம் உள்ளவருக்கு எதற்கு தேசியக் கொடி அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்?” என்று ‘அறச்சீற்றம்’ காட்டியவர்கள் உண்டு. அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான்: ஸ்ரீதேவி குற்றவாளி அல்ல; கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட கலைஞர். ‘பத்மஸ்ரீ’ உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். மறைந்த பிறகும் ஒளிவீசுகிற அற்புத நட்சத்திரம். தன்னுடைய திறமையாலும் அழகாலும் பல பேருடைய வாழ்க்கையில் அழகான தருணங்களை உருவாக்கிய தேவதை. தனது அபாரமான திறமையால் இந்தியத் திரையுலகத்துக்குச் செழுமை சேர்த்த அவருக்கு இன்னும் சிறப்பான அஞ்சலி செலுத்தியிருந்தாலும் தகும்.

நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே! ஒருவர் எப்படி இறந்தார் என்பது முக்கியம் அல்ல; எப்படி வாழ்ந்தார் என்பதே முக்கியம். ஸ்ரீதேவி என்கிற அற்புதமான நடிகையின் வாழ்வு, மரணமில்லா பெருவாழ்வு!

- பிரகாஷ் ராஜ்,

நடிகர், இயக்குநர்.

SCROLL FOR NEXT