அன்றைய திரைப்படப் பார்வையாளர்களுக்கு சினிமா வெறும் பொழுதுபோக்குச் சாதனமல்ல, நாடகத்தைப் போலவோ ஓவியம் அல்லது இசையைப் போலவோ அது வெறும் கலை அல்ல. அது அவர்களுடைய வாழ்வோடு நேரடியாக உறவாடியது, அவர்களுக்கு அன்பையும் அறத்தையும் போதித்தது, ஒருவகையில் வாழ்வின் எல்லாமுமாக இருந்தது.
குறிப்பாக, சிவாஜி நடித்த திரைப்படங்கள். 1950, 60-களில் அவரது ஒரு திரைப்படம் வெளியாகும்போது வீடுகளுக்குள் அடைந்து கிடந்த பெண்கள் அவரது ‘பாசமலர்’ அல்லது ‘பாலும் பழமும்’ போன்ற ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்காக திரைப்பட அரங்குகளுக்குப் போனார்கள். எம்ஜிஆரின் ரசிகர்களைப் போல் திரையரங்க வாசல்களில் கட்-அவுட்கள் வைத்து, பட்டாசு கொளுத்தி ஆரவாரமான கொண்டாட்டங்கள் சிவாஜி ரசிகர்களிடம் வெளிப்படாது. மாறாக, திரையரங்குக்குச் செல்லும்போது தங்களுடைய சகோதரர்களை, காதலரை, தந்தையரைக் காணச்செல்வது போன்ற ஓர் உணர்வு அவர்களுக்கு இருந்தது.
தங்களை நேசிக்கும் தங்களுக்காகக் கண்ணீர் சிந்தும் தங்களுக்காக எல்லாவிதமான தியாகங்களையும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு நாயகனைத் திரையில் காணும்போது அவரோடு எளிதில் தங்களைப் பிணைத்துக்கொண்டார்கள். ‘பாசமலர்’ படத்தில் சாவித்திரியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, ‘கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கை வீசு’ என சிவாஜி விம்மியபோது திரைக்கு எதிரே உட்கார்ந்திருந்த பெண்கள் கண்ணீர் வடித்தார்கள், சிலர் கதறி அழுதார்கள், எல்லோருமே பரிதவித்துப்போனார்கள்.
சிவாஜியின் படங்களில் அவரது ஏதாவதொரு பாத்திரம் பெறும் சிறிய வெற்றியைக் கண்டு குதூகலித்தார்கள். அவர் வாய்விட்டுச் சிரிக்கும் காட்சிகளைக் காண வாய்க்கும்போது புன்னகைத்தார்கள். அவற்றை அவர்கள் தம் முழு வாழ்நாள் வரையிலும் நினைவில் வைத்திருக்க விரும்பினார்கள். அவரது திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு நிச்சயமாகப் பொழுதுபோக்கு மட்டுமே அல்ல!
- தேவிபாரதி, எழுத்தாளர், விமர்சகர்.
தொடர்புக்கு: devibharathi.n@gmail.com