சிறப்புக் கட்டுரைகள்

தென் தமிழகத்தில் ராகுலின் பேச்சு!

புதுமடம் ஜாபர் அலி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சமீபத்திய ஐக்கிய அமீரகப் பயணம், அங்கு வாழும் இந்தியர்களைக் கவர்ந்திருக்கிறது. நடை, உடை, பாவனை என எல்லாவற்றிலும் எளிமையை வெளிப்படுத்திய ராகுலின் இயல்பான நடவடிக்கைகள், அங்குள்ள இந்தியர்களின் மனங்களைக் கொள்ளைகொண்டதில் ஆச்சரியமில்லை.

அமீரக உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்த ராகுல், அங்குள்ள இந்தியத் தொழிலாளர்களின் முகாம்களுக்கும் சென்றார். மிகக் குறுகலான அந்தக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் கொஞ்சமும் தயக்கமின்றி வலம்வந்தார் ராகுல். பாதுகாப்புக் கெடுபிடிகளை மீறி சிநேகத்துடன் கைகுலுக்கியும் சளைக்காமல் செல்பி எடுக்க அனுமதியளித்தும் இந்தியத் தொழிலாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டார் அவர்.

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் ராகுல் ஆற்றிய உரை, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை மட்டுமின்றி தொலைக்காட்சிகளில் பார்த்த கோடிக்கணக்கான அமீரக மக்களையும் ஈர்த்துவிட்டது. ‘மன் கி பாத் என தனக்குத்தானே பேசுவதற்கு நான் இங்கு வரவில்லை. மன் கி பாத்தைக் கேட்பதற்குத்தான் இங்கு வந்திருக்கிறேன். அரசியல் காரணங்களுக்காக எனது அன்புக்குரிய தேசம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், சித்தாந்தரீதியாகவும், சிந்தனைரீதியாகவும் இந்தியாவை ஒன்றிணைக்க நாங்கள் விரும்புகிறோம்’ என்று முழங்கினார் ராகுல்.

மேலை நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும், அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. 5 ஆண்டுகளைக் கடந்தால் மேலை நாடுகளில் குடியுரிமை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால், அரபு நாடுகளில் எவ்வளவு காலம் பணிபுரிந்தாலும் இந்தியா உள்ளிட்ட பிற நாட்டினருக்குக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது. எனவே, என்றேனும் ஒருநாள் சொந்த நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் அங்குள்ள இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதனால், இந்தியாவின் ஒவ்வொரு அரசியல் நகர்வையும் அவர்கள் தீவிரமாக கவனித்துக்கொண்டிருப்பார்கள்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலிருந்து பெரும்பாலானவர்கள் அரபு நாடுகளில் பணியாற்றிவருகின்றனர். உறவுகளை விட்டுப் பிரிந்து வாழும் இவர்கள், அன்றாடம் தங்கள் சொந்தபந்தங்களிடம் உரையாடத் தவறுவதில்லை. குடும்பம், தொழில் தொடர்பான வழக்கமான செய்திகள் தவிர, தங்களைக் கவர்ந்த விஷயங்களையும் உறவுகளிடம் இவர்கள் பகிர்ந்துகொள்வதுண்டு.

இந்த வகையில் அமீரகத்தில் ராகுல் ஆற்றிய உரையின் வீச்சு கடல்கடந்து தென் தமிழகம்வரை வலம்வரத் தொடங்கியுள்ளது. ‘துபாயில் ராகுல் காந்தியை ரொம்பக் கிட்டத்தில் எங்க வீட்டுக்காரர் பார்த்திருக்காரு. என் தம்பி அவரோட செல்பி எடுத்து அனுப்பியிருக்கிறான். ராகுல் கொஞ்சம்கூடப் பந்தா பண்ணலையாம்’’ என்பது போன்ற பேச்சுக்களை தமிழகத்தின் பல இடங்களிலும் கேட்க முடிகிறது.

- புதுமடம் ஜாபர் அலி

தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

SCROLL FOR NEXT