தமிழ்நாட்டில் அண்ணா அளவுக்குத் தொண்டர்கள் உரிமையோடும் பாசத்தோடும் அணுகிய ஒரு தலைவர் கிடையாது; தலைவர்-தொண்டர் உறவில் அவர் உருவாக்கிய புது இலக்கணத்துக்கு உதாரணம் இச்சம்பவம்.
அண்ணா மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காலம் அது. மதுரையில் ஒரு கூட்டத்தில், “கசங்கின வேட்டி சட்டையோடு இந்த ஆள் போனா, டெல்லிக்காரன் தமிழனைப் பார்த்தாலே சிரிப்பான்” என்று காங்கிரஸார் பேசிய தொனி, அண்ணாவின் தம்பியர் இருவரைக் காயப்படுத்தியது. அதற்குப் பின் என்ன நடந்தது? இருவரில் ஒருவரான அ.குருசாமி (87) நம்மிடம் சொன்னார். “அது 1962. திமுகவின் உட்கிளையான இளங்கோ மன்றச் செயலாளரா இருந்தேன். அண்ணா உடையைப் பத்தி அவங்க பேசுனதை என்னால தாங்கிக்க முடியலை. நானும் மன்றத் தோழர் க.மீனாட்சிசுந்தரமும் எங்கக் காசுல எங்க அண்ணாவுக்கு கோட்டுத் தைச்சுக்கொடுக்க முடிவுசெஞ்சோம்.
மதுரையில அன்னைக்கு ‘பாம்பே டெய்லர்’ ராஜுதான் பிரபல்யம். இருநூறுபா ஆகும்னாரு. அது அப்போ பெருங்காசு. எங்கிட்டுப் போறது? வீட்டுக்காரி பாப்பம்மாள் நகையை அடகுவெச்சி நூறு ரூபா தேத்துனேன். அதேமாதிரி மீனாட்சி சுந்தரமும் நூறு தேத்துனாரு. அண்ணா எங்கே இருக்கார்னு தெரிஞ்சுக்கிட்டு, கையோடு ராஜுவையும் கூட்டிக்கிட்டு, திருச்சி போனோம். ஏதோ எழுதிக்கிட்டு இருந்தவர்கிட்ட தகவல் சொல்லி அனுப்பினோம். சிரிச்சுக்கிட்டே வந்தவரை அளவெடுக்கும்போது அதிகாலை நாலு மணி. கொஞ்ச நாள்ல, மதுரைக்கு வந்த அண்ணாவுக்கு, ‘மாடர்ன் ரெஸ்ட்டாரன்ட்’ல ஒரு விருந்து கொடுத்து, கோட் - சூட்டைக் கொடுத்தோம். அண்ணா அதைப் போட்டுக்கிட்டதைப் பார்த்தப்போதான் அவர்கிட்ட ‘ஷூ’ இல்லங்கிறது உறைச்சுது. மறுநாள் அவர் கொடைக்கானல் கூட்டத்துல இருந்தார். ‘ஷூ’ வாங்கிக்கிட்டுப் போய்க் கொடுத்தோம். அவ்வளவு பெரிய மனுஷன்; எங்க அன்புத் தொல்லை எல்லாத்தையும் ஏத்துக்கிட்டார்!”
குருசாமி, அவர் நண்பர் மீனாட்சிசுந்தரம் இருவருமே மதுரை நகராட்சி அலுவலகத்தில் கடைநிலை ஊழியர்களாகப் பணியாற்றியவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்: https://www.kamadenu.in/publications