திராவிட இயக்கப் பேரூற்றின் மேற்பரப்பை 1920-1930-களில் நிரப்பி இருந்த பெரும்பான்மைத் தலைவர்கள், தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தின் பெரும் பகுதிப் பார்வையாளர் - வாசகர் மனவெளிகளில் ஊடும் பாவுமாய்ப் பின்னிப் பிணைந்திருந்த ஊடக வலைப்பின்னல்களைத் தங்களின் அக வெளிப்பாட்டுக்கான ஆக்கக் கருவிகளாய்த் தொடர்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் ஆக்கி, அதில் பயணித்துக்கொண்டே சமூக, அரசியல் களங்களில் தங்களை நிலைநிறுத்தியிருந்திருக்கின்றனர் என்பதில் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. 1970-கள் வரை மிக அழுத்தமாகத் தமிழின் பெரும்பான்மைப் பார்வையாளர் - வாசகர் மனத்தின் தேட்டத்தை நிறைவுசெய்யக்கூடியதாக அவர்களின் கருத்தியல்களும் செயல்பாடுகளும் அமைந்திருந்தன என்பதே உண்மை!
ஒவ்வொன்றுக்கும் ஒரு மாற்று
பேச்சு, எழுத்து, அச்சு, இசை, கூத்து, திரைப்படம் என்று தகவல்தொடர்பின் அன்றைய அனைத்துத் தடங்களையும் தங்களுக்கானதாய் ஆக்கிக்கொண்டதாலேயே - கைரேகைகளாய் அனைத்துத் தடங்களும் அவர்களின் கைகளுக்குள் அடங்கிக் கிடந்ததாலேயே - அவையெல்லாம் அவர்களுக்குச் சாத்தியமாகியிருந்தன. மேற்கூறிய தகவல்தொடர்பு ஊடகங்களில் ஒன்றிலோ இரண்டிலோ பலவற்றிலோ அல்லது அனைத்திலுமோ ஈடுபாடும் செயல்திறனும் கொண்டவர்களாய் திராவிட இயக்கத்தின் அன்றைய தலைவர்கள் பலர் இருந்திருக்கின்றனர் என்பது வியப்பைத் தரவல்லது. அது இயல்பாக நடந்தேறியது என்பதைவிடவும் அளப்பரிய படைப்பாற்றல் கொண்ட அவர்களுக்குள் உள்முகமாய்க் குமுறிக்கொண்டிருந்த சமூகக் கோபத்தின் இயங்கியல் பருண்மைக் கட்டுமானமாய் ஒருங்கமைந்ததே ‘திராவிட இயக்கம்’ என்று கொள்வது பொருத்தமானது!
அதனாலேயே அவர்களின் அனைத்துச் சமூகச் செயல்பாடுகளிலும் ‘பழமைக்குப் பயணச்சீட்டு; புதுமைக்கு நுழைவுச்சீட்டு’ என்கிற குணரீதியான முரண் மாற்றங்கள் சமூகத்தளத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. மனுநீதிக்கு எதிரான சமநீதி! ஆதிக்கத்துக்கு எதிரான சமத்துவம்! சுரண்டலுக்கு எதிரான தோழமை! வைதீகத்துக்கு எதிரான சுயமரியாதை! கட்சி, உறுப்பினர் என்பதன் பதிலியாய், ரத்த சொந்தமாய் வந்தமர்ந்த ‘ஐயா - பிள்ளைகள்’, ‘அண்ணன் - தம்பி’ உறவுநிலை! புராணங்களுக்கு எதிராக அறத்தைப் பேசும் திருக்குறள்! வெறும் விவரணப் பேச்சுக்குப் பதிலியாக விவரிப்பு சார்ந்த விவரணப் பேச்சு! சாதிய - வட்டார மொழி நடைக்குப் பதிலாக எதுகையும் மோனையும் சிந்துபாடும் அலங்கார மொழிநடை! வாசிப்புக்குக் கட்டியம் கூற அச்சுக்கும் அறிவுக்கும் தீனிபோடும் மலிவு விலைப் பகுத்தறிவு நூல்கள் - பத்திரிகைகள்! கர்நாடக இசைக்குப் பதிலியாகத் தமிழிசை! இந்த வரிசையில்தான் கடவுளர்களைக் கதாபாத்திரங்களாக்காமல் மனிதர்களைக் கதாபாத்திரங்களாக்கிய சமூக நாடகங்களும் திரைப்படங்களும் வருகின்றன. எந்தச் சாமியின் அருளும் இல்லாமல், ஒருவரே இத்தனை உருவத்துக்குள்ளும் உருமாறி உருமாறிப் பயணிப்பது அண்ணாவுக்குச் சாத்தியமாகியிருந்தது. அவர் வழிவந்த பலருக்கும் சாத்தியமாகியிருந்தது.
இரணியன் தொடங்கி வைத்த இயக்கம்
நாடகமும் திரைப்படமும் பெரும் முதலீடுகள் சார்ந்த துறைகள்; இந்த அமைப்புகளுக்குள்ளும் தங்கள் எழுத்தாயுதங்களால் இலகுவில் ஊடுருவி, அந்நிறுவனங்களையே தங்கள் கையகப்படுத்திய அசகாய சக்தி அவர்களிடம் இருந்திருந்தது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் (வங்கத்துக்கு இடதுசாரிகள் நீங்கலாக) கட்சி தனது செயல்திட்டத்தில் நாடகக் குழுவையும் அங்கமாக்கியது வேறெங்கும் நடந்ததாகத் தெரியவில்லை. அண்ணாவின் காலம் வரை திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளில் ஒரு பகுதிச் செயல்பாடாய் - மக்களை ஈர்த்த பெரும் செயல்பாடாய் - நாடகச் செயல்பாடு குறிப்பிடும்படி அமைந்திருந்தது.
திராவிட இயக்கச் சிந்தனைகளின் முதல் நாடக விளைச்சலாக இயக்கச் சிந்தனையாளர்களால் - நாடக வல்லுநர்களால் சுட்டப்பெறுவது 09.11.1934-ல் சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில், பெரியார் தலைமையில் நிகழ்ந்த பாரதிதாசனின் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ நாடகம்தான்! தொன்மக் கதைகளை எடுத்துக்கொண்டு அதற்குப் புதிய உள்ளொளி பாய்ச்சிய வகையிலும் இது முக்கியமான ஒன்று. இந்நாடகம் பல பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படுகிற நிலையில், அரசால் இந்நாடகம் தடைசெய்யப்பட்டதென்பது இதன் முக்கியத்துவத்தைக் கூட்டுகிறது. இதுவே, பின்வந்த இயக்க நாடகங்களான ‘கீமாயணம்’ (எம்.ஆர்.ராதா), ‘நீதிதேவன் மயக்கம்’ (அண்ணா), ‘கிந்தனார்’ (என்.எஸ்.கிருஷ்ணன்), ‘வீர வாலி’ (ஜலகண்டபுரம் கண்ணன்), ‘இலங்கேஸ்வரன்’ (துறையூர் மூர்த்தி) போன்ற புத்தொளி பாய்ச்சிய நாடகங்களுக்கு மூல வேராகும்.
திசை மாற்றத்துக்கு வித்திட்ட அண்ணாவின் உரை
இதற்கடுத்து, இருபதாம் நூற்றாண்டில், திராவிட இயக்கச் சிந்தனைகள் வலிமை பெறுகிற ஒரு காலகட்டத்தில், தமிழ் நாடக உலகில் நிகழ்ந்த – அதற்குப் பின் இதுவரையும் நிகழாதிருக்கிற ஒரு முக்கிய நிகழ்வைத் தொட்டுச்செல்லாமல் தமிழ் நாடகத்தின் திசைமாற்றம் பற்றிப் பேச இயலாது. தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கென்று தமிழ்நாட்டில் 11.02.1944-ல் ஈரோடு சென்ட்ரல் தியேட்டரில் கூட்டப்பட்டது ‘தமிழ் மாகாண நாடகக் கலை அபிவிருத்தி மாநாடு’. பம்மல் சம்பந்தனார் தமிழ் நாடகக் கொடியேற்றித் தொடங்கிவைக்க, தியாகராஜ பாகவதர் இம்மாநாட்டைத் திறந்துவைக்கிறார்.
இந்த மாநாட்டை எதிர்த்து, பெரியாரின் சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்டு, தொழில்முறை நாடகக் குழுக்களிலிருந்து வெளியேறிய சிலர், ‘முத்தமிழ் நுகர்வோர் சங்கம்’ எனும் பெயரில் மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். புராண நாடகங்கள் மட்டுமே தொழில்முறை நாடகக் குழுக்களால் நடத்தப்படுவதை எதிர்த்தே இந்த மறியல் நடத்தப்பட இருந்தது. ஆனால், 23.04.1943-லேயே ஈரோட்டில் பெரியார் தலைமையில், தான் எழுதி, நடித்து, நெறிப்படுத்தியிருந்த ‘சந்திரோதயம்’ எனும் சீர்திருத்த நாடகத்தை ‘திராவிட நடிகர் கழகம்’ எனும் தன் குழுவைக் கொண்டு அரங்கேற்றி, அதன் வெற்றியால் முன்வரிசை நாடகக்காரராகவும் அன்று அறியப்பட்டிருந்தார் அண்ணா!
