சிறப்புக் கட்டுரைகள்

சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம்: ஜனநாயக விரோதம்!

சுப.வீரபாண்டியன்

சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதில் என்ன தவறு என்று கேட்கிறார், ஆர். நடராஜன் (தி இந்து 07.08.2014). ஒரு பன்மைச் சமூகமான, பல மொழிகள் பேசப்படுகின்ற இந்தியாவில், சமஸ்கிருதத்துக்கு மட்டும் வாரம் கொண்டாடுவது தவறு என்றே குறிப்பிடுகிறோம். 120 கோடி மக்களின் வரிப்பணத்தில், ஒரு மொழியை மட்டுமே உயர்த்திப் பிடிப்பது தவறு என்பதை மனச்சான்று உள்ளவர்களால் உணர முடியும்.

தமிழ், சமஸ்கிருதம் இரண்டுமே செம்மொழிகள். ஆனால், நிதி ஒதுக்கீட்டில், மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு நிலவுவது ஏன்? 03.08.2011 அன்று நாடாளுமன்றத்தில், மனித வள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர், தந்துள்ள புள்ளிவிவரம் கீழே:



அரசின் நிதி ஒதுக்கீடு



ஆண்டு

தமிழ் மேம்பாட்டுக்கு

சமஸ்கிருத மேம்பாட்டுக்கு

2008 - 09

4.47 கோடி

72.10 கோடி

2009 - 10

8.61 கோடி

99.18 கோடி

2010 - 11

10.16 கோடி

108.75 கோடி

மேற்காணும் நிதிஒதுக்கீடு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது. முன்னதாக, வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும், இப்போது மோடியின் ஆட்சிக் காலத்திலும் நிலை இதேதான்!

இந்த உண்மையைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாத கட்டுரையாசிரியர், ‘தமிழ் வாழ்க’என எழுதிவைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையைக் கண்டு சினம்கொள்வது வேடிக்கை!

நம்மைப் பொறுத்தமட்டில் சமஸ்கிருதம், இந்திக்கு மட்டும் அல்ல; உலகில் எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் அல்லர். நாம் பேசுவதெல்லாம், இந்திய மொழிகளுக்கு இடையிலான சமத்துவம் குறித்தே. சமஸ்கிருத வாரம் கொண்டாடும் மத்திய அரசே, தமிழுக்கும் வங்க மொழிக்கும் வாரம் எப்போது? அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் வாரங்கள் எப்போது? இந்தியாவில் சமஸ்கிருதத்துக்கு மட்டும் 12 பல்கலைக்கழகங்கள் உள்ளனவே, மற்ற மொழிகளுக்கான பல்கலைக்கழகங்கள் எங்கே? இந்த அடிப்படையில் இன்னும் சில உண்மைகளையும் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது.

சமஸ்கிருதம் என்பது வட்டார மொழிகள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட 22 மொழிகளில் ஒன்று என்பதைத் தவிர, அம்மொழிக்குச் சட்டத்தில் வேறு எந்தத் தனிச் சிறப்பும் வழங்கப்படவில்லை. மேலும், சமஸ்கிருதம் எந்த ஒரு வட்டாரத்திலும் பேசப்படவில்லை என்னும் உண்மையையும் இங்கே பேசியாக வேண்டும்.

1961-ம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, சமஸ்கிருதம் பேசுகிறவர்களின் எண்ணிக்கை 2,544 மட்டுமே. 1991-ல் அது 49,000 ஆக உயர்ந்ததாகக் காட்டப்பட்டது. 2011-ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் அந்த எண்ணிக்கை 15,000-க்கும் குறைவானதாக ஆகியுள்ளது.

ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 22 மொழிகளில், 15-க்கும் மேற்பட்ட மொழிகள், கோடிக் கணக்கான மக்களால் பேசப்படுகின்றன. காஷ்மீரி, சந்தாலி போன்ற மொழிகள் லட்சக் கணக்கானோரால் பேசப்படுகின்றன. ஆயிரக் கணக்கானவர்களால் மட்டும் பேசப்படும் ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே!

அவ்வளவு குறைவான மக்களால் பேசப்படும் ஒரு மொழிக்கு, 120 கோடி மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவது என்ன நியாயம்? ஏனைய எல்லா மொழிகளையும் புறக்கணித்துவிட்டு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளுக்கு மட்டும் கோடிக் கணக்கில் நம் வரிப்பணத்தைக் கொட்டி மத்திய அரசு இப்படி ‘வாரம்’கொண்டாடுவது ஜனநாயக விரோதம் இல்லையா?

சுப. வீரபாண்டியன், பேராசிரியர், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர்.

தொடர்புக்கு: subavee11@gmail.com

SCROLL FOR NEXT