சிறப்புக் கட்டுரைகள்

சிரோமணி அகாலி தளம்: சீக்கியர்களின் அரசியல் கேடயம்

ஜூரி

இந்திய மாநிலக் கட்சிகளில் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் பழமையான கட்சி,  சிரோமணி அகாலி தளம். அகாலி தளம் என்ற பெயரில் பல கட்சிகள் இருந்தாலும் அதிகாரபூர்வமானது பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான கட்சி மட்டுமே. அக்கட்சியின் தேர்தல் சின்னம் தராசு. வலதுசாரி சிந்தனையுள்ள கட்சி. சீக்கியர்களின் நலன், பஞ்சாபின் வளர்ச்சி, குருத்வாராக்களின் பராமரிப்பு இதன் முக்கிய லட்சியங்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய கிளர்ச்சிகளிலும் காந்திஜியின் அழைப்பை ஏற்றுப் பங்கேற்றுள்ளது அகாலி தளம்.

சீக்கியர்களின் முதன்மைப் பிரதிநிதியாகத் தன்னைக் கருதுகிறது சிரோமணி அகாலி தளம். சர்தார் சர்முக் சிங் சுப்பல் ‘ஒற்றுமைப்படுத்தப்பட்ட’ அகாலி தளத்தை முதலில் தொடங்கினார். மாஸ்டர் தாரா சிங் தலைமையில் பின்னர் இக்கட்சி வலிமை பெற்றது. சீக்கியர்களின் மத, அரசியல், கலாச்சார உரிமைகளுக்காகத் தொடர்ந்து பாடுபட்டுவருகிறது.

1950-களில் இக்கட்சி ‘பஞ்சாபி சுபா’ இயக்கத்தைத் தொடங்கியது. பஞ்சாபி பேசும் மக்களைக் கொண்ட தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அந்த இயக்கம். சந்த் ஃபதே சிங் இயக்கத்தின் தலைவராக விளங்கினார். 1966-ல் இப்போதைய பஞ்சாப் மாநிலம் உருவானது. புதிய பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், தலைவர்களின் அதிகார வேட்கையினாலும் உள்கட்சிப் பூசல்களாலும் ஆட்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. நீண்ட காலத்துக்குப் பிறகே கட்சியால் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளவும் ஐந்தாண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கவும் முடிந்தது. இக்கட்சியின் தலைமையிலான ஆட்சி சீக்கிய இனம், பஞ்சாபி மொழி நலன்களுக்காகப் பல நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போது அங்கம் வகிக்கிறது.

SCROLL FOR NEXT