சிறப்புக் கட்டுரைகள்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு - 2021 குரலற்றவர்களைக் கணக்கிலெடுக்குமா?

பக்தவத்சல பாரதி

இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெறும் மாபெரும் கணக்கெடுப்பு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மட்டுமே. இது 1872 முதல் 150 ஆண்டுகளை நெருங்கிவிட்ட நிலையில், ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டை ஆள்பவர்களுக்கும், தேசத்தின் சமகாலத் தன்மையை அறிந்து திட்டமிடுபவர்களுக்கும், கொள்கைகளை வகுப்பவர்களுக்கும், நலத்திட்டங்கள் தீட்டுபவர்களுக்கும், மக்களை ஆய்வு செய்பவர்களுக்கும் மிக முக்கியமான தரவுகளைக் கொண்டுள்ள அறிக்கைகளாக இவை அமைகின்றன.

2021-ல் எடுக்கப்படவுள்ள கணக்கெடுப்புக்குத் தனி முக்கியத்துவம் உண்டு. சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக இப்போதுதான் ‘இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள்’ பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. 2019-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு அரசியல்ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

2011 கணக்கெடுப்புக்குப் பிறகு பல்வேறு சமூக அமைப்புகளும் பிராந்தியக் கட்சிகளும் சாதிக் கணக்கெடுப்பு தேவை என்று கோரி வந்துள்ளன. இந்த முடிவு பெரும் பயன்தரும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தியச் சமூகத்தைச் சாதியச் சமூகமாகவும், இந்தியப் பண்பாட்டைச் சாதியப் பண்பாடாகவும் காண வேண்டிய தேவை இன்னும் நீங்கவில்லை என்பதைச் சமூகவியலாளர்களும், மானிடவியலாளர்களும் உணர்த்தியுள்ளனர். இந்திய மக்கள்தொகையில் ‘இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள்’ பிரிவில் ஏறக்குறைய 41% பேர் இருக்கின்றனர் என 2006-ல் கணக்கிடப்பட்டது. இதனைத் தேசிய மாதிரி மதிப்பாய்வு நிறுவனம் வெளியிட்டது.

2021 கணக்கெடுப்பு மூலம் இந்த இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் பற்றிய விவரங்களும் அவை சார்ந்த ஆய்வு முடிவுகளும் மூன்றாண்டுகளில் நமக்குக் கிடைத்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய காலங்களில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முழுமையான விவரங்கள் 7, 8 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நம்முடைய பயன்பாட்டுக்குக் கிடைத்தன. 2021-ல் இந்த முன்னேற்றம் நிகழுமானால், அது மிகவும் வரவேற்கத்தக்கது!

தொழில்நுட்பப் புரட்சி

தலைமைப் பதிவாளர் அறிவிப்புப்படியும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்புப்படியும் 2021 கணக்கெடுப்புக்கான அடிப்படைப் பணிகள் தொடங்கிவிட்டன. வீடுவீடாகச் சென்று குடும்ப விவரங்களைச் சேகரிக்கும் பணி 2020-ல் நடைபெறும். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று தகவல் திரட்டுநர்கள் எழுதும் பட்டியல்களே மிகவும் அடிப்படையானவை.

இத்தகைய கோடிக்கணக்கான பட்டியல்கள் கட்டுக் கட்டாகக் கட்டப்பட்டு, டெல்லியில் உள்ள மத்தியக் கிடங்கில் பாதுகாக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை இவையெல்லாம் மின்னணுப் பதிவாகப் பாதுகாக்கப்பட உள்ளன. இது தொழில்நுட்பப் புரட்சியின் மாற்றமாகும்.

