“மோகன்... மோகன்... வெளியே வா!” என்று வீட்டுப் பணியாளர் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, தன் மனைவியாகிய சிறுமியை விட்டுவிட்டு எழுந்தார் மோகன்தாஸ் காந்தி. கதவைத் திறந்து வெளியே வந்தபோது பணியாளர் காந்தியிடம் இப்படிச் சொன்னார்: “அப்பாவின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது, உடனே வா!”
காந்தியின் இறுதி நாள் வரை அவரால் மறக்க முடியாத சத்தம் அவர் வீட்டுப் பணியாளர் தட்டிய கதவுச் சத்தம். இளைஞரா சிறுவரா என்று சொல்லிவிட முடியாத 16 வயது காந்திக்குத் திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளைக் கடந்திருந்தது. அதைத் திருமணம் என்றே சொல்ல முடியாது என்றுதான் பின்னாளில் காந்தி கருதினார்.
தாங்கள் யாரைத் திருமணம் செய்துகொள்கிறோம் என்றே தெரிந்திராத, திருமணம் என்றால் என்னவென்றே புரிந்திராத பருவத்தில் நடந்த ஒரு சடங்குக் கொடுமையாகவே தனக்கும் கஸ்தூர்பாவுக்கும் நடந்த குழந்தைத் திருமணத்தைப் பின்னாளில் காந்தி கருதினார். என்றாலும் திருமணம் நடந்த வயதில் அவருக்கு அதுவொரு விளையாட்டுச் சம்பவமாகவும், போகப் போக காமத் துய்ப்புக்கான பந்தமாகவும் அவருக்குப் புரிபடத் தொடங்கியது.
அந்நாட்களில் காந்திக்குப் பள்ளியில் இருக்கும்போதெல்லாம் தன் மனைவியான கஸ்தூர்பாவின் நினைவுதான். கஸ்தூர்பாவுக்கும் காந்திக்கும் சம வயதுதான். இருவருமே இன்றைய சட்டப்படி அன்று குழந்தைகள்தான். பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு முதல் ஆளாக ஓடும் காந்தி, உடல்நலம் குன்றி, படுத்த படுக்கையாக இருக்கும் தன் தந்தை கரம்சந்துக்குப் பணிவிடை செய்வதுதான் முதல் வேலையாக இருக்கும். ஆனாலும், பணிவிடையில் சிறிது ஓய்வு கிடைத்தால் போதும், உடனே தன் மனைவி கஸ்தூர்பாவின் அறைக்கு ஓடிவிடுவார்.
காந்தி சென்று சேர்வதற்குள் கரம்சந்த் உயிரை விட்டிருந்தார். அவருடைய இறுதிக் கணங்களில் அவருடைய தம்பி துளஸிதாஸ்தான் உடன் இருந்தார். அதுவரை தந்தைக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்த காந்தியை, “நீ போய் சற்று ஓய்வெடுத்துக்கொள்” என்று அனுப்பியது காந்தியின் சித்தப்பாதான். கடைசி நேரத்தில் அப்பாவின் பக்கத்திலிருக்கும் பாக்கியம் தனக்கு இல்லாமல் போய்விட்டதே என்று துயரத்தில் குமைந்தார் காந்தி. இவையெல்லாம் காந்தியின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து எழுதிய யாரோ ஒரு வரலாற்றாசிரியர் புதிதாகக் கண்டறிந்து சொன்ன விஷயங்கள் அல்ல. காந்தியே தன் வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக்கிச் சொன்னவை.
கரம்சந்த் காந்தியின் மரண தினம் காந்தியின் வாழ்க்கையில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும் மிகுந்த தாக்கத்தைச் செலுத்திய தினம். ஏனென்றால், பாலுறவு நாட்டத்தின் மீது காந்திக்கு மிகுந்த வெறுப்பும் அதனால் குற்றவுணர்வும் ஏற்பட்ட தினம். தன்னுடைய பாலுணர்வின் மீது தீராத போராட்டத்தை அவர் இறுதிவரை நடத்துவதற்கு வித்திட்ட தினம். தன் மீது பரிபூரணக் கட்டுப்பாடு இல்லாத ஒருவர் ஒரு தேசத்தை வழிநடத்த முடியாது என்று கருதிய காந்தி, தன்னுடைய பாலுணர்வையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்கான சோதனைக் களங்களில் ஒன்றாகப் பிற்காலத்தில் மாற்றினார்.
தந்தையின் மரணத்தோடு மட்டும் அந்தக் கதை முடிந்துவிடவில்லை. அந்தச் சமயத்தில் கஸ்தூர்பா கருவுற்றிருந்தார். அந்தக் குழந்தை பிறந்து ஒருசில நாட்களில் உயிர்விட்டுவிட்டது. கஸ்தூர்பா கருவுற்றிருந்தபோது அவருடன் தான் உடலுறவு கொண்டதால்தான் அந்தக் குழந்தைக்கு இந்நிலை ஏற்பட்டுவிட்டது என்று இரட்டைக் குற்றவுணர்ச்சியை அவர் சுமக்க ஆரம்பித்தார். காந்தியின் மூத்த மகன் ஹரிலால் தன் தந்தையின் பாதையிலிருந்து விலகி நடக்க ஆரம்பித்தபோதுகூட காந்தி, ‘கட்டுக்கடங்காத உடல் இச்சைகளின் பிடியில் தான் ஆட்பட்டிருந்தபோது பிறந்த குழந்தையாதலால் ஹரிலாலுக்கு இக்கதி ஏற்பட்டுவிட்டது’ என்றும் நம்பினார். பாலுணர்வுக்கு எதிரான அவருடைய யுத்தம் இப்படிப் பல காரணிகளால் படிப்படியாகக் கட்டப்பட்டது.
