சிறப்புக் கட்டுரைகள்

சி.சுப்பிரமணியம்: நவீன இந்தியாவின் வழிகாட்டி

வ.ரங்காசாரி

தமிழ்நாட்டையும் இந்தியாவையும் வளப்படுத்தியதிலும் வலிமைப்படுத்தியதிலும் முக்கியப் பங்கு வகித்தவர் சி.எஸ். என்று அழைக்கப்படும் சி.சுப்பிரமணியம். 1930 ஜனவரி 30-ல் பொள்ளாச்சி அருகிலுள்ள செங்குட்டைப்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் அறிவியலில் இளங்கலைப் பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அரசமைப்புச் சட்டத்தை வகுத்த அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையிலும் உறுப்பினராக இருந்தார்.

1952 முதல் 1962 வரையில் அப்போதைய சென்னை மாகாண அரசில் கல்வி, சட்டம், நிதி ஆகிய துறைகளின் அமைச்சராகச் சிறப்பாகப் பணியாற்றினார். தமிழக சட்ட மன்ற முன்னவராகவும் பொறுப்பு வகித்தார்.  1962 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வென்றார். உருக்கு, சுரங்கத் துறை அமைச்சராகவும், பின்னர் வேளாண் துறை அமைச்சராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். கோதுமை, அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற பசுமைப் புரட்சி கண்டார். பால் பெருக்கு திட்டங்களிலும் தனிக் கவனம் செலுத்தி வெண்மைப் புரட்சியையும் உண்டாக்கினார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் உச்சம் பெற்றபோது மத்திய அரசு அதைக் கையாளும் விதத்தைப் பொறுக்க முடியாமல் பதவியிலிருந்து விலகினார். 1969-ல் காங்கிரஸ் பிளவுபட்டபோது இந்திரா காந்திக்கு ஆதரவாக இருந்தார். நெருக்கடி நிலை அமலின்போது மத்திய அரசில் நிதியமைச்சராகப் பதவி வகித்தார். சரண் சிங் தலைமையிலான அரசில் பாதுகாப்பு அமைச்சராக சிறிது காலம் பதவி வகித்தார். இந்தியத் திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும், 1990-ல் மகாராஷ்டிர ஆளுநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் இவர் மீது அண்ணாவுக்குப் பெரும் மதிப்பு உண்டு. தமிழக நலனுக்காக இருவரும் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். அமைச்சகத்தில் சி.எஸ். தொடர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அண்ணா குரல் கொடுத்திருக்கிறார்.  சி.சுப்பிரமணியனின் சாதனைகளுக்காக நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ 1998-ல் வழங்கப்பட்டது.  ‘வறுமை மீதான போர்’,  ‘இந்திய விவசாயத்தில் புதிய வழிமுறை’,  ‘நான் பார்த்த சில நாடுகள்’,  ‘நான் கனவு காணும் இந்தியா’ என்பன உள்ளிட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவருடைய நினைவாக சிறப்பு தபால்தலை, நாணயம் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT