எங்கோ ஏசி அறையில் இருந்தபடி கற்பனையாக இதை எழுதவில்லை. இரண்டு நாட்கள் மன்னார்குடி மக்களுடன் களத்தில் இருந்து அனுபவித்ததையே இங்கு பதிவுசெய்கிறேன்.
மின்சாரம் இல்லாமல், தண்ணீர் இல்லாமல் அவர்கள் படும் துயரம் நம்மால் கற்பனை செய்யவே முடியாதது. கொசுக்கடியால் இரவு முழுதும் அலறும் குழந்தைகளின் அழுகைச் சத்தம் சென்னை வந்தும் காதில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. இருட்டில் சாலையில் இருக்கும் பள்ளங்களில் தடுமாறியபடி, கைகளில் குடங்களைச் சுமந்துகொண்டு தண்ணீரைத் தேடிப் பெண்களும் குழந்தைகளும் போகும் காட்சியைப் பார்த்து மனசு வலிக்கவில்லை என்றால் நீங்கள் நிச்சயமாக மனிதராக இருக்க முடியாது.
ஆட்டோ பிடித்து பல்பொருள் அங்காடிக்குச் சென்று மெழுகுவர்த்திகள் மொத்தமாக வாங்கினேன். அலைந்து திரிந்து பனை ஓலை விசிறிகளை வாங்க முடிந்தது. மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்து நிற்கும் குடிசைப்பகுதி மக்களிடம் கொடுத்தேன். என்னைப் போன்ற சாதாரண மனிதனால் முடிந்தது அவ்வளவுதான். ஆனால், விலை குறைவான இது போன்ற பொருட்களைக்கூட அந்த மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்று பார்க்கும்போதுதான் அவர்களின் இழப்பு எத்தனைப் பெரியது என்பது நமக்குப் புரிகிறது.
ஊருக்கெல்லாம் சோறு போட்ட பூமி இன்று ஒரு வேளை உணவுக்காக வரிசையில் நிற்கிறது என்பது எவ்வளவு பெரிய துயரம்?
சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்கள், வாழைகள், பயிர்கள், செடிகள் எனக் காவிரிப் படுகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமே பறிபோயிருக்கும் இந்தச் சூழலில் நாம் பேசுவதற்கு அல்ல, செய்வதற்கு நிறைய இருக்கிறது. ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும். தன்னார்வத்துடன் தொண்டுசெய்ய விரும்புகிறவர்கள் ஒன்றுதிரண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று உதவலாம். அதைவிட வேறொரு புண்ணியம் இருக்க முடியாது.
இன்று நம்மை ஆள்பவர்களுக்கும் முன்பு நம்மை ஆண்டவர்களுக்கும் ஒரு அன்பான கோரிக்கை; அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மக்கள் கடுங்கோபத்தில் இருக்கின்றனர். அவர்களிடம் போய் உங்கள் குப்பை அரசியலைக் கொட்டாதீர்கள்!
- உஸ்மான், பதிப்பாளர்.