சிறப்புக் கட்டுரைகள்

இதுதான் இந்த தொகுதி: வட சென்னை

எம்.சரவணன்

தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் வட சென்னை மிகவும் பழமையானது.

வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது. 1952-ல் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் ‘மெட்ராஸ்’ தொகுதியில் வட சென்னையும் அடங்கும். அப்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டி.டி.கிருஷ்ணமாச்சாரி வெற்றிபெற்றார். 1957 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதி உருவானது. வட சென்னையில் முதல் எம்.பி. என்ற பெருமையைப் பெற்றவர் அந்தோணிப் பிள்ளை. இவர் சுயேட்சையாகக் களமிறங்கி சாதனை படைத்தார். 1962-ல் முதல் முறையாக காங்கிரஸ் வென்றது.  கடந்த 2009-ல் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு கொளத்தூர், ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், பெரம்பூர், திருவிக நகர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வட சென்னையில் உள்ளன.

பொருளாதாரத்தின் திசை: தலைநகரான சென்னையின் பின்தங்கிய பகுதி. தொகுதியில் பெரும்பாலானோர் தொழிலாளர்கள். வீட்டு வேலை, கூலி வேலை, சிறுசிறு தொழிற்கூடங்கள், வணிக நிறுவனங்களில் வேலை செய்பவர்களே அதிகம். ஆங்கிலேயர் ஆட்சியிலும், அதன் பிறகும் சென்னையின் அடையாளமாக விளங்கிய பெரம்பூர் பின்னி ஆலை இங்குதான் இருந்தது.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: தலைநகரில் உள்ள தொகுதி என்றாலும் வட சென்னையை ஆளும் கட்சிகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்ப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கிடங்கை அகற்றுதல், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருதல், காற்று மாசு, சாலைகள், மேம்பாலங்கள் கட்டுதல், மழைநீர் வடிகால்கள் எனத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஏராளம்.

நீண்ட காலக் கோரிக்கைகள்: மத்திய சென்னையையும், வட சென்னையையும் இணைக்க வியாசர்பாடி கணேசபுரத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் நீண்டகால கோரிக்கையை எந்த ஆட்சியாளர்களும் கவனத்தில் கொள்ளவில்லை.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: மீனவர்கள், தலித்துகள், வன்னியர்கள், முதலியார்கள், வெள்ளாளர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். தெலுங்கு பேசுபவர்கள், பர்மாவில் இருந்து குடியேறிய தமிழர்கள், வட இந்தியர்கள் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தவர்களும் இங்கு வாக்காளர்களாக உள்ளனர். வட சென்னையில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழகம் முழுவதும் இருந்து தொழில், வேலைக்காகக் குடியேறியவர்கள் குறிப்பாக நாடார் சமூகத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். கொளத்தூர் தொகுதியில் அரசு ஊழியர்கள், நடுத்தர மக்கள் அதிக அளவில் உள்ளனர். மொத்தத்தில் ‘மினி இந்தியா’ என்று அழைக்கும் அளவுக்கு அனைத்து மாநிலத்தவர், மதம், ஜாதி, மொழி பேசுபவர்களும் உள்ளனர்.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: இதுவரை நடந்த 15 மக்களவைத் தேர்தல்களில் திமுக 10 முறை, காங்கிரஸ் 3 முறை, அதிமுக 1 முறை, சுயேச்சை 1 முறை வென்றுள்ளது. 1989, 1991 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸின் கை சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் தா.பாண்டியன் வென்றார். கடந்த 2014 தேர்தலில் முதல் முறையாக அதிமுக வென்றது.

களம் காணும் வேட்பாளர்கள்:

டாக்டர் கலாநிதி – திமுக

மோகன்ராஜ் – தேமுதிக

மவுர்யா – மக்கள் நீதி மய்யம்

சந்தான கிருஷ்ணன் - அமமுக.

வாக்காளர்கள் யார்?

மொத்தம் 14,87,461

ஆண்கள் 7,28,679

பெண்கள் 7,58,326

மூன்றாம் பாலினத்தவர்கள் 456

SCROLL FOR NEXT