இந்த மாத ஆரம்பத்தில், அமெரிக்காவின் அல்பனியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் தங்கியிருந்த பெண், தான் குளிப்பதை ரகசிய கேமராவால் படமெடுத்ததாக ஓட்டல் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுத்தார். அதே வாரத்தில், 7 ஆயிரம் கி.மீ. தொலைவில், சென்னையில் பெண்கள் தங்கும் விடுதி நடத்திவந்த சம்பத் ராஜ் எனும் நபர், பெண்களை ரகசியமாகப் படமெடுக்க ஒன்பது ரகசிய கேமராக்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.
சென்னை சம்பவம் தொடர்பான செய்திக்காக நான் கூகுள் செய்தபோது, வந்த 10 முடிவுகளில் எட்டு முடிவுகள் பெண்களின் அந்தரங்க ‘ஸ்பை கேம்’ படங்கள் இருப்பதாகக் கூறும் பாலியல் தளங்கள் தொடர்புடையதாக வந்தன. ஸ்பை கேம்கள் குறித்து நான் கூகுள் செய்தேன். ரூ.999-க்கும் குறைவாக சந்தையில் கிடைப்பதைத் தெரிந்துகொண்டேன். ஒரு மாத்திரை அளவுக்கு மிகாத, அழைப்பு மணியைப் பொருத்துவதைவிட எளிதாக அந்தக் கேமராக்களைப் பொருத்திவிட முடியும். ஸ்பை கேம்கள் வீட்டுப் பாதுகாப்பு, வேலைக்காரர்களைக் கண்காணிப்பது, முக்கியமான பரிவர்த்தனைப் பதிவு எனப் பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுகின்றன. ‘மறைவாக இருந்து பார்த்து ரசிப்பதற்குச் சிறந்த கருவி’ என்று யாரும் வெளிப்படையாக அதை விளம்பரப்படுத்தி விற்காவிட்டாலும், அவற்றின் முதன்மையான பயன்பாடு அதுவாகவே இருக்கிறது.
ஊடுருவியிருக்கும் மூன்றாவது கண்
கேமரா பல்வேறு வகைகளில் பங்குவகிக்கும் ‘அப்பாவித்தனமான’ செயல்களிலும் மறைந்திருந்து ரசிப்பதற்கான விஷயங்களுக்குக் குறைவேயில்லை. நமது வாழ்க்கையில் கேமரா ஊடுறுவி வெற்றிகொண்டுவிட்டதைக் கவனிக்கிறேன். கோடை விடுமுறைக்குச் சற்று முன்னர் கோத்ரெஜ் அலமாரியிலிருந்து எடுக்கப்படும் அபூர்வக் கருவியாக இருந்த கேமரா, தற்போது நமது உடல் பாகங்களின் நீட்சியாகவே ஆகிவிட்டதைப் பார்த்து விந்தைகொள்கிறேன். கேமரா சீக்கிரம் நமது தேகத்தின் அடியிலேயே புதைக்கப்பட்டுவிடும் என்றுகூட ஒரு செய்தி சொல்கிறது. பின்னர் நாம் 24 மணி நேரமும் களிப்பிலேயே இருக்கலாம்.
இதை எழுதிக்கொண்டிருக்கும்போது, ஃபேஸ்புக்கைத் திறக்கிறேன். கணவர்கள், விடுமுறைகள், மதிய உணவை மக்கள் புகைப்படங்களாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். முறிந்து கட்டுப்போட்ட கை, கால்கள், மருத்துவமனை படுக்கைகள், மகளின் ஓவியங்கள், காலை நடை எல்லாமே புகைப்படங்களாக வெளியிடப்படுகின்றன. திரை நட்சத்திரங்களுடன், நண்பர்களுடன், கேக்கள், டாட்டூக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் போடுகின்றனர். யாருமே அறியாமல் ஒரு காலத்தில் இருந்த நமது வாழ்வின் நுண்ணிய தகவல்கள் களைப்பின்றி, முடிவின்றி பகிரப்படுகின்றன. வரலாற்றிலேயே இணைகூற முடியாத அளவில் அந்தரங்கத்தின் மீது தானாகவே நடத்தும் அத்துமீறல் இது என்பது ஆச்சரியமானது. ஆதார் போன்ற கருவிகளின் ஆக்கிரமிப்புத் தன்மை குறித்துக் கதறிக்கொண்டே, நமது உடல்கள், நமது குடும்பங்கள், நமது உடைமைகள், உறவுகளை எல்லாருக்கும் சந்தோஷமாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்.
பெண்களுக்கு எதிரான ஆயுதம்?
ஒட்டுமொத்தமாக அலுப்பையே தரும் நமது இருப்பை நிரப்புவதற்கு ஒவ்வொரு அலுப்புத் தருணத்தையும் பிடித்துக்கொண்டிருக்கும்போது, நாம் அறியாமல் கேமரா நமக்கு எதிரான ஆயுதமாக்கப்படுகிறது. அதோடு, வழக்கம்போல, அது பெண்களுக்கு எதிராக மிகச் சக்திவாய்ந்த வகையில் ஆயுதமாக்கப்படுகிறது.
பெண்கள் தாங்கள் உறவுகொண்டிருப்பவர்களோடு பகிரும் புகைப்படங்கள் ஆவலைத் தூண்டக்கூடியது. இன்ஸ்டாகிராம் மற்றும் இதர புகைப்படம் அடிப்படையிலான சமூக வலைதளங்கள், ஆண் பயனாளிகளைவிடப் பெண்களை எண்ணிக்கையில் அதிகம் கொண்டிருக்கின்றன. ‘பழைய பாணி’ சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் போன்றவற்றில்கூட, எப்போதும் அழகுமிக்கவர்களாக, விரும்பத்தக்கவர்களாக, நேசத்துக்குரியவர்களாக, செல்லங்களாகப் பெண்கள் திரும்பத் திரும்பத் தங்களை மறுபடைப்பு செய்துகொண்டேயிருக்கின்றனர். புகைப்படம் எடுக்கப்பட்ட, போட்டோஷாப் செய்யப்பட்ட, ஃபில்டர் செய்யப்பட்ட சுயங்களைச் சுயநுகர்வின் வெறியோடு, அதீத நார்சிஸத்துடன் அதேவேளையில் சுயமாகவே உருவாக்கிக்கொண்ட சமூக ஊடக மதிப்புக்கோரல் என்னும் சிறையை உருவாக்கியபடி வெளியிடுகின்றனர். அங்கே ஒரு புகைப்படம் பெறும் ஒவ்வொரு லைக்கும் சுயமரியாதையை அதிகப்படுத்துகின்றன. சில லைக்குகளையே ஒரு புகைப்படம் பெறும்போது, அயற்சி தாக்குதல்களைத் தொடுக்கிறது. அங்கே உறைந்த ஒரு படம், உண்மையானதைவிட முக்கியமானதாகிறது.
இந்தப் பிரபஞ்சத்தில் இன்று பெண்கள் பொது நுகர்வுக்காக முன்னுதாரணமில்லாத வகையில் தங்களைத் தாங்களே காட்சிப்படுத்தியும், பாலியல்தன்மையாக்கியும் வருகின்றனர். அத்துடன், இதற்கான வினோத இணையாக, அவர்களுக்குத் தெரியாமலேயே ரகசிய கேமராக்களின் வழியாகப் பாலியல் பண்டங்களாகவும் அவர்கள் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தகர்க்கப்படும் நம்பிக்கை
பெண்களால் தீர்மானிக்கப்படும், அவர்கள் அந்த வர்த்தகத்தில் பயன்பெறும் நிலையில், காமக்கலை ஊடகங்களுக்கும் (போர்னோகிராபி), விபசாரத்துக்குமான நியாயங்கள் வெகுகாலமாகவே அந்த நிறுவனங்களின் இருப்புக்கு ஆதரவாகப் பேசப்பட்டுவருகின்றன. ஆனால் ஸ்பை கேம், போர்னோகிராபி போன்றவற்றால் மீண்டும் அதிகாரச் சமநிலை தகர்க்கப்படுகிறது. புறக்கணிக்கப்பட்ட காதலன் ஒருவன், தாங்கள் அந்தரங்கமாக இருந்த படத்தை வெளியிட்டு அங்கீகாரத்தைக் கேட்பதைப் போல.
அதனால், வினோதமாகவும், துயரகரமான வழிகளிலும் பெண்களே இந்த பிம்ப உருவாக்க யுகத்திலும் பாதிக்கப்படுபவர்களாகின்றனர். இந்த விஷயங்களையெல்லாம் அறிந்து, உள்ளே நுழைந்து சமூக மதிப்பிடல் பொறிக்குள் தங்களைப் பூட்டிக்கொள்ளும் பெண்களைப் பற்றி எனக்குச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஜி-ஸ்ட்ரிங்க்ஸ், பிகினி வேக்ஸ் போன்றவற்றுக்கு எனது எதிர்வினை எப்படியோ அப்படித்தான்.
வியாபித்திருக்கும் கேமரா
நார்சிஸமும் அதன் இன்னொரு பலவீனமான முனையான, மறைமுகக் காட்சி இன்பத்துக்கு உள்ளாகுதலும் மலைகளைப் போல மனிதகுலத்தில் பழைமையானவை. ஆனால், சகல இடங்களையும் வியாபித்துள்ள கேமராவும், இயந்திரத்தனமான பிம்ப உருவாக்கமும் வெறித்துப் பார்ப்பதைத் தொழில் துறையாக மாற்றியுள்ளன.
தந்தைவழிச் சமூகக் கருத்தியல் திடமாகும்போது, பெண் ஊடல் ஒழுக்க மீறலுக்கான தலமாக ஆவதோடு பெண் உடலின் பிம்பம் என்பது மயக்கத்தக்கதாகவும் மாறுகிறது. ஆதிவாசி சமூகங்களில் ஏன் காமக்கலை ஊடகங்கள் இல்லையென்று ஒருவர் வியந்தால், அங்கே உடை அணிந்த உடல்கள் இல்லாததே காரணம்.
பெண் உடலைச் சுற்றியிருக்கும் விலக்கங்களை நீக்குவதன் மூலம் காமத் தொழில்துறையின் தீங்கைக் குறைக்கலாம் என்று நாம் வாதிடலாம். அதைவிட முக்கியமாக இன்றைய வாழ்வை நுகரும் ‘காட்சிபூர்வ’ வழியை நாம் துறப்பதற்குக் கூடுதலான சக்தி தேவைப்படலாம்.
‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்