சிறப்புக் கட்டுரைகள்

அறிவியல் விருதுகள் நமக்குக் கிடைக்காதது ஏன்?

சுந்தர் சருக்கை

நோபல் பரிசுக்கு ஈடாகக் கருதப்படும் ‘ஃபீல்ட்ஸ் மெடல்’ விருது, கணிதத் துறையில் சிறந்து விளங்கும் இரண்டு அல்லது நான்கு பேருக்கு நான்காண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இதுவரை இந்தியர்கள் எவரும் வாங்கியதில்லை. கனேடிய-அமெரிக்கக் குடிமகனான மஞ்சுள் பார்கவா 2014-ல் இந்த விருதைப் பெற்றுள்ளார். 2018-க்கான விருது ஆஸ்திரேலியக் குடிமகனும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான அக்ஷய் வெங்கடேஷுக்குக் கிடைத்திருக்கிறது. இவ்விருவரும் இந்திய வம்சாவளி என்பதில் பலர் பெருமையடையலாம். இவர்களுடைய வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு ஏதேனும் உண்டா? இந்தியாவில் படித்திருந்தால் இந்த விருதைப் பெற்றிருப்பார்களா?

கணிதத் துறைக்கு மட்டுமல்ல, அறிவியல் நோபல் விருதுகள் தொடர்பாகவும் இதே கேள்விதான். இயற்பியல், வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் இந்தியர்கள் நோபல் விருது பெற்றது நாடு சுதந்திரம் பெற்றதற்கு முன்னதாக. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் பிறந்து படித்த எவரும் நோபல் வாங்கவில்லை, ஏன்? வெளிநாடுகளில் படிப்பவர்களால் வாங்க முடிகிறது என்றால் நம்முடைய கல்வி, ஆராய்ச்சி முறைகளில்தான் கோளாறு என்பது புரிகிறது. விஞ்ஞானிகள் எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நம் நாட்டில் அறிவியலுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு குறைவு.

‘சராசரி’களுக்குக் காரணம்

இசை, கலை, இலக்கியம் ஆகிய துறைகளிலும் ‘உலகின் தலைவர்கள்’ என்று அடையாளப்படுத்தக்கூடிய பலர் இந்தியர்களாக இருக்கின்றனர். அரசாங்கமோ, பெரும் தொழில் நிறுவனங்களோ ஆதரிக்காத பல துறைகளில்கூட எப்படி நம்மால் அசலாகவும், கற்பனை வளத்துடனும், பயனுள்ள வகையிலும் செயல்பட முடிகிறது? தொடக்கக் கல்வி முதல் அறிவியலுக்கு இவ்வளவு முக்கியத்துவமும் முதலீடும் அளித்த பிறகும் எப்படி நம்மால் ‘சராசரி’ அறிவியலாளர்களை மட்டுமே தர முடிகிறது?

சதுரங்கம், பூப்பந்து போட்டிகளில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நமக்குக் கிடைக்க அந்த வீரர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் செய்த தியாகங்கள்தான் முக்கியக் காரணங்கள். இந்த வீரர்கள் தங்களுக்குத் தேவைப்பட்டதில் குறைந்தபட்ச நிதி ஆதரவைக்கூட அரசிடமும் தனியார் துறையிடமும் பெற முடிந்ததில்லை. அறிவியலுக்கான பயிற்சி அரசு நிதி ஆதரவாலும், கல்வி அமைப்பாலும் தொடக்கப் பள்ளியிலிருந்தே தொடங்குகிறது. ஒவ்வொரு நிலையிலும் ஏராளமான கல்வி உதவித்தொகைகள், ரொக்கப் பரிசுகள், ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன. அறிவியலில் உச்சம் தொடுவது, விளையாட்டு இசை ஆகிய துறைகளைப் போன்றதல்ல என்றாலும் சராசரி அறிவியல் தரத்துக்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது, பள்ளிக் கல்வியின் இயல்பான தன்மை. இரண்டாவது, அறிவியல் நிர்வாக நிலைமை. மூன்றாவது, மிகச் சிறப்பாக எதையாவது செய்ய வேண்டும் என்றால் அதற்கு நம்முடைய கலாச்சாரம் ஆற்றும் எதிர்வினை.

‘தகுதி’ நிர்ணயம்

உலகம் முழுவதும் குழந்தைகள் தங்களுடைய அறிவை வளர்த்துக்கொள்வதில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படுகின்றனர். நாமோ பள்ளிக்கூடங்களில் பயில வேண்டிய பாடப் பிரிவுகளை உயர்த்திக்கொண்டே செல்கிறோம். பாடங்களையும், நவீனக் கல்வி என்ற பெயரில் பாடச் சுமையையும் வீட்டுப்பாடச் சுமையையும் கூட்டிக்கொண்டே செல்கிறோம். அறிவியல் என்பது ‘சமநோக்குள்ள’ படிப்பு அல்ல. அதற்கு மொழி, இயற்கையான திறமைகள், தேடல்கள், கற்பனாசக்தி போன்ற சில கூறுகளும் அவசியம். ‘தகுதி’ என்று சிலவற்றை நிர்ணயித்து அறிவியல் பயிலத் தேர்வுசெய்கிறோம். உலக அரங்கில் அறிