சிறப்புக் கட்டுரைகள்

புதிய சமுதாயம் என்று பிறக்கும்?

செய்திப்பிரிவு

தாளமுத்து நடராசனைத் தந்தோம். பிணமாகத் தந்தார்கள்; சாதாரணப் போர் என்று சொல்லிவிட முடியுமா? என் கண்ணாலே பார்த்தேன். கும்பகோணத்தில் 144 தடை உத்தரவை மீற நான் சர்வாதிகாரியாகத் தேவைப்பட்ட காலம். கையிலே கொடி ஏந்தி, தடை உத்தரவு ஒழிக என்று ஒலித்துச் சொல்வார்கள்; போலீஸ் வேனிலே வந்து இறங்குவார்கள். வீதி வழியே இப்படிப் போகக் கூடாது என்பார்கள்; நண்பர்கள் போய்க் கொண்டே இருப்பார்கள். உடனே தடி பேசும். தோழர்கள் கீழே விழுந்தார்களே தவிர, திரும்பி ஓடியதில்லை. இரத்த ஆற்றிலே நீந்தினார்கள். கடைசியிலே அடித்தடித்து போலீசார் ஓய்ந்தனரே தவிர, படை வீரர்கள் ஓடவில்லை. ஒருநாள், நண்பர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதித்தன் என்னிடம் வந்தார்.

“என்ன அண்ணாதுரை, உன் தொண்டர்களை அடிக்க வேண்டுமென்றால், நாங்கள் கண்களையல்லவா மூடிக்கொண்டு அடிக்க வேண்டியிருக்கிறது? மண்டை பிளந்து ரத்தம் ஓடினாலும் தாளமுத்து நடராசா என்றுதானே கீழே வீழ்கிறார்கள்! நான் இருக்கிற ஊரிலே இந்தப் போராட்டத்தை ஏனய்யா வைத்துக்கொண்டாய்?” என்று கேட்டார். கண்களிலிருந்து கீழே விழக் காத்திருக்கும் கண்ணீருடன் கேட்ட அவருக்கு நான் சொன்னேன். “உங்கள் கடமை அடிக்கிறீர்கள். எங்கள் தொண்டரின் மண்டையிலிருந்து வரும் செந்நீரும் சட்டத்துக்குப் பயந்து, பாதுகாவலராக இருக்கும் உங்கள் கண்களிலே பொங்கிய கண்ணீரும் சேர்ந்தால் - அப்படி என்று சேர்கிறதோ - அன்றுதான் ஒரு புதிய சமுதாயம் பிறக்கும்!”

சென்னையில் 11,12-7-1953-ல் நடைபெற்ற சென்னை மாவட்ட திமுக மாநாட்டில் பேசியதிலிருந்து...

‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்: https://www.kamadenu.in/publications

SCROLL FOR NEXT