அண்ணாவின் தலையீட்டால் அப்போராட்டம் நின்றுபோனது. அது மட்டுமன்றி, அம்மாநாட்டிலும் ‘கலையின் நிலைமை’ எனும் பொருளில் புராண நாடகங்களின் சமகாலப் பொருத்தமின்மை மற்றும் சீர்திருத்த நாடகங்களின் தேவைகுறித்து அண்ணா உரை நிகழ்த்தினார். மாநாட்டின் பெரும் பகுதியை அண்ணா உரை ஏற்படுத்திய விவாதங்களே நிரப்பித் தீர்த்தன. எந்தத் தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமலேயே அந்த முதல் மாநாடு முடிவுற்றது. அதுவே ஒருவகையில் திராவிட இயக்கத்தவரின் வெற்றியாகப் பேசப்படலாயிற்று.
நடிப்பிசைப் புலவரின் நாடகக் குழுவான ‘கிருஷ்ண நாடக சபா’ அண்ணாவின் நாடகங்களான ‘ஓர் இரவு’, ‘வேலைக்காரி’ போன்றவற்றைத் தொடர்ச்சியாக நடத்திவந்தது. கட்சி நிதிக்காக இந்நாடகங்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. அண்ணாவின் ‘சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ 1946-ல் அரங்கேறியது. அதில் ‘சிவாஜி’யாக நடித்த நடிகர் ‘கணேசன்’ பின்னாளில் சிவாஜி கணேசன் ஆனார். நாடகத்தின் தொடர்ச்சியாகவே திரைத் துறையையும் கைப்பற்றியது திராவிட இயக்கம்.
கலையை அண்ணா அணுகிய விதம்
அண்ணாவும் அவர் வழிவந்தவர்களும் நாடகத்தை எப்படிப் பயன்படுத்தினர் என்பதை நாம் உணர வேண்டும் எனில், கலை சம்பந்தமாக அண்ணாவுக்கு இருந்த தீர்க்கமான கருத்துகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 22.08.1944-ல் அவர் ஆற்றிய ‘கலையின் நிலைமை’ உரையில் அவர் குறிப்பிட்டிருக்கிற கீழ்க்காணும் முக்கியமான கருத்துகள் இதுகுறித்து நமக்கு ஒரு பார்வையை வழங்குகின்றன:
1. இயலை வளர்க்கவும் இசையை வளர்க்கவும் அமைப்புகள் இருக்கின்றன. நாடகக் கலை வளர்ச்சிக்கான அமைப்பும் முயற்சியும் இல்லை. எனவே, எனது நண்பர் தோழர் சிவதாணு இதற்கான ஓர் தனி மாநாட்டை, முதன்முறையாகக் கூட்டியதுபற்றி நான் அவரைப் பாராட்டுகிறேன்.
2. திருச்சி நகரசபை ஒன்றில் மட்டுமே நாடகத்துக்கெனத் தனி தியேட்டர் அமைக்கப்பட்டிருக்கிறது. அதுபோல, ஒவ்வொரு நகரசபையும் செய்ய முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்காரும் செல்வவாணர்களும் நாடகக் கலை அபிவிருத்திக்கு உதவி அளிக்க வேண்டும். இவற்றுக்காகப் பொதுமக்கள் முயல வேண்டும்.
3. நாடகக் கலை அபிவிருத்தி அடைய வேண்டுமென்றால், நாடகக் கலையின் முக்கிய அம்சமாக விளங்கும் நடிகர்களுக்கு நல்ல சம்பளம், வாழ்க்கை வசதி முதலியன கிடைக்க வேண்டும். லாபப் பங்கீடும் தரப்பட வேண்டும்... பங்குதாரர்களைக் கொண்ட ஒரு லிமிடெட் கம்பெனி அமைக்கப்பட வேண்டும். அதிலே சீர்திருத்த நாடகங்கள் நடத்தப்பட வேண்டும். அதன் வருவாயை நாடகத் தொழிலாளருக்கு லாபப் பங்கீடாகத் தர வேண்டும்.
4. சர்க்காரும் பொதுமக்களும் நாடகக் கலைக்கு உதவ வேண்டுமென்று நான் சொன்னேன். அந்த உதவியை நாடகக் கலையினர் பெற வேண்டுமென்றால், அதற்கு ஈடாக அவர்கள் பயனுள்ள காரியத்தைச் செய்ய வேண்டும். அறிவு வளர்ச்சிக்கான, சமூகச் சீர்திருத்தத்துக்கான நாடகங்களை நடத்துவதே அது. கலை அபிவிருத்தியும் அதுவே.
5. ராமாயணம், பாரதம், பெரியபுராணம் போன்றவை புளுகுகள்தான்; என்றாலும், அவற்றிலே கலை இருக்கிறது என்று கூறிவிட்டு, அவற்றைக் கொளுத்தினால், மூடப்பழக்கவழக்கங்களைப் போக்கடிக்க முடியாது என்று சர்.சண்முகம் பேசினார். கலை விஷயமாக, எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் உள்ள அபிப்பிராயத்துக்கும் தலைவர் சண்முகம் அவர்களின் அபிப்பிராயத்துக்கும் பேதம் இருக்கிறது. இராமாயணம், பெரியபுராணம் ஆகியவை புளுகுகள்; அவை மக்களின் மனதைப் பாழ்செய்கின்றன, ஒரு இனத்தை ஒரு இனம் ஆதிக்கம் செய்ய வேலை செய்கின்றன; அவற்றை மக்கள் ஒதுக்க வேண்டும் என்பதைக் காட்டும் ஒரு கண்டனக் குறியாகவே அவற்றைக் கொளுத்த வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோமேயன்றி, அவற்றைக் கொளுத்திவிடுவதாலேயே மூடப்பழக்க வழக்கம் போய்விடும் என்று நாங்கள் சொன்னதில்லை; அவ்வளவு பைத்தியக்காரர்களல்ல நாங்கள் !
6. சிலப்பதிகாரத்தின் சுவையை உணர, அந்த நூல் தோன்றிய காலமாகிய 2,000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த கண்ணையும் மனதையும் கொண்டு பார்க்க வேண்டும் என்று சர்.சண்முகம் கூறினார். அத்தகைய கண்ணையும் மனதையும் பெற நான் அசக்தனாக இருக்கிறேன். இனி 2,000 ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் எப்படி இருக்கும் என்ற சிந்தனையும், கண்ணும் கொள்ள வேண்டுமென்றே எனக்கு விருப்பமிருக்குமே ஒழிய, 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் பற்றிய அக்கறை இராது. சீர்திருத்த விஷயமாக நான் கொண்டுள்ள அபிப்பிராயம், சர்.சண்முகம் அவர்கள் முன்னாளில் செய்த சொற்பொழிவுகளைக் கேட்டதால் ஏற்பட்டவை என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
7. பொதுவாகவே, கலை விஷயமாக நாங்கள் கொண்டுள்ள கருத்து இதுதான் - கலை மக்கள் உள்ளத்துக்குக் களிப்பூட்டும் கருவியாக இருப்பின், அதனிடம் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், கலை ஒரு இனம் மற்றோர் இனத்தை அடக்கியாள உபயோகமாகும் வலையாக இருக்கிறது. எனவே, அந்த வலையின் பின்னால் எத்தனைப் பெரிய சக்திகள் இருந்தாலும், ஒன்று, வலையைச் சின்னாபின்னப்படுத்துவது அல்லது அந்த முயற்சியிலே, நாங்கள் சின்னாபின்னமானாலும் கவலை இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.
8. எலும்பு பெண்ணுருவான அருட்கதைகள் பற்றிப் பாடியும் ஆடியும் வந்தது போதும். நமது பெண் மக்கள் எலும்புருவானது தவிர பலன் எதுவுமில்லை. இனி பெண்கள் எலும்புருவாகும் பரிதாப வாழ்வைச் சித்தரிக்கும் நாடகங்களை நடத்துங்கள். கண்ணைப் பெயர்த்தெடுத்து அப்பிய கண்ணப்பர் கதையை ஆடியது போதும்; இனி கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்பவன் ஊரிலே கொள்ளையடிக்கும் விஷயத்தை விளக்கும் நாடகத்தை நடத்திக்காட்டுங்கள். வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டுங்கள். ஏழையின் கண்ணீர், விதவையின் துயரம், மதத் தரகரின் மமதை ஆகியவற்றை விளக்கும் அறிவு வளர்ச்சி நாடகங்களை நடத்துங்கள்.
இவையே அண்ணாவினுடைய உரையின் சாரப் பகுதிகள்.
அரசியலற்ற படைப்பு உண்டா?
புதிய சூழலுக்கு ஏற்றதான அழகியல் வெளியை ஈடுசெய்யும் நாடக உருவாக்கம் பற்றி, அதன் வடிவாக்கம் பற்றிப் பேசப்படாவிடினும், இன்றைக்கும் இயக்கம் சார்பில் கருத்தியலைக் கைவாளாய்க் கொண்டு செயல்படும் நாடகக்காரர்கள் கைக்கொள்ளத்தகும் கருத்தியல் கலையை இவ்வுரை முன்மொழிகிறது. அரசியலை விட்டொழிந்த ‘படைப்பு’ என்பது எதுவுமில்லை; படைப்புகள் வழி செல்லாத ‘வெற்று அரசியல்’ என்பதுமில்லை என்ற புரிதலின் ஊடாகவே கலையைக் கைகொண்டார் அண்ணா. கலையை அணுகுவதற்கு அவர் சொல்லிச்சென்ற பாதையும் அதுவே!
‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்: https://www.kamadenu.in/publications