சிறப்புக் கட்டுரைகள்

சமூகத் தணிக்கை அமைப்புகள் சரியாகச் செயல்படுகின்றனவா?

செய்திப்பிரிவு

பிறர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பவரே நல்ல தணிக்கையாளர் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் நடந்து முடிந்த தலைமைக் கணக்காளர்கள் மாநாட்டில் உரையாற்றியபோது சொன்ன வார்த்தைகள் இவை. “ஒருவரது கணக்குப் பதிவேட்டை மட்டும் பார்த்தால் போதாது. அவர் சொல்லும் கணக்கையும் கேட்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார். தணிக்கைப் பணிகள் தங்கள் ஜனநாயக வேர்களுக்குத் திரும்பினால், முறையான தணிக்கைப் பணிகளில் ஒருங்கிணைந்த மற்றும் வலுவான அங்கமாக ஆகும் வகையில் சமூகத் தணிக்கைகள் தங்களுக்கான இடத்தையும் கவனத்தையும் பெற்றால் மட்டுமே இந்தக் கருத்தாக்கம் ஏற்கத்தக்கதாகும்.

பொதுத் திட்டங்களைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல், கண்காணித்தல் ஆகிய பணிகளில் மக்களின் பங்கேற்பு எந்த அளவுக்குச் சிறந்த பலன்களுக்கு வழிவகுக்கும் என்பதை சமூகத் தணிக்கைகள் காட்டுகின்றன. கிராம சபைகளின் செயல்பாடுகளுக்கு சமூகத் தணிக்கைகள் வலு சேர்த்திருக்கின்றன. 2005-ல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின்படி (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) சமூகத் தணிக்கைகள் முதன்முதலில் கட்டாயமாக்கப்பட்டன. இதையடுத்து, நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், பல்வேறு அமைச்சரவைகள் ஆகியவற்றால், பிற துறைகளிலும் சமூகத் தணிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டன.

சமூகத் தணிக்கைகளை, பிற துறைகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் சூழலில், தலைமைக் கணக்காயரும் (சிஏஜி), ஊரக மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து முன்னெடுத்த தணிக்கைத் தர மதிப்பீடுகளின் அடிப்படையில், சமூகத் தணிக்கைகள் முறையாக அமல்படுத்தப்படுகின்றனவா என்று பார்ப்பது அவசியம். குறிப்பிட்ட தர மதிப்பீடுகளையும், கவனம் செலுத்தப்பட வேண்டியவை என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் முக்கியப் பிரச்சினைகளையும் கள நிலவரங்களின் அடிப்படையில் ஒப்பீடு செய்யும் ஆய்வை, சமீபத்தில், ஊரக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனமும், பஞ்சாயத்து ராஜ் அமைப்பும் இணைந்து நடத்தின.

தணிக்கை முகமை சுதந்திரமாகச் செயல்படவில்லை என்றால், தணிக்கைப் பணிகள் சிறப்பாக நடைபெற வாய்ப்பில்லை. ஊரக மேம்பாட்டு அமைச்சகம், சிஏஜி, சிவில் சமூகக் குழுக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தியதைத் தொடர்ந்து, 26 மாநிலங்களில் சமூகத் தணிக்கை அமைப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன (ராஜஸ்தான், ஹரியானா, கோவா மாநிலங்கள் இவற்றை இன்னும் தொடங்கவில்லை). இந்த அமைப்புகளில், 5,000 முழு நேர ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 30 நாட்களுக்கான கடுமையான பயிற்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டதுடன், 4,200-க்கும் மேற்பட்டோருக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது.

இத்தனைக்குப் பிறகும் இந்தப் பணியில் குறைபாடுகள் இருப்பது, ஊரக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனமும், பஞ்சாயத்து ராஜ் அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவருகிறது. பெரும்பாலான சமூகத் தணிக்கை அமைப்புகளின் நிர்வாகப் பிரிவுகள் சுதந்திரமானவை அல்ல. நிதியைச் செலவிடும் முன், திட்டங்களை அமல்படுத்தும் முகமைகளின் அனுமதியை சமூகத் தணிக்கை அமைப்புகள் பெற வேண்டியிருக்கிறது.

பெரும்பாலான மாநிலங்கள், சமூகத் தணிக்கை அமைப்பின் இயக்குநரை நியமிப்பதில் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுவதில்லை. சில மாநிலங்கள் மிகச் சில தணிக்கைப் பணிகளையே செய்திருக்கின்றன. சில மாநிலங்கள் அதையும் செய்யவில்லை. ஓராண்டுக்கு ஒரு முறை அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் தணிக்கை நடத்தும் அளவுக்குப் பல மாநிலங்களில் போதிய ஊழியர்கள் இல்லை.

2016-17 மற்றும் 2017-18 (நவம்பர் வரை) காலகட்டம் வரை, தங்கள் குறைகளைப் பதிவுசெய்த அல்லது முறைகேடுகளைக் கண்டறிந்த சமூகத் தணிக்கை அமைப்புகளின் எண்ணிக்கை வெறும் 13. இந்த அமைப்புகளில் ரூ.281 கோடி மதிப்பிலான நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்திருக்கிறது. சமூகத் தணிக்கை முடிவுகள் தொடர்பாக மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் நிலைமையும் படுமோசம். தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிதியில் 7% மட்டுமே திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. 14% குறைகள் மட்டுமே களையப்பட்டிருக்கின்றன. முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் மீது போதுமான அளவில் ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

2017-ல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் சமூகத் தணிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களைப் பயன்படுத்தி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (என்.எஃப்.எஸ்.ஏ.) சமூகத் தணிக்கைகளை மேற்கொள்வதை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியது. நிதிப் பற்றாக்குறை காரணமாக, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான சமூகத் தணிக்கைப் பணிகள் முடங்கின.

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தைப் போலவே, நுகர்வோர் விவகாரம் - உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகமும், சமூகத் தணிக்கை அமைப்புகளுக்கு நிதியை வழங்கி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் சமூகத் தணிக்கைப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.

சமூகத் தணிக்கை அமைப்புகளுக்கு, சுதந்திரமான நிர்வாக அமைப்புகளும் போதுமான ஊழியர்களும் கிடைக்கப்பெற வேண்டும். சமூகத் தணிக்கைப் பணிகளில், திட்டங்களை அமல்படுத்தும் முகமைகள் துணைபுரிய வகை செய்யும் வகையில், விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். சமூகத் தணிக்கைப் பணிகளின் முடிவுகளின் அடிப்படையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும், கள நிலவரங்களின் அடிப்படையில் சமூகத் தணிக்கைப் பணிகளின் முடிவுகள், அவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றவை பொதுவில் வைக்கப்பட வேண்டும்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் சமூகத் தணிக்கைப் பணிகள், புதிய திட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் நிலையில், அந்தப் பணிகளுக்கு வழிகாட்டுதலும் ஆதரவும் தேவை. குறிப்பிட்டதுபோல், “நிதி முறையாகச் செலவிடப்பட்டிருக்கிறதா என்பதும், நோக்கம் நிறைவேறியிருக்கிறதா என்பதும் திட்டப் பயனாளிகளால் தணிக்கை செய்யப்பட வேண்டியது அவசியம்.

ஒரு நிறுவனம் எனும் முறையில், உள்ளூர் மக்களையும் மாநில தணிக்கைக் கழகங்களையும் ஒன்றிணைத்து அவர்களுக்குப் பயிற்சி அளித்தல், திறன்களை வளர்த்தல், வழிகாட்டு நெறிமுறைகள், மேம்பாட்டு வரம்புகள், பயன்பாட்டு முறைமைகள், தணிக்கை அறிக்கைகளை வெளியிடுதல் ஆகியவற்றில் ஆலோசனை வழங்குதல் ஆகியவற்றில் சிஏஜி ஈடுபட வேண்டும்.”

- கருணா.எம், சி.தீரஜா

ஹைதராபாதில் உள்ள ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத் ராஜுக்கான தேசிய நிறுவனத்தின் சமூகத் தணிக்கைகள் மையத்தில் பணியாற்றுபவர்கள்.

© ‘தி இந்து’ ஆங்கிலம்,

தமிழில்: வெ.சந்திரமோகன்

SCROLL FOR NEXT