சிறப்புக் கட்டுரைகள்

வெளியானது ‘மாபெரும் தமிழ்க் கனவு’ முதல் பார்வை

செய்திப்பிரிவு

தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் தலைவரான அறிஞர் அண்ணாவின் நினைவைப் போற்றும் வகையில், ‘இந்து தமிழ்’ நாளிதழின் அங்கமான ‘தமிழ் - திசை பதிப்பகம்’ வெளியிடும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலின் அட்டை வெளியானது.  தமிழ்நாட்டுக்கு ஜனநாயக அரசியலைக் கற்பித்த முன்னோடியான பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகளையும்,  அவரது வரலாற்றையும் பேசும் இந்நூலை உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவான இந்தியத் தேர்தல் சமயத்தில் வெளிக்கொண்டுவருவது சாலப் பொருத்தமானது. ஏனென்றால், ஒரு சாமானியனாலும் அரசியல் கட்சி தொடங்க முடியும்; ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று முன்னுதாரணத்தைத் தமிழ்நாட்டின் வழி சுதந்திர இந்தியாவில் உருவாக்கியவர் அண்ணாதான்.

தலைமகனுக்கு மரியாதை

இந்திய அரசியல் வானில் தனித்துவமான பேரொளி அண்ணா. தமிழினத்தின் ஆன்மா என்று அண்ணாவின் குரலைச் சொல்லலாம். தாய்த் தமிழ்நாட்டுக்கு அந்தப் பெயரை மீட்டெடுத்துச் சூட்டியவர் அண்ணா. ‘மாநிலங்களால் ஆனது இந்தியா; மாநிலங்கள் டெல்லியின் கிளைகள் அல்ல’ என்பதை டெல்லிக்கு ஆழமாக உணர்த்தியவர். இந்திய ஒன்றியத்தைப் பிற்பாடு உருவான ஐரோப்பிய ஒன்றியம் அளவுக்கு அதிகாரப் பரவல் மிக்க தேசமாகக் கற்பனைசெய்தவர்.

அண்ணாவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லும் நல்ல நூல் ஒன்று தமிழில் இல்லை என்ற குரல் நீண்ட காலமாக ஒலித்துவந்த நிலையில், அந்தக் குறையைப் போக்கும் வகையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது ‘மாபெரும் தமிழ்க் கனவு’.

அண்ணாவின் வாழ்க்கை வரலாறு, சாமானியர்களைப் பிரதிபலித்த ஒரு கட்சியைப் பதினெட்டு ஆண்டுகளுக்குள் ஆட்சியில் அமர்த்தவும், அரை நூற்றாண்டு ஆகியும்  அவர் வழிவந்த கட்சிகள் இன்னும் தமிழ்நாட்டில் கோலோச்சவும் அண்ணா அன்று அமைத்த அடித்தளம், அண்ணாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான சொற்பொழிவுகள், அவருடைய சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகள், கடிதங்கள், அவருடைய அரிய பேட்டிகள், சமகால அரசியல் சூழலில் அண்ணாவின் அரசியலுக்கான பொருத்தப்பாட்டைப் பேசும் அறிவுஜீவிகளின் கட்டுரைகள் என்று விரிவாக வரவிருக்கும் இந்நூலின் அட்டை சென்னையில் வெளியிடப்பட்டது.

அரசியல், கலை, அறிவுத் துறை என்று அண்ணா பங்கெடுத்துக்கொண்ட மூன்று துறைகளைச் சார்ந்தோரையும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த வெளியீட்டில் பங்கேற்கச்செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இதன்படி அரசியல் துறை சார்பில் தமிழ்நாட்டின் முதல்வரும், அண்ணாவின் பெயரில் அமைந்த அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவரும் அண்ணா தொடங்கிய திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின், அண்ணாவின் வீட்டின் பெயரான ‘தாயகம்’ என்ற பெயரைத் தன்னுடைய கட்சித் தலைமையகத்துக்குச் சூட்டியவரும், மதிமுக பொதுச்செயலருமான வைகோ, அண்ணாவின் அரசியல் தாயகமான திகவின் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்கத்துக்கு வெளியே இன்று திராவிடச் சித்தாந்தத்தை உரக்கப் பேசுபவரும், விசிகவின் தலைவருமான தொல்.திருமாவளவன் ஆகியோர் வெளியிட்டனர்.

முன்பதிவு தொடக்கம்

மிக விரைவில் வெளியாகவிருக்கும் இந்நூலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. 800 பக்கங்களைக் கொண்ட, கெட்டி அட்டைக்கட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்நூலின் விலை ரூ.500. நேரில் முன்பதிவுசெய்ய விரும்புவோர் சென்னை, 124, வாலாஜா சாலையில் உள்ள ‘இந்து தமிழ்’ அலுவலகத்தில் காலை 10 - மாலை 5 மணிக்குள் பணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

அஞ்சல் வழி பணம் அனுப்ப விரும்புவோர் காசோலைகளை ‘கேஎஸ்எல் மீடியா லிமிட்டெட்’ என்ற பெயருக்கு மேற்கண்ட முகவரிக்குத் தங்கள் வீட்டு முகவரி, செல்பேசி எண்ணைக் குறிப்பிட்டு அனுப்பலாம். இது நீங்கலாக இணையத்தின் வழி முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர் கீழ்க்காணும் இணைப்புக்குச் சென்று, பணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். https://www.kamadenu.in/publications

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள: 7401296562, 7401329402.

இலவச அஞ்சல் சலுகை

அறிமுகச் சலுகையாக மார்ச் 15 முதல் 25 வரை இந்நூலுக்கு முன்பதிவுசெய்துகொள்ளும் அனைவருக்கும் அஞ்சல் செலவு ஏதும் இல்லாமல் புத்தகத்தை அனுப்பிவைக்க ஏற்பாடுசெய்திருக்கிறது ‘தமிழ் திசை’ பதிப்பகம். அதேசமயம், குறுகிய காலச் சலுகை மட்டுமே இது. இந்த ஜனநாயகத் திருவிழாவை அண்ணாவோடு கொண்டாடுவோம்!

‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்: https://www.kamadenu.in/publications

SCROLL FOR NEXT