சிறப்புக் கட்டுரைகள்

நாடாளுமன்றத்தில் திராவிடக் கலாச்சாரத்தை உருவாக்கியவர் அண்ணா: வாஜ்பாய்

செய்திப்பிரிவு

நாடாளுமன்றம் போன கொஞ்ச நாட்களில் விவாதங்கள் வழியே இரு நண்பர்களைப் பெற்றார் அண்ணா. ஒருவர் இடதுசாரி – வங்கத்தைச் சேர்ந்த பூபேஷ் குப்தா; இன்னொருவர் வலதுசாரி – உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வாஜ்பாய். அண்ணாவின் நாடாளுமன்ற உரைகளில் அடிக்கடி இவர்கள் இருவரின் பெயர்களும் இடம்பெறுவதைப் பார்க்க முடியும். அண்ணாவுக்கு இவர்கள் இருவர் மீதும் மிகுந்த மரியாதை இருந்தது; அவர்களும் அண்ணா ஒரு முக்கியமான ஆளுமை என்பதை உணர்ந்திருந்தனர்.

அவைக்கு வெளியே சந்திக்கும்போது ஏதாவது விளையாட்டாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு இந்த நட்பு இருந்தது. ஒருமுறை, அண்ணாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, “உங்கள் திறமையே தனி. சிறுவர்களை வைத்தே கட்சி நடத்துகிறீர்களே!” என்று வேடிக்கையாகச் சொன்னார் வாஜ்பாய். பள்ளி, கல்லூரி மாணவர்களே திமுகவில் அந்நாட்களில் அதிகம் என்பதை அவர் அறிந்திருந்தார். பின்னொரு நாளில்  ‘சேலம் பெரியார்’ என்றழைக்கப்பட்ட ஜி.பி.சோமசுந்தரத்தை மாநிலங்களவை உறுப்பினராக்கினார் அண்ணா. அவரை வாஜ்பாயிடம் அழைத்துப்போய் அறிமுகப்படுத்திய அண்ணா, “இவரும் என் கட்சிதான். இவருடைய வயது 70+. இப்போது என் கட்சி எப்படி?” என்றார். உடனே வாஜ்பாய், “சரிதான். நான் என் கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லிச் சிரித்தார்!

டெல்லியில் தங்கியிருந்தபோது, எங்காவது பொதுக்கூட்டம் நடந்தால், கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று அதைப் பார்ப்பது அண்ணாவின் வழக்கம். இதுபற்றி டெல்லியில் மத்திய அரசு ஊழியராக இருந்த டெல்லி சம்பத் தனது புத்தகத்தில் இப்படி எழுதியிருக்கிறார்: “பொதுக்கூட்டத்தில், பெரும்பாலும் இந்தியில்தான் பேச்சாளர்கள் பேசுவார்கள். ஆனாலும், மேடையையும், கூட்டத்தையும் கொஞ்ச நேரமாவது அண்ணா கவனிப்பார். வாஜ்பாய் கூட்டம் என்றால், தரையில் சப்பணமிட்டு அமர்ந்து முழு கூட்டத்தையும் பார்ப்பார். வாஜ்பாய் பேசுவதை எனக்குத் தெரிந்தவரை மொழிபெயர்த்துச் சொல்வேன். வாஜ்பாய் பேசும் விதத்தையும், அவரது உடல்மொழியையும் பாராட்டுவார் அண்ணா. வாஜ்பாயை ராஜ்யசபாவில் நேரில் பார்க்கும்போது, அவரது கூட்டத்திற்கு வந்திருந்ததையும், நன்றாகப் பேசியதாகவும் சொல்லிப் பாராட்டுவார்.”

 பிற்பாடு இந்தியாவின் முதல் வலதுசாரி பிரதமரான வாஜ்பாய், பல ஆண்டுகள் கழித்தும்கூட அண்ணாவை நினைவுகூர்ந்தார். “தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரப் பாரம்பரியம், பெருமைமிகு சரித்திரத்தின் மீது நான் எப்போதும் மதிப்புடையவன். தமிழ்நாடு என்றாலே, மதிப்புக்குரிய நண்பரான திராவிட இயக்க ஜாம்பவான் அண்ணாதுரைதான் எனக்கு முதலில் நினைவுக்கு வருவார். தமிழ் மக்களின் உணர்வுபூர்வ வீரராக அவர் திகழ்ந்தார். எளிமையான, மிக அன்பான, உயர்ந்த எண்ணம் கொண்ட மாமனிதர் அண்ணா. நாடாளுமன்றத்தில் திராவிடக் கலாச்சாரத்தை உருவாக்கியவர். மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி!”

SCROLL FOR NEXT