நாட்டின் முதலாவது பொதுத் தேர்தல் நடந்தபோது வாக்காளர்கள் எதிர்கொண்ட பெரும் பிரச்சினை எப்படி வாக்களிப்பது என்பதுதான். முதல் பொதுத்தேர்தலில், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. தேர்தலுக்கு முன்னர், வாக்காளர்களுக்குப் பாடம் எடுத்த உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் அவரவர் கட்சி வேட்பாளருக்குரிய பெட்டியின் வண்ணத்தை மட்டும் சொல்லி அதில் வாக்குச் சீட்டைப் போடுமாறு திரும்பத் திரும்பக் கூறினார்கள். குழப்பமே அதில்தான் வந்தது. பிற வேட்பாளர்களின் வாக்குப்பெட்டிகளைப் பற்றி அவர்கள் சொல்லவில்லை. எனவே, தான் வாக்களிக்க விரும்பிய வேட்பாளரின் பெட்டியைக் கண்டுபிடிப்பதில் வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இன்னும் சிலர் வாக்குச் சீட்டை முத்திரையிட்டு மடித்துவிட்டு, வரிசையாக இருந்த பெட்டிகளில் எதிலும் போடாமல் அவற்றுக்கு இடையே இருந்த இடைவெளியிலும் போட்டார்கள். ஒரு வேளை அன்றைய நோட்டா உணர்வை அப்படிப் பிரதிபலித்தார்களோ என்னவோ?