குடும்பப் பட்டியல் விவரங்கள் ஏதும் வெளியிடப்பட மாட்டாது. பட்டியல்களில் உள்ள தரவுகள் அனைத்தும் ஆய்வுசெய்யப்பட்டு, அட்டவணைகள் தயாரிக்கப்படும். அவை அனைத்தும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான இணையத்தில் பதிவேற்றப்படும். இந்தத் தரவுகள் 10 ஆண்டுகளுக்கு மின்னணு முறையில் பாதுகாக்கப்படும். அதன் பிறகு அவை கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைகளும் சவால்களும்

இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் பற்றிய கணக்கெடுப்பு என்பது மீதமுள்ள இந்த நூற்றாண்டு முழுவதற்குமான தேவைகளை நிறைவுசெய்வதாக அமைய வேண்டும்.  1931 கணக்கெடுப்புதான் இன்றுவரை சாதிகளுக்கான அடிப்படை வரைவாக இருந்துவருகிறது. சாதிகளின் இன்றைய சமூகப் பொருளாதார நிலைமைகளை அறியவும், கல்வி முன்னேற்றம் பற்றி அறியவும், அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கும், நலத்திட்டங்களுக்கான பயனாளிகளை இனம் பிரிப்பதற்கும், இப்படியான இன்னும் பல தேவைகளுக்கும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் பற்றிய குடிமதிப்பு தேவை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பின்போது சாதிகளையும் அதன் கீழ் உள்ள கிளைச் சாதிகளையும் துல்லியமாகப் பதிவிட வேண்டும். கிளைச் சாதிகளைத் தனிச் சாதிகளாக மாற்றிவிடக் கூடாது. இதற்கான பயிற்சியும் தெளிவும் அவசியமாகும். 1871 கணக்கெடுப்பில் 3,208 சாதிகள் பதியப்பட, அதற்கடுத்த 1881 கணக்கெடுப்பில் 19,044 சாதிகள் பதியப்பட்டன. 10 ஆண்டுகளில் இவ்வளவு சாதிகள் பெருகவில்லை. கிளைச் சாதிகள் எல்லாம் சாதிகளாகப் பதியப்பட்டதே தவறுக்குக் காரணமாகும். ஆனால், குரலற்ற பல இனக் குழுக்கள் இன்னும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் ஆய்வுக்குள் வந்து சேரவில்லை.

ஏறக்குறைய 400 ஆண்டுகளாகத் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நரிக்குறவர்கள் சமூகம் பற்றிய தரவுகள் நம்மிடம் இல்லை. நமக்கருகில் பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் ஊசி பாசி விற்கிறார்கள். பூம்பூம் மாட்டுக்காரர்களும் சாமக்கோடாங்கிகளும் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். குறவர்கள் கூடை, முறம் கட்டி நமக்குக் கொடுக்கிறார்கள்.

இவர்களைப் பற்றியும், நாடோடிகள், அரை நாடோடிகள், விளிம்பு நிலைச் சமூகங்கள், உதிரிச் சமூகங்கள் பற்றிய குடிமதிப்பு இல்லை. மாட்டை விரட்ட சாட்டை செய்வோரும், நெற்றியில் நாமம் இடும் நாமக்கட்டி செய்வோரும், கழுதைப் பால் விற்கும் நாடோடிகளும்கூடப் பதியப்பட வேண்டும். பண்பாட்டுப் பன்மையைக் காட்டுபவர்கள் இவர்களே. திருநங்கைகளைப் பற்றிய விவரங்களும் இல்லை. இத்தகைய குரலற்றவர்களின் குரலாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மாற்றப்பட வேண்டும்.

அலைகுடியினர் பல இடங்களுக்குச் சென்று சுற்றித் திரிந்தாலும் அவர்களுக்குச் சொந்த இடம் என்ற ஒன்று இப்போது உருவாகிவிட்டது. ஓரிடம் தங்கும் போக்கு அதிகரித்துவிட்டது. இப்போதாவது அவர்கள் விடுபடாதவகையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அமைய வேண்டும். அவர்கள் குறித்த குடிமைப் பதிவுகள் துல்லியமாக்கப்பட வேண்டும்!

- பக்தவத்சல பாரதி, ‘தமிழர் மானிடவியல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு: bharathianthro@gmail.com

SCROLL FOR NEXT