கடந்த நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பதிப்புலகில் மிகவும் புகழ்பெற்ற அச்சுக்கூடம் சென்னை ரிப்பன் பிரஸ். இந்த அச்சுக்கூடம் சை.இரத்தின செட்டியாரால் 1894-ல் சென்னை முத்தியாலுபேட்டை தம்புச்செட்டித் தெரு 87-ம் எண் இலக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு, 1942 வரை சிறப்புடன் இயங்கிவந்தது. அன்றைய நாளில் மிக முக்கியமான தமிழறிஞர்களும், ஆளுமை மிக்க அரசியல் பிரமுகர்களும் கூடிச் சந்திக்கும் முக்கிய கேந்திரமாக விளங்கியது இந்த அச்சகம். தேசபக்தர் வ.உ.சிதம்பரனார், சுவாமி சகஜானந்தரை முதன்முதலில் சந்தித்ததும் இந்த அச்சகத்தில்தான்.
சை.இரத்தின செட்டியார் 1841-ல் சிவசங்கரன் செட்டியாருக்கும் முனி அம்மைக்கும் பிறந்தவர். தமிழ் மட்டுமே பயின்ற இரத்தின செட்டியார், ஈசூர் சச்சிதானந்த சுவாமிகளிடமும், திருக்குறள் சாமியார் கிருஷ்ணானந்த அடிகளிடமும் வேதாந்த பயிற்சியை மேற்கொண்டவர். கோடக நல்லூர் சுந்தர சுவாமிகளிடமும், வடலூர் இராமலிங்க சுவாமிகளிடமும் நன்கு பழகியவர்.
தமிழ் உலகில் அச்சக உரிமையாளராகவே சுருக்கப்பட்டு அறியப்பட்ட இரத்தின செட்டியார், வட சென்னையை மையமாகக் கொண்டு வேதாந்த நெறி என்னும் அத்வைத சமயத்தைப் பரப்பியவர். தமிழ்வழி அத்வைதக் கொள்கைக்கு வித்திட்ட தத்துவராயரைத் தொடர்ந்து, அத்வைதக் கொள்கையைத் தமிழில் தெள்ளத் தெளிவாகப் புரியவைத்தும், சாதி மத வேறுபாடுகளைக் களைந்தும் ஆன்மநேய ஒருமைப்பாட்டை வளர்க்கும் பெருநெறியாகக் கொண்டு சேர்த்தவர் இல்லற ஞானி இரத்தின செட்டியார். சென்னை நகரில் அக்காலகட்டங்களில் இயங்கிய பல்வேறு மடங்களில் வேதாந்தப் பயிற்சி மேற்கொள்பவர்கள், தத்துவ விசாரணை புரிபவர்களுக்கு இரத்தின செட்டியார் எழுதிய 24 நூல்கள் மிகவும் உதவிகரமாக விளங்கிவந்தன.
புனைபெயர்களின் நாயகன்
அத்வைதிகளுடைய கொள்கைகளைத் தாங்கி, பிரம்ம வித்யா, ப்ரமாவதீன், சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளும், சித்தாந்திகளின் கொள்கைகள் சார்பாக ஞானாமிர்தம், இந்து சாதனம், நாகை நீலலோசனி போன்ற இதழ்களிலும் மாயாவாத – சித்தாந்த தத்துவப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இவருடைய காலகட்டத்தில் திருக்குறளின் ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற முதற் குறள் குறித்து நீண்ட நெடிய தத்துவ விவாதம் மேற்குறித்த இதழ்களில் நடைபெற்றுவந்தது. முதற்குறள் அத்வைதம் குறித்துப் பேசுகிறது என்று வேதாந்திகளும், அதனை மறுத்து சித்தாந்திகளும் நீண்ட விவாதங்கள் நடத்தி, நூறு தூஷணங்கள் அடங்கிய தொகுதியாக மாறிப்போனது.
இந்த விவாதம் தமிழ் மற்றும் வட மொழித் தன்மை குறித்தும், இலக்கணங்கள் குறித்தும், திராவிட வேர்ச்சொல் குறித்தும் பல விஷயங்கள் தத்துவார்த்தமாக விளக்கி பெரிய நூலாகிப்போனது. அந்த நூலின் பெயர் முதற்குறளுண்மை அல்லது முதற்குறள்வாத நிராகரண சததூஷணி என்று பெயரிடப்பட்டு ‘துவிதமததிரஸ்காரி’ என்ற புனைபெயரால் வெளியிடப்பட்டது. இப்புனைபெயருக்குச் சொந்தக்காரர் இவரே. இப்பெயர் மட்டுமல்லாது ஆரியன், ஓர் நண்பன், இந்து, நியாயவாதி, ஓர் பிரம்மாவாதி, அத்வைத சித்தாந்தி போன்ற பல புனைபெயர்களில் இவரால் எழுதப்பட்ட தத்துவ விவாதக் கட்டுரைகள்தாம் அன்றைய காலங்களில் தத்துவ விசாரணை புரிபவர்களால் தவறாமல் படிக்கப்பட்டு வந்தது.
துறவா! சந்நியாச வேடமா?