காந்தியின் பார்வைகளை எந்தத் தளத்திலிருந்து அணுகுவது, அவற்றில் எவையெல்லாம் சரி, தவறு என்பன விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது; இன்னும் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், அவருடைய பார்வைகள் ஒவ்வொன்றும் வரலாற்றோடு ஊடாடின. குழந்தை மணம், ஆடம்பரத் திருமணங்கள், குழந்தை விதவையர் போன்ற முறைகளுக்கு எதிராக காந்தி பேசியதெல்லாம் சட்டங்களிலும் எதிரொலித்தது. அந்தச் சட்டங்களில் காந்தியின் பங்கு என்னவாக இருப்பினும் தன் வாழ்க்கையின் சம்பவங்களை மக்கள் முன் திறந்துவைத்து, தன்னை ஒரு தவறான உதாரணமாக அவரே காட்டிக்கொண்டு, மக்கள் மனதில் அந்தக் கொடுமைகளுக்கு எதிரான உணர்வுகளை விதைத்ததில் காந்திக்குப் பெரும் பங்கு இருக்கிறது.
தனது சத்திய சோதனையில் ’குழந்தை மணம்’ என்ற மூன்றாவது அத்தியாயத்தை ஒரு மன்னிப்புக் கோரலாகவும், அன்றைய திருமண முறைகளின் (இன்றைய திருமண முறைகளுக்கும் பொருந்தும்) மீதான விமர்சனமாகவும் காந்தி எழுதுகிறார்.
“இந்த அத்தியாயத்தை நான் எழுத நேர்ந்திருக்கக் கூடாது என்றே விரும்புவேன். இந்த வரலாற்றைக் கூறி முடிப்பதற்குள் கசப்பானவை பலவற்றை நான் விழுங்கித்தான் ஆக வேண்டும் என்பதை அறிவேன். நான் சத்தியத்தை வழிபடுபவனாக இருப்பதென்றால், வேறு விதமாக நடந்துகொள்வதற்கில்லை. எனது பதின்மூன்றாவது வயதில் எனக்கு மணமாயிற்று என்பதைக் கூறியாக வேண்டியது, வேதனையோடு கூடிய என் கடமையாகிறது. என்னைச் சுற்றிலும் என் பராமரிப்பில் இருக்கும் அதே வயதுடைய சிறுவர்களைப் பார்த்துவிட்டு, என் விவாகத்தையும் எண்ணும்போது என்னைப் பற்றி நானே பரிதாபப்பட்டுக்கொள்ளத் தோன்றுகிறது; என் கதிக்கு ஆளாகிவிடாமல் தப்பிவிட்ட அவர்களை ஆசீர்வதிக்கவும் தோன்றுகிறது. அப்படிப்பட்ட அக்கிரமமான குழந்தைக் கல்யாணம் சரி என்று கூறுவதற்கு ஒழுக்கரீதியான வாதம் எதுவும் இருப்பதாக நான் காணவில்லை.”
தந்தையின் மரணத்தின்போது தன்னுடைய நடத்தை குறித்துக் குற்றவுணர்வுகொள்ளும் அதே காந்தி, தனக்கு நடத்தப்பட்ட திருமணத்துக்காகத் தந்தையை விமர்சிக்கவும் தவறவில்லை: “நான் குழந்தையாக இருந்தபோதே எனக்கு விவாகம் செய்துவிட்டதற்காக என்றாவது ஒருநாள் நான் என் தந்தையைக் கடுமையாகக் குறைகூறுவேன் என்று அப்பொழுது நான் கனவிலும் எண்ணவில்லை.”
தன் பள்ளி நண்பருடன் சேர்ந்து புலால் உண்டது, பாலியல் விடுதிக்குச் சென்று ஏதும் செய்யாமல் பயந்துபோய் ஓடிவந்தது, அந்தச் சிறு வயதிலேயே மனைவியின் மீது அதீத அதிகாரமும் சந்தேகமும் கொண்டிருந்தது என எல்லாவற்றையும் குற்றவுணர்ச்சியுடன் ‘சத்திய சோதனை’யில் திறந்து வைக்கிறார். அவர் திறந்து வைத்ததை முன்னிட்டே அவரை நாம் இன்று கடுமையாக விமர்சித்தும் கொண்டிருக்கிறோம் என்பது வேறு கதை.
“அகிம்சா தருமத்தை, அதன் எல்லா அம்சங்களிலும் நான் உணர்ந்த பின்னரே, (மனைவியின் மீதான) சந்தேகத்தின் புரை என்னை விட்டு ஒழிந்தது. அப்பொழுதுதான் பிரம்மச்சரியத்தின் மகிமையை உணர்ந்தேன்.
அப்பொழுதுதான் மனைவி, கணவனின் வாழ்க்கைத் துணைவியும், தோழியுமேயன்றி அவனுக்கு அவள் அடிமையல்ல என்பதையும், அவனுடைய சுகதுக்கங்களில் எல்லாம் அவனோடு சமபங்கு வகிப்பவள் என்பதையும், கணவனைப் போலத் தன்வழியில் நடந்துகொள்ள அவளுக்குச் சுதந்திரம் உண்டு என்பதையும் தெரிந்துகொண்டேன்” என்ற உணர்வு பெற்று, பின்னாளில் எழுதும் காந்தியுடன் 13 வயது மணமகன் காந்தியை நாம் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்!
- (காந்தியைப் பேசுவோம்…)
ஆசை,
தொடர்புக்கு:asaithambi.d@thehindutamil.co.in