ஜப்பானில் வெறுப்பூட்டும் பேச்சு அதிகரித்திருப்பதாக, கடந்த மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் இனவெறி அடிப்படையிலான பேச்சுகள் 360 முறை இடம்பெற்றதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விஷயத்தில் ஜப்பான் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்றும் அந்த ஆணையம் கேட்டிருக்கிறது.
இணையத்தில்தான் வெறுப்பூட்டும் பேச்சுகளின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. பொதுவாக, இந்த வெறுப்பூட்டும் பேச்சுக்கு இலக்காகுபவர்கள் கொரியர்கள்தான். சீனர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் மீதும், ஜப்பானியர்கள் பலர் தங்கள் வெறுப்பைக் கக்கிவருகின்றனர்.
இந்நிலையில், வெறுப்பூட்டும் பேச்சைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஜப்பான் அரசு இறங்க வேண்டியது அவசியம். சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் ஜப்பானும் ஒன்று. அந்த உடன்படிக்கையின்படி, இனம் மற்றும் மதம் தொடர்பான வெறுப்பூட்டும் பேச்சுகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களைச் சட்டப்படி கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், இதன் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுப்பதுபோல் தெரியவில்லை.
ஜப்பானில் உள்ள சிறுபான்மையினரின் கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்து பொது மக்களுக்குத் தெரியும்வண்ணம் ஊடகங்கள் செயல்பட வேண்டும். அரசு இதுபோன்ற செயல்களை, சட்டத்தின் துணை கொண்டு கட்டுப்படுத்துவது அவசியம்.
- தி ஜப்பான் டைம்ஸ் தலையங்கம்