வியாசர்பாடியில் சமாதி எழுந்தருளிய கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளுடைய குரு இவரே. தனது குருவினிடத்தில் சந்நியாசம் வழங்க வேண்டி முறையிட்டார். அச்சமயம் இரத்தின செட்டியார், “சந்நியாசம் ஆரிய மரபுக்கு உரியது. துறவறம் தமிழ் மரபுக்கு உரியது. ஆகையால், நீ கைக்கொள்ள வேண்டியது துறவறம் மட்டுமே. சந்நியாச வேடமல்ல” என்று அறிவுறுத்திவிட்டு, நான் எனது குருவினிடத்தில் வேண்டியபோது, அகத்துறவு மட்டுமே கொள்ளச் செய்தார் என்றார்.
தனது வாழ்நாளில் பயன்படுத்திய ‘ரிபு கீதை’ என்ற நூலினைத் தனது சீடன் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளுக்கு அன்புடன் வழங்கினார். சிவப்பிரகாச சுவாமிகள் அதே நூலினைத் தன் வாழ்நாளில் பயன்படுத்திவிட்டு, சுவாமி சகஜானந்தருக்கு அன்புடன் வழங்கி ஆசிர்வதித்தார் என்பது வரலாறு.
இரத்தின செட்டியாரின் மற்றுமொரு சீடர் கோ.வடிவேல் செட்டியார். மிடுக்கு நடையுடன் எழுதிய முதல் தத்துவ நூலினைத் தனது குருவிடம் சமர்ப்பித்தார் வடிவேல் செட்டியார். நூலின் சில பகுதிகளை மட்டும் படித்துவிட்டு வடிவேல் செட்டியாரிடம் இந்த நூலை நீரே படித்துக்கொள்ள எழுதுகிறீர்களா அல்லது மற்றவர்களும் பயன்பெற எழுதியுள்ளீர்களா என்று கேட்க, வடிவேல் செட்டியார் ஆடிப்போய்விட்டார்.
நூல் என்பது சாதாரண மனிதர்களும் படித்துப் புரிந்துகொள்ளும் விதத்தில் அமைய வேண்டும் என்று அறிவுறுத்திவிட்டு, கையில் தீப்பெட்டி ஒன்றை வழங்கி, ‘இந்த நூலினை எரித்து விடு’ என்று ஆணையிட, சற்றும் தாமதிக்காமல் அவர் கண்முன் உடனே எரித்துவிட்டார் வடிவேல் செட்டியார். அன்று முதல், தத்துவ நூல்களினைப் பாமரர்களும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற நோக்குடன் எளிமையான மொழியில் எழுதவும், படிக்கவும், பேசவும் முற்பட்டார் வடிவேல் செட்டியார்.
பரிதிமாற்கலைஞரின் இரங்கற்பா
சென்னையில் கிறிஸ்துவப் பாதிரிமார்களால் சமயமாற்றம் செய்துவந்த வேளையில், சமய மாற்றத்தைத் தவிர்க்க வேண்டி குஜராத்தைச் சேர்ந்த சிவசங்கர பாண்டையாஜி அவர்களால் துவக்கப்பட்டது. சென்னை தங்கசாலையில் அமைந்துள்ள இந்து தியாலஜிக்கல் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்தை இவரது அறிவுறுத்தலின் பேரில் நிறுவப்பட்டு, அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்.
ஆரிய ஜனப்ரியன், ஆரிய பரிபாலினி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். இந்து டிராக்ட் சொசைடி அமைப்பு மூலம் பல்வேறு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டவர். தமிழகத்தில் இராமகிருஷ்ண இயக்கத்தின் பயன்தரக்கூடிய நூல்களை ஆரம்ப காலங்களில் அதிகமாக வெளியிட்டவர். இவரது அச்சகம்மூலம் வந்த பல்வேறு வெளியீடுகளால் தாம் மிகவும் பயனடைந்ததாக விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா குறிப்பிட்டுள்ளார். 08.02.1901 அன்று கைவல்யமடைந்தபோது, பரிதிமாற்கலைஞர் பாடிய இரங்கற்பா பாவலர் விருந்து என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
அன்றைய நாள் தத்துவ விவாத கண்டன நூல் திரட்டில் இரத்தின செட்டியாருடைய மறுப்பின் அணுகுமுறை யாரும் புண்படாத விதத்தில் தெளிவாக இருக்கும். புரியும் விதத்தில் அவர்களது கருத்துகளைக் கொண்டே அவர்களுக்கு பாடம் கற்பிப்பதும், அதேவேளையில் நாகரிகமான தொனியில் மறுப்புகளைப் பதிவுசெய்வதிலும் இவருக்கு இணை யாரும் இல்லை எனலாம். வெறுமனே அச்சகப் பதிப்பாளராக மட்டுமே அறியப்பட்ட ரிப்பன் பிரஸ் இரத்தின செட்டியார், சிறந்த தேசாபிமானி, மதாபிமானி, வேதாந்தியாகத் திகழ்ந்தவர் என்கிறார் அறிஞர் மகேசகுமார் சர்மா.
- ரெங்கையா முருகன், வட சென்னை வேதாந்த மடங்கள் குறித்து ஆய்வு செய்துவருபவர்.
தொடர்புக்கு: murugan72kani@gmail.com
பிப்.8: சை.இரத்தின செட்டியார் நினைவு தினம்