சமஸ்கிருத வாரம் சில பள்ளிக்கூடங்களில் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் எதிர்க்கிறார்கள்.
நம்மூரில் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிக் கட்டிடங்களைத் தொலைவிலிருந்தே நாம் அடையாளம் காண முடியும். ஏன் தெரியுமா? ‘தமிழ் வாழ்க’ என்ற பலகை. அனேகமாக நியான் விளக்குகளுடன் ஒளிரும். இப்படி விளம்பரப் பலகைகள் வைத்துத் தமிழை வளர்க்க முடியாது என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியும். ஆனால், அவர்கள் நம்புவது மக்களின் உணர்வை, அறிவை அல்ல.
அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் நம் அரசியல்வாதிகள், எந்த நாட்டிலும் ‘ஆங்கிலம் வாழ்க,’ ‘ஸ்பானிஷ் வாழ்க,’ ‘பிரெஞ்ச் வாழ்க’ என்று தகவல் பலகைகள் வைத்து அவரவர் மொழிகளை வளர்க்கவில்லை என்பதையும் மற்றவர்களுடன் பழகி, கடல் கடந்து சென்று அவர்கள் மொழிகளையும் கற்றுக் கொண்டே தம் மொழிகளை வளர்த்தார்கள். இதை உணர்ந்துகொண்டு, தமிழக அரசியல் வாதிகள் வேற்று மொழிகள் பற்றிப் பேசுவது நல்லது. இந்திக்கான எதிர்ப்பே இனி நாட்டின் பல மாநிலங்களில் வலுவாக இருக்க முடியாது என்கிறபோது, சமஸ்கிருத வாரத்தை எங்கோ ஒரு மூலையில் கொண்டாடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நம் அரசியல்வாதிகள் இவ்வளவு வேகப்பட வேண்டாம்.
பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த மாணவர்கள் பிழையில்லாமல் தமிழ் எழுதுவதில்லை. தொலைக்காட்சித் தமிழின் உச்சரிப்பு நாராசமாக இருக்கிறது. நம் ஆட்சியாளர்களும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகளும் முதலில் தமிழர்கள் தமிழை ஒழுங்காகப் பேசுகிறார்களா, எழுதுகிறார்களா என்பதைப் பார்த்துவிட்டு, இந்தி யையும் சமஸ்கிருதத்தையும் விரட்ட வில், வேல், விறகுக்கட்டைப் படைகளை அனுப்பலாம்.
சமஸ்கிருதம் கற்றுத் தரப்படும் மத்திய அரசின் பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட அரசு முன்வந்திருக்கிறது என்றால், அதைச் செய்ய மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறது. அதை யாரும் தடுப்பதற்கில்லை. எல்லாப் பள்ளிகளிலும் சமஸ்கிருத வாரத்தைக் கொண்டாடுங்கள் என்று மத்திய அரசு சொல்லவில்லை என்கிறபோது, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இதை ஏன் பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்?
சமஸ்கிருதம் சிங்கமா, புலியா? இவர்கள் மீது விழுந்து, பிறாண்டிக் கடித்துக் குதறிவிடப் போகிறதா? ஏன் இந்தக் கவலை? சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படும் நாட்களில் தமிழ்மொழி நாடு கடத்தப்படுமா? சமஸ்கிருத வாரம் கொணடாடப்படுவதால் தமிழ் அழிந்துவிடுமா? அந்த நாட்களில் மக்கள் சமஸ்கிருதம்தான் பேச வேண் டும், தமிழ் பேசக் கூடாது என்று கட்டாயமா? அரசியல்வாதிகள் அதற்காக ஏன் இப்படித் துள்ளிக் குதிக்க வேண்டும்?
நாட்டில் அம்மா தினம், அப்பா தினம், பெண்டாட்டி தினம் என்று பல தினங்கள் கொண்டாடப்படுகின்றனவே. அவை இந்த மண்ணின் புழக்கத்தில் உள்ள தினங்களா? காதலர் தினம் என்பது இந்த மண்ணோடு பிறந்ததா? காதலர்கள் தினம், வேலன்டைன் தினம் என்று கொண்டாடுகிறார்களே, வேலன்டைன் என்ன சங்க காலப் புலவரா? அதற்கு எதிர்ப்புக் காட்டாத அரசியல்வாதிகள், சமஸ்கிருதத்தை இப்படி எதிர்க்கிறார்களே. இந்த நாட்டின் மாபெரும் தத்துவ நூல்கள் சமஸ்கிருதத்தில்தான் எழுதப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்குத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தியர்கள் ஆவது எப்போது?
- ஆர். நடராஜன், மூத்த பத்திரிகையாளர். தொடர்புக்கு: hindunatarajan@hotmail.com