பதினாறாவது மக்களவைத் தேர்தல் 2014 ஏப்ரல் 7 முதல் மே 12 வரையில் 9 கட்டங்களாக நடந்தது. இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 66.38% வாக்குகள் பதிவான தேர்தல் இது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று ஆட்சியமைத்தது. குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி பிரதமரானார். பாஜகவுக்கு 282 இடங்கள் கிடைத்தன. சிவசேனை 18, தெலுங்கு தேசம் 16, சிரோமணி அகாலிதளம் 4, பாமக 1, லோக் ஜனசக்தி 6 என தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 336 தொகுதிகள் கிடைத்தன.
தேர்தலுக்கு முன்னதாகவே மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த பாஜக, தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது முதல், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்பது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது, ராணுவத்தினருக்கு ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என ஏராளமான வாக்குறுதிகளை பாஜக முன்வைத்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீது 2ஜி ஊழல் வழக்கு முதல் நிலக்கரி ஊழல் வழக்கு வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவற்றைப் பிரதானமாக்கித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது பாஜக. இவை தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் 44, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4, தேசியவாத காங்கிரஸ் 6, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, கேரளா காங்கிரஸ் (எம்) 1, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி 1 என்று மொத்தம் 60 தொகுதிகள் கிடைத்தன. இந்தத் தேர்தலில், 37 இடங்களில் வென்று மூன்றாவது பெரிய கட்சியாக ஆனது அதிமுக. பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று அதிக இடங்களில் அக்கட்சி வென்றது. திரிணமூல் காங்கிரஸ் 34, நவீன் பட்நாயக் 20, தெலங்கானா ராஷ்டிர சமிதி 11, இடதுசாரிக் கட்சிகள் 9 இடங்களில் வென்றன.
மோடி ஆட்சியில் பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை என்று பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக இந்தத் தேர்தலில் களம் காணும் எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. கூட்டணி விஷயத்தில் காங்கிரஸின் தடுமாற்றம் இந்தத் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதே இந்த முறை பெரும் விவாதமாக எழுந்திருக்கிறது. ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக இந்தியாவின் எதிர்காலத்தை முடிவுசெய்ய வாக்காளர்கள் காத்திருக்கிறார்கள்!