தான் தொடங்கிய அரசியல் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பைத் தொடர்ந்து வைத்துக்கொள்ள விரும்பாதவர் அண்ணா. ஏற்கெனவே திமுகவின் தலைவர் பதவியைப் பெரியாருக்காக காலியாக வைத்திருந்த அண்ணா, பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும் சீக்கிரமே விலகினார். தம்பிகளைத் தலைமை தாங்க அழைத்தார். காந்திக்கு அடுத்து, இந்தியா வில் ஒரு அரசியல் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒருவர் தலைமைப் பதவிக்கு வெளியிலிருந்து இயங்க முடிவெடுத்தது அண்ணாதான் என்று சொல்ல முடியும்.
இந்த முடிவை ஏற்க மறுத்தவர்களிடம் “நான் வலிவோடும் செல்வாக்கோடும் இருக்கும்போதே என்னுடைய மேற்பார்வையின் கீழ், கழகத்தின் முன்னணியினர் பயிற்சியும் பக்குவமும் பெற வேண்டும். அப்போதுதான் குறைகளை நீக்கவும், குற்றங்களைக் களையவும் முடியும். நான் வலுவிழந்த பிறகு மற்றவர்கள் பொறுப்பேற்றால் அப்போது கழகத்தைச் சீர்படுத்தவோ செம்மைப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ என்னால் முடியாமல் போகும். வேறு யாராலும் முடியாமல் போய்விடும்” என்றார் அண்ணா.
திமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக நாவலர் நெடுஞ்செழியனை ஆக்கலாம் என முடிவெடுத்த அண்ணா, அதை அவரிடம் சொன்னதுடன், ‘தம்பிக்கு கடிதம்’ வாயிலாகத் தனது விருப்பத்தை எழுதவும் ஆரம்பித்தார்.
1955 ஏப்ரல் 24-ல் புதிய பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினார் அண்ணா. ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டார் நெடுஞ்செழியன். 18.5.1956-ல் திமுகவின் இரண்டாவது மாநில மாநாடு திருச்சியில் நடந்தது. தலைமைப் பொறுப்புக்கு நெடுஞ்செழியனை வரவேற்று அழைத்தார் அண்ணா: “தம்பி வா! தலைமைதாங்க வா!! உன் ஆணைக்கு எல்லோரும் அடங்கி நடப்போம். தலைமையேற்று நடத்த வா!”
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரையில் தேர்தல் நடத்துவது திமுக மரபு. அதன்படி, 25.9.1960-ல் தலைமைக் கழகத் தேர்தல் நடந்தபோது, பொதுச்செயலாளர் பதவிக்கு கே.ஏ.மதியழகனை முன்நிறுத்தினார் சம்பத். தென்னரசுவைத் தயார்படுத்தினார் கருணாநிதி. இந்தச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர ஒரே தீர்வு அண்ணாவே மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்பதே என்று ஆனது. சம்பத் முன்மொழிய, கருணாநிதி வழிமொழிய அண்ணாவே மறுபடியும் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்: https://www.kamadenu.in/publications