நீ
திக் கட்சி 1916-ல் உருவானதற்குப் பிறகு உருவான திராவிட இயக்கம், இயல்பாக ஒரு இனவெறி இயக்கமாக மாறியிருக்க முடியும். மாறாக, அது தமிழ் மொழி, பண்பாடு, சமூக நீதி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்து, ஒரு கலாச்சார இயக்கமாக வலுப்பெற்றது. அதற்கான காரணம் இதுதான்: திராவிடர் கழகத்துக்கு ரத்தத்தையும் சதையையும் வழங்கிய கலாச்சார அடையாளங்கள் - திரிமூர்த்திகளான பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர்!
பெரியார் அற்புதமான சிந்தனையாளர்; அவருடைய புதுமையான கருத்துருக்கள் அவரை உலக வரலாற்றின் அறிஞர்கள் வரிசையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. வேறு காலகட்டத்தில் – வேறு சூழலில் அவர் உலக சீர்திருத்தவாதியாகக்கூட கொண்டாடப்பட்டிருப்பார். சுதந்திரப் போராட்டத்துக்கு முந்தைய காலமாக இருந்ததாலும் தமிழ்நாட்டின் பின்னணி காரணமாகவும் அவர் மாநிலத்துக்குள்ளேயே முடக்கப்பட்டார். அண்ணாவும் கருணாநிதியும் தரம்வாய்ந்த எழுத்தாளர்கள். சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு திராவிட இயக்கத்துக்கு உரம் ஏற்றியதற்கு அவர்களைத்தான் பாராட்ட வேண்டும்.
தமிழ்நாட்டின் முதல் திராவிடக் கட்சி முதல்வராகப் பதவியேற்ற அண்ணா நல்லாட்சிக்கு உரிய இலக்கணம் பிறழாமல் ஆட்சியைத் தொடங்கியவர். கருணாநிதிக் குக் கொடுத்த அவகாசத்தை, விதி அண்ணாவுக்கு அளிக்கவில்லை. ஆனாலும், அண்ணாவின் தொலைநோக்குப் பார்வை தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சியை வலுவான அடித்தளத்தின்மீது உட்காரவைத்தது. தமிழ்நாட்டு மக்கள் மீது அபாரமான செல்வாக்கைச் செலுத்துவதற் கான சக்தியை அண்ணாவும் கருணாநிதி யும் சினிமாவிலிருந்தே பெற்றார்கள்.
கருணாநிதி கதை-வசனம் எழுதி பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்ட ‘பராசக்தி’ படம் அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தை மட்டுமே ஒரு தனி ஆய்வுக்குள்ளாக்கலாம். பேனாவின் வலிமைதான் தமிழ்நாட்டில் அண்ணா அவருடைய வாழ்நாளின் சிறு பகுதியிலும், கருணாநிதியின் வாழ்வின் பெரும் பகுதியிலும் தங்கள் பிடியை இறுக வைத்திருப்பதற்கான காரணமாக அமைந்தது. கருணாநிதி என்ற அரசியல்வாதியின் வளர்ச்சி, கருணாநிதி என்ற எழுத்தாளரின் எழுத்து வாய்ப்பைக் குறைத்தது என்றுகூட வாதிடலாம்.
கருணாநிதியின் அறிவாற்றல் இரண்டு கல்கிகளுக்குச் சமம். கருணாநிதி தொடர்ந்து 60 ஆண்டுகளாக தமிழகச் சட்ட மன்ற உறுப்பினராக இருப்பது தன்னிகர் இல்லாத தனிச்சிறப்பு. ஒரு எழுத்தாளராக திராவிட இயக்கத்துக்கு அவர் செலுத்திய ஈடுஇணையற்ற பங்களிப்புக்கு மக்கள் அளித்த வெகுமதியாகவே இதை நான் பார்க்கிறேன்.
சினிமா நட்சத்திரங்களைவிட எழுத்தாளர்களாலேயே நீண்ட காலத்துக்கு மக்களிடையே வலுவான, தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கூற முடியும். அண்ணா, கருணாநிதி ஒருபுறம் - எம்ஜிஆர், ஜெயலலிதா மறுபுறம் என்று இவர்கள் இரு தரப்பு வழியாகவே இதை ஒப்பிடலாம். எழுத்தாளர்கள் புதிய விஷயங் கள் குறித்துச் சிந்திக்க நமக்குக் கற்றுத்தருகிறார்கள், அந்தச் சிந்தனை எவ்வளவு மகிழ்ச்சியானது என்று நட்சத்திரங்கள் நமக்குக் காட்டுகிறார்கள்.
நட்சத்திரங்கள் மேல்தட்டில் செயல்படுகிறார்கள்; எழுத்தாளர்கள் ஆழ ஊடுருவுகிறார்கள். இந்த வேறுபாடுகள் தொடரும். சினிமா நட்சத்திரங்கள் தொடர்ந்தும் அரசியல் நட்சத்திரங்களாக மாறும் வாய்ப்புகள் உண்டு. ஆனால், கருணாநிதியின் தலைமுறை சாதித்ததைப் போல இனி இன்னொரு தலைமுறையால் முடியாது. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களில் நடித்தார்கள்.
இன்றைய நட்சத்திரங்கள் தொழில்நுட்பம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் போன்றவற்றையே பெரிதும் நம்பியிருக்கின்றனர். ஒரு கதாநாயகன் தொடையில் வைத்தே 100 இயந்திரத் துப்பாக்கிகளால் சுடுகிறார், இன்னொருவர் கடலின் அடிமட்டத்தில் மட்ட மல்லாக்கப் படுத்துக்கொண்டே வில்லன்களுடன் சண்டை போடுகிறார்! கருணாநிதி தனது அறிவுக்கூர்மை யால் சுடர்விட்டுப் பிரகாசித்தார். தீமை களுக்கு எதிராக ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் உதவியில்லாமலேயே போராடினார். அந்த வகையில் நாம் கொடுத்துவைத்தவர்கள்!
தமிழில்: வ.ரங்காசாரி
டி.ஜே.எஸ்.ஜார்ஜ்
சமூகவியல் அறிஞர்,
மூத்த பத்திரிகையாளர்,
‘தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்’