சிறப்புக் கட்டுரைகள்

ஹீலியம் வாயு: குண்டூர் தந்த அற்புதம்!

ஆதி வள்ளியப்பன்

சூரிய கிரகணங்கள் இன்றைக்கும் கூட நம் நாட்டில் பல நூற்றாண்டுப் பழமையான மூடநம்பிக்கைகளுடன் அணுகப்பட்டு வருகின்றன.

அதேநேரம், சூரிய கிரகணங்களை ஆராய்ந்ததன் மூலம், ஐரோப்பியர்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு கண்டறிதல்களை இரண்டு நூற்றாண்டுகளாக அரங்கேற்றிவந்திருக்கிறார்கள். சூரிய கிரகணங்களே வான் இயற்பியல், சூரிய இயற்பியல் தொடர்பான விரிவான ஆராய்ச்சிகளுக்கு வித்திட்டன.

உலகை உய்விக்கும் சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றலுக்குக் காரணமாக இருக்கும் ஹீலியம், 150 ஆண்டுகளுக்கு முன் ஒரு சூரிய கிரகணத்தின்போதுதான் கண்டறியப்பட்டது. இந்தக் கண்டறிதலில் இந்தியாவுக்கும் ஆந்திர மாநிலம் குண்டூருக்கும்கூடப் பங்கு இருந்திருக்கிறது.

பிரான்ஸைச் சேர்ந்த பியரி ஜான்சென், பாரிஸ் பல்கலைக்கழகத்தில் கணிதமும் இயற்பியலும் படித்தவர். கட்டிடக் கலை பேராசிரியராகப் பணிபுரிந்தாலும் வானியல், புவி இயற்பியல் ஆராய்ச்சிகளுக்காகப் பல்வேறு அறிவியல் பயணங்களை அவர் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக சூரிய நிறமாலையை ஆராயும் நோக்கத்துடன், சூரிய கிரகணத்தைத் தெளிவாகப் பதிவுசெய்வதற்காகப் பல ஆயிரம் கி.மீ. பயணித்து 1868-ல் இந்தியா வந்தார் ஜான்சென்.

அவர் வந்து சேர்ந்த இடம் ஆந்திரத்தில் உள்ள குண்டூர். அங்கிருந்த புகையிலை வயல்களில் இருந்தபடியே ஆகஸ்ட் 18-ம் தேதி கிரகணத்தை அவர் பதிவுசெய்தார்.

ஹைட்ரஜன் வாயு கடுமையான வெப்பத்தில் எரிவதால் உருவாகுபவையே சூரிய தீச்சுவாலைகள் என்ற முடிவுக்கு முன்னதாக அவர் வந்திருந்தார். சூரிய கிரகணத்தின்போது தன்னுடைய நிறமாலைமானியால் அவர் ஆராய்ந்தபோது தெரிந்த மஞ்சள் நிறப் பட்டையின் அலைவரிசை, ஹைட்ரஜனின் அலைவரிசையுடன் ஒத்துப்போகவில்லை. உண்மையில், அந்த அலைவரிசை அன்றைக்குக் கண்டறியப்பட்டிருந்த எந்த ஒரு வேதிப்பொருளின் அலைவரிசையுடனும் ஒத்துப்போகவில்லை.

சூரிய கிரகணம் இல்லாமலேயே அதைத் தெளிவாகப் பார்க்க முடியும் என்ற அளவுக்கு அந்த மஞ்சள் வரி பிரகாசமாக இருந்தது என்பதை ஜான்சென் கண்டறிந்தார். தெளிவாகத் தெரிந்த அந்த அலைவரிசையை மட்டும் வடிகட்டிவிடும் சாத்தியமும் இருந்தது.

இந்தப் பின்னணியில்தான் சூரியனின் நிறமாலையை மேம்பட்ட முறையில் பகுப்பாய்வுசெய்ய 'ஸ்பெக்ட்ரோ ஹீலியோஸ்கோப்' என்ற கருவியை ஜான்சென் கண்டறிந்தார்.

அன்றைக்கு ஜான்சென் கண்டறிந்தது ஹீலியம் வாயுதான் என்று பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்டது. அதைக் கண்டறிந்த பெருமை அவருக்கும் லாக்யர் என்ற இங்கிலாந்து அறிவியலாளருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

வேதியியல் உலகைப் புரட்டிப் போட்ட இந்தக் கண்டறிதலில், இந்தியாவுக்கும் குண்டூருக்கும் பங்கிருந்தது, இந்த நேரத்தில் கொண்டாடப்பட வேண்டும். நவீன அறிவியல் ஆராய்ச்சி வரலாற்றில் நமக்கு உள்ள பங்களிப்பு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கு, இதுபோன்ற வரலாற்று உண்மைகள் போற்றப்படவும் வேண்டும்.

SCROLL FOR NEXT