சிறப்புக் கட்டுரைகள்

நடைவழி நினைவுகள்: ந.முத்துசாமி, உத்வேக ஊற்று

சி.மோகன்

‘எழுத்து’ இதழ் மூலம் 60-களில் அறிமுகமாகித் தங்கள் கலைச் செயல்பாடுகளின் மூலமாகவும் கால வளர்ச்சியினூடாகவும் 80-களில் தனித்துவமிக்க இயக்க சக்திகளாக நிலைபெற்றவர்கள் பிரமிள், வெங்கட் சாமிநாதன், ந.முத்துசாமி.

இவர்கள் தங்கள் கலை இலக்கியப் பயணங்களில் மாறுபட்ட புதிய சாத்தியங்களைக் கண்டடைந்தவர்கள். கவித்துவப் பேராற்றலாகப் பிரமிளும், கலைவெளிப் பயணங்களுக்கு உத்வேகமூட்டிய சக்தியாக வெங்கட் சாமிநாதனும், நவீன நாடக வெளியைக் கட்டமைத்த புத்தெழுச்சியாக ந.முத்துசாமியும் தனிப்பெரும் இயக்கங்களாகத் திகழ்ந்தனர். ந.முத்துசாமியிடம் உத்வேகத்தின் ஊற்று எப்போதும் பொங்கிப் பிரவாகித்திருந்தது.

மேலே மேலே என்று கலை வெளிப்பாட்டில் ஓர் உச்சத்தை எட்டுவதற்கான தணல் உள்ளுக்குள் எப்போதும் கனன்றபடி இருந்தது. அந்த வற்றாத ஊற்றின் சலனத்திலும், உள்ளார்ந்து கனலும் உத்வேகத்திலும் இடையறாது இயங்கிய வாழ்வு இவருடையது.

1977 தொடக்கத்தில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ளும் முகாந்திரமாக முதல் முறையாக சென்னை வந்தேன். ஒரு பெரிய வீட்டுக் கல்யாணம் அது. எங்கள் வீட்டு சார்பாக என்னை அனுப்பிவைத்தார்கள். மதுரையிலிருந்து ரயிலில் வந்து மாம்பலத்தில் இறங்கினேன். ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் அங்கு வந்திருந்து என்னை அழைத்துக்கொண்டார்.

அதற்கு முன்னதாக, 1975 இறுதியில் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மதுரை வந்திருந்தபோது அவருடன் நேர்ப்பழக்கமும் அதைத் தொடர்ந்து கடிதத் தொடர்பும் நெருக்கமும் ஏற்பட்டிருந்தது. ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவில் இருவரும் ராமின் வீடு சென்றோம். தி.நகரில் ராம் குடியிருந்தார். ‘க்ரியா’ தனி அலுவலகமாக இன்றி அவர் வீட்டிலேயே இயங்கிய காலமது. மேல்படுதா போடாமல் ரிக்‌ஷா சென்றது வேடிக்கையாக இருந்தது. வேடிக்கை பார்த்தபடி செல்ல வசதியாகவும் இருந்தது. அதுதான் என் முதல் ரிக்‌ஷா பயணமும்கூட.

அலுவலகம் முடிந்ததும் மாலை முத்துசாமி வருவதாகச் சொல்லியிருக்கிறார் என்றும், ‘வைகை’யில் நாவல் கலை பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்துவிட்டு மிகுந்த சிலாகிப்போடு இருக்கிறார் என்றும் ராம் சொன்னார். மேலும், முத்துசாமி ‘கூத்துப்பட்டறை’ தொடங்கவிருப்பதைப் பற்றியும், கூத்துக்கலையின் மேம்பாட்டுக்கான சில அடிப்படைக் காரியங்களை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டிருப்பதைப் பற்றியும் சொன்னார்.

அதற்காக நண்பர்களிடமிருந்து நிதியுதவி பெற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். திருமணத்துக்குப் போய் தலையைக் காட்டிவிட்டால் போதும். மொய் செய்ய வேண்டியதில்லை. அந்த மொய்ப் பணத்தை இதற்குத் தந்துவிடுகிறேன் என்று கொடுத்தேன்.

அன்று மாலை ராமின் வீட்டுக்கு முத்துசாமி வந்தார். அவருடனான முதல் சந்திப்பு அது. சமகால வாழ்க்கைச் சூழலில் தெருக்கூத்துக் கலையை அழியாமல் காப்பது மற்றும் அதன் அரங்க குணாம்சங்களிலிருந்து நம் நவீன நாடகத்தை உருவாக்குவது என முனைப்புடன் முத்துசாமி தன் கலைப் பாதையை வடிவமைத்துக்கொண்டிருந்த காலம்.

என்னைப் பார்த்த நொடியில் முத்துசாமி தன் உணர்ச்சிப் பரவசத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். உற்சாகத்தின் எக்களிப்போடு அவர் வெளிப்பட்டுக்கொண்டிருந்தார். “நீங்கள் மேலே மேலே சென்றுகொண்டிருக்கிறீர்கள். இன்னும் இன்னும் என மேலே மேலே போக வேண்டும்” என்றார்.

