சிறப்புக் கட்டுரைகள்

புதிய அரசியல் சட்டத்துக்குத் தயாராகும் கியூபா!

சந்தனார்

கியூபாவில், 1976-க்குப் பிறகு முதன்முறையாக, அரசியல் சட்டம் முழுமையாகத் திருத்தி எழுதப்படுகிறது. புதிய அரசியல் சட்ட வரைவின் ஆறு லட்சம் பிரதிகளை, தலைநகர் ஹவானாவின் செய்தித்தாள் விற்பனை நிலையங்களிலும் அஞ்சல் நிலையங்களிலும் விற்பனைக்கு வைத்துள்ளது கியூப அரசு. இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் இந்தப் பிரதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து மூன்று மாதங்கள் நடக்கும் தேசியக் கூட்டங்களில், புதிய அரசியல் சட்டம் குறித்த தங்கள் கருத்துகளை கியூப குடிமக்கள் பகிர்ந்துகொள்ளலாம்.

224 சட்டக் கூறுகள் கொண்ட புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் 2013 முதல் கியூப அரசு ஈடுபட்டிருக்கிறது. புதிய அரசியல் சட்டத்தில் புதிதாக 87 சட்டக் கூறுகள் சேர்க்கப்பட உள்ளன. 11 சட்டக் கூறுகளில் எந்த மாற்றமும் இல்லை. 113 சட்டக் கூறுகள் திருத்தப்படுகின்றன. 13 சட்டக் கூறுகள் நீக்கப்படுகின்றன.

அரசியல் சட்டத் திருத்தத்தின்படி, கியூபாவில் பிரதமர் பதவியை உருவாக்குவது, அரசின் உயர் பதவிகளை மறுகட்டமைப்பது, பதவிக் காலத்தை நிர்ணயிப்பது, தன்பாலின உறவாளர்களின் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்குவது என்று பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவிருக்கின்றன. தற்போதைய கியூப கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதுடன், ரவுல் கேஸ்ட்ரோ அதிபராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களையும் உள்ளடக்கியதாக அரசியல் சட்டத் திருத்தங்கள் அமைய வேண்டும் என்று கியூப அரசு கூறியிருக்கிறது. ஏப்ரலில் அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ரவுல், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார்.

பணியிடங்கள், பள்ளிகள், சமூக மையங்கள் என்று பல்வேறு இடங்களில் 1,35,000 கூட்டங்கள் நடத்தப்படும் என்று கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான ‘கிரான்மா’ தெரிவிக்கிறது. இந்தக் கூட்டங்களை நடத்த, இரு நபர்கள் கொண்ட 7,600 குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்ட பின்னர், அவற்றைப் பகுத்தாயும் பணியை, அரசியல் சட்ட சீர்திருத்த ஆணையம் மேற்கொள்ளும். பின்னர், கியூப நாடாளுமன்றமான தேசிய அவையின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும். புதிய அரசியல் சட்டத்தின் இறுதிவடிவம் தயாரான பின்னர், தேசிய அளவில் கருத்துக் கேட்பு வாக்கெடுப்பு நடத்தப்படும்.

புதிய அரசியல் சட்டத்தை அங்கீகரிக்கும் பணி தொடர்பாக கியூப அரசு முழுமையான கால அவகாசத்தைக் குறிப்பிடவில்லை. ஆனால், 2019 பிப்ரவரி 24-ல் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்றும்,  2019 ஜூலையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது இந்தப் புதிய அரசியல் சட்டம் அமல்படுத்தப்படலாம் என்றும் கூறுகிறார் கியூபாவைச் சேர்ந்த கல்வியாளரும், ஓய்வுபெற்ற தூதரக அதிகாரியுமான கார்லோஸ் அல்சுகாரே.

அதற்கு முன்னர், சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தப்படலாம் என்றும் கருதப்படுகிறது. சோஷலிசக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றிவரும் மிகச் சில நாடுகளில் ஒன்று என்பதால், கியூபாவின் அரசியல் சட்டத் திருத்தத்தின் மீது அரசியல் துறை ஆய்வாளர்களின் மொத்தக் கவனமும் திரும்பியுள்ளது.

SCROLL FOR NEXT