சிறப்புக் கட்டுரைகள்

பச்சைப் பாலைவனங்களில் பழங்குடிகள்!

பக்தவத்சல பாரதி

இன்று நாம் பின்காலனியச் சூழலில் வாழ்கிறோம். நிலம்சார் அரசியல் காலனியம் போய்க் கலாச்சாரக் காலனியம் இன்று நேர்ந்திருக்கிறது. தொழில்மயம், உலகமயம், தனியார்மயம் ஆகியவற்றின் வலைப்பின்னலில் நுகர்வுக் கலாச்சாரம் நம்மைக் கட்டி இழுத்துச்செல்கிறது. அன்பு, அமைதி, நீதி மறந்து அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழலில் பூர்வகுடிகள் என்னவாக இருக்கிறார்கள்?

இன்று தமிழகத்தில் 36 பட்டியல் பழங்குடியினர் உள்ளனர் என அரசு அங்கீகரித்துள்ளது. இதில் இரண்டு வகையான அடையாளச் சிக்கல்கள் உள்ளன. இவை காலனிய காலம் முதல் தீர்க்கப்படாமல் உள்ளன.

முதலாவது, பழங்குடிகளை அடையாளப்படுத்துவது. நீலகிரியின் உச்சியில் வாழும் மக்கள் ‘தொதவர்’ எனும் பெயரை ஒருபோதும் சொல்வதில்லை. ஆங்கிலேயர் காலம் தொடங்கி இன்று வரை மூன்று நூற்றாண்டுகளாகத் தவறான பெயரிலேயே அந்தச் சமூகம் ஆவணப்படுத்தப்படுகிறது. இப்பெயர் அண்டைய படுகர்கள் அழைத்த பெயர். ‘ஒல்’ என்பதே அவர்களின் இனப்பெயர். ‘மலையாளி’ உள்ளிட்ட மற்ற பழங்குடியினரும்கூட இப்படி மற்ற இனத்தவர்கள் அழைக்கும் பெயராலேயே அறியப்படுகிறார்கள். மைய நீரோட்டத்துப் பெயர்களை மட்டுமே தூய்மைப்படுத்துகிறோம். பழங்குடிகளின் பெயர்களைத் தவறாகவே பயன்படுத்துகிறோம். மேலும் அடியன், முதுவன், மலைவேடன் என ‘அன்’ விகுதி கொண்டு அவர்களைத் தாழ்த்தி அழைக்கும் முறை மாற்றப்பட வேண்டும். ‘அர்’ விகுதியிட்டு அவர்களை மரியாதையுடன் விளிக்க வேண்டும். ஓர் அரசாணை மூலம் மாற்றி மனிதகுலத்தின் ஆதி மூதாதையர்களை மரியாதையுடன் அழைக்கலாமே!

இரண்டாவது, ஒரே பழங்குடியை மூன்று பழங்குடிகளாக அங்கீகரித்துள்ள முறை. அது தேவையற்றது மட்டுல்ல, குழப்பமானதும்கூட. அரசின் பட்டியலில் உள்ள ‘பள்ளேயன்’ (வரிசை எண் 30), ‘பள்ளியர்’ (வரிசை எண். 31), ‘பள்ளியன்’ (வரிசை எண் 32) ஆகிய மூன்று பெயர்களும் ஒரே பழங்குடியினரைக் குறிப்பதுதான். அவ்வாறே முடுகர், முடுவன், முதுவன் என மூன்றும் ஒரு பழங்குடியை மட்டுமே குறிக்கிறது. மகா மலசர், மலசர் என இரண்டு வகையானவர்களும் ஒரு பழங்குடியைச் சேர்ந்தவர்களே. இவ்வாறே குடியா, மலைக்குடி இரண்டும் ஒன்றே. உட்குழுக்களைத் தனிப் பழங்குடியாக அங்கீகரிக்க வேண்டிய தேவையில்லை. இந்தப் பழங்குடிகளின் வாழிடங்களை வரையறை செய்வதிலும்கூட துல்லியத்தன்மை வேண்டும்.

பச்சைப் பாலைவனங்கள்

தமிழகத்தில் நீலகிரி ஒரு மலை மாவட்டம். இங்குத் தொதவர், கோத்தர், குறும்பர், இருளர், பணியர், காட்டுநாயக்கர் ஆகிய ஆறு வகையான தொல் பழங்குடியினர் வாழ்வதால் இது தமிழகத்தின் ‘பழங்குடி மாவட்டம்’ என்ற சிறப்பும் பெறுகிறது. ஆனால், நவகாலனியப் பார்வையில் குறிப்பிட வேண்டுமானால் இதனை, ‘தேயிலை மாவட்டம்’ என்றும் ‘பச்சைப் பாலைவனம்’ என்றும் சொல்ல வேண்டும்.

பூர்வகாலம் தொட்டுக் காடுகளே பழங்குடிகளின் வாழ்விடம். காலனி ஆட்சியில் காடுகளின் பெரும்பகுதி அரசு வசம் கொண்டுவரப்பட்டது. பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. நீலகிரியில் 1833-ல் கேத்தி எனும் ஊரில் முதலில் தேயிலை பயிரிடப்பட்டது. அதே ஆண்டு காப்பியும் பயிரிடப்பட்டது. 1869-ல் 300 ஏக்கர்களாக இருந்த தேயிலைத் தோட்டம் 1897-ல் 4,000 ஏக்கர்களாகப் பெருகிவிட்டது. காலனி ஆட்சியில் நீலகிரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

ஆங்கில அரசு கொண்டுவந்த முதல் வனச் சட்டம் (1846) பழங்குடிகளின் வாழ்வில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. முழுவதும் காட்டைச் சார்ந்து வாழ்ந்த சுதந்திரமான நிலை பறிபோனது. மேலும் காப்பி, தேயிலை, ரப்பர் முதலான பெருந்தோட்டங்களில் கூலிகளாக மாறத் தொடங்கினார்கள் பழங்குடியினர். சொந்தக் காட்டிலேயே அகதிகளாக மாறிவிட்ட நிலை இது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய அரசும் நீா்மின் திட்டங்கள், கனிமவளம், கானுயிர் சரணாலயங்கள் மேற்கொள்வதற்குக் காட்டுப் பகுதிகளைத் தன்வயப்படுத்தியது. இன்று தமிழகத்தில் 29 கானுயிர் சரணாலயங்கள் உள்ளன.

காடுகளைப் பல்வேறு காரணங்களால் இழந்துகொண்டிருந்த பழங்குடி அமைப்புகள் நீண்டகாலமாக வன உரிமைக்காகப் போராடிவந்தன. அரை நூற்றாண்டுகாலப் போராட்டத்துக்குப் பின்னர் மத்திய அரசு ‘வன உரிமைச் சட்டம்’ (2006) இயற்றி ஒவ்வொரு பழங்குடிக் குடும்பத்துக்கும் வனத்தில் நிலத்தை ஒதுக்க வழிவகுத்துள்ளது. தமிழக மக்கள்தொகையில் 1% மட்டுமே பழங்குடிகளாக உள்ளனர். இதைவிட அதிக விழுக்காடு உள்ள மாநிலங்களில் இந்தச் சட்டத்தின் செயல்பாடு முன்னேற்றம் கண்டுவருகிறது. தமிழகம் இந்தத் திட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

போலிச் சான்றிதழ்

தமிழகத்தில் பட்டியல் பழங்குடியினர் படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் ‘பழங்குடிச் சான்றிதழ்’ பெறுவதில் பல தடைகள் உள்ளன. சான்றிதழ் வழங்கும் பெரும்பாலான அதிகாரிகள் “உங்களைப் பார்த்தால் பழங்குடிபோல தெரியவில்லையே” என்கிறார்கள். அதற்காக அவர்கள் இடுப்பை மட்டும் மறைத்துக்கொண்டு ஆடையேதும் இல்லாமல் அலங்கோலமாகச் செல்ல முடியுமா? இந்த விஷயத்தில் அதிகாரிகள் மிகுந்த கண்ணியத்தைப் பின்பற்ற வேண்டிய தேவை உள்ளது. பழங்குடி அல்லாதவர்கள் பழங்குடியினர் என்று போலிச் சான்றிதழ் பெறுவதும் தொடரவே செய்கிறது. ஏற்கெனவே பழங்குடிச் சான்றிதழ் பெற்றவர்கள் உண்மையிலேயே பழங்குடியா, இல்லையா என்பது பிரச்சினையாக எழுவதில்லை. ஏற்கெனவே சான்றிதழ் பெற்றவரின் உறவினர் நிரூபித்துவிட்டால் பழங்குடிச் சான்றிதழ் கிடைத்துவிடுகிறது. போலிகளால் உண்மையானவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இன்றைய சூழலில் பழங்குடிகளை இனங்காண்பதற்கு நடை, உடை, பாவனைகளைக் கருத்தில் கொள்ள முடியாது. சான்றிதழ் கோருபவர் உண்மையிலேயே அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்தானா என்பதைச் சமூகப் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு சோதித்தே அறிய வேண்டும்.

இன்று தமிழகப் பழங்குடியினர் பல்வேறு வகையான பிரச்சினைகளைச் சந்தித்துவருகின்றனர் என்றாலும், மேற்சொன்ன பிரச்சினைகள் உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. பழங்குடிகளை விலங்குகள் அடைபட்டுக் கிடக்கிற உயிரியல் பூங்காபோல காட்சிப்பொருளாக வைத்திருக்கக் கூடாது. மைய நீரோட்டம் எனும் கடிகாரத்தில் ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் முள்ளில் சேர்த்துக் கட்டிவிட முயலவும் கூடாது. அக்கறை உள்ளவர்கள் மனிதநேயத்துடன் பரிசீலிக்க வேண்டும்.

- பக்தவத்சல பாரதி, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர்.

தொடர்புக்கு: bharathianthro@gmail.com

SCROLL FOR NEXT