‘நடை’ இதழ் குழுவைச் சேர்ந்த வி.து.சீனிவாசனும் அந்த மாலை வந்திருந்தார். சி.மணி, ஆர்.வெங்கடேசன், ‘நடை’ ஆசிரியர் கிருஷ்ணஸ்வாமி, வி.து.சீனிவாசன் இவர்களோடு ‘நடை’ சார்ந்த ஐவர் குழுவில் முத்துசாமியும் அடக்கம்.

இவர்களுள் சீனிவாசன் தத்துவ ஞானம் மிக்கவர். அக்காலகட்டத்தில் ரஷ்ய மறைஞானத் தத்துவ மேதையான குர்ஜீப், சிறுபத்திரிகைச் சூழலில் ஓர் ஆதர்ச ஒளியாகக் கொண்டாடப்பட்டார். குர்ஜீப்பைக் கவனப்படுத்தியதில் வி.து.சீனிவாசன் பெரும் பங்காற்றியவர்.

அன்று மாலை ராமகிருஷ்ணன் வீட்டில் உரையாடல் களைகட்டியது. குர்ஜீப்பின் ‘இன் சியர்ச் ஆஃப் பீயிங்: தி ஃபோர்த் வே டு கான்ஷியஸ்னெஸ்’ புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும் என்றார். “அதை நீங்கள் படித்துவிட்டால் அளவற்ற சொத்து உங்களுக்குக் கிடைத்த மாதிரி. உங்கள் வாழ்க்கையை அது புதிதாக மலரச்செய்யும்” என்றார். உரையாடலில் உணர்ச்சித் தகிப்போடு வெளிப்பட்டுக்கொண்டிருந்தார்.

அவரது பரவசம் மனதின் வாசனையாகப் பரவிக்கொண்டிருந்தது. அவரது சுபாவமும் உத்வேகமும் அவர் மீது பெரும் வாஞ்சையை ஏற்படுத்தியது. நான் ஆச்சரியத்தில் களித்திருந்தேன். அந்த முன்னிரவில் வெளியில் மழை பெய்துகொண்டிருந்தது.

மறுநாள் மாலை திட்டமிட்டிருந்தபடி, முத்துசாமி பணியாற்றிய ‘TAFE’ அலுவலகம் சென்று அவரைப் பார்த்தேன். அவர் தன் அலுவல்களை முடித்துக்கொண்டபடி, போகலாம் என்றார். போகும்போது, உடன் பணியாற்றிய பாலகுமாரனிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார். ஓரிரு நிமிட முகமன் உரையாடலுக்குப் பின் அவரிடமிருந்து பிரிந்து நாங்கள் வெளியே வந்தோம். முத்துசாமி அவரது சைக்கிளின் பின்னால் என்னை ஏற்றிக்கொண்டு ராயப்பேட்டையிலிருந்த ஞாநியின் வீட்டுக்குக் கூட்டிப்போனார். அந்த அடுக்ககத்தின் மொட்டைமாடியில் ஏழெட்டு பேர் அமர்ந்திருக்க,

கே.சி.மனவேந்திரநாத்தின் ஒரு நபர் நிகழ்வு நடைபெற்றது. அசரவைத்த அபார நடிப்பு. உடலை ஒரு பிரத்தியேக மொழியாகவும் குறியீடுகளாகவும் உருமாற்றியபடி ஏதேதோ மாயங்களை நிகழ்த்திக் காட்டினார். ஒரு பெரும் கலை வித்தகனின் மாய உடல் மொழி ஞானத்தில், ஒரு புதிய அனுபவத்தில் திளைத்திருந்தேன். சென்னை மாநகர் மீதான மோகம் என்னுள் பரவத் தொடங்கிவிட்டிருந்தது. கே.சி. என்று அழைக்கப்பட்ட மனவேந்திரநாத், மலையாளக் கலை இலக்கிய உலகின் மிகப் பெரிய ஆகிருதியான

எம்.கோவிந்தனின் ஒரே மகன். இலக்கியம் மட்டுமல்லாது பிற கலைகள் மீதும் கவனத்தைத் திசைதிருப்பிய ஆளுமையாக அவர் முத்துசாமிக்கு இருந்தார்.

என் முதல் சென்னைப் பயணத்தில் முத்துசாமியுடனான நட்பும் உறவும் என் சென்னை வாழ்வில் நெருக்கமும் கூடுதல் பிணைப்பும் கொண்டதாக மலர்ந்து செழித்தது. குடும்பப் பிணைப்பாகவும் விரிவடைந்தது. முத்துசாமியின் மரணத்துக்கு சில நாட்களுக்கு முன்பாகக்கூட அவர்கள் வீட்டுக்குச் சென்று முத்துசாமி, நடேஷ், குஞ்சலி அம்மாவோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்தேன். ‘நான் இல்லாமல் எல்லாமே நடக்கும்.

ஆனால், என்னால் முடிந்ததை நான் செய்துகொண்டுதான் இருப்பேன்’ என்ற சித்தத்துடன் வாழ்ந்த முத்துசாமி, ஒவ்வொருவரும் தனது சிறந்த அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் செயல்படுவதற்கான உத்வேகத்தைத் தொடர்ந்து விதைத்துக்கொண்டே இருந்தார்.

- சி.மோகன், எழுத்தாளர்
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

SCROLL FOR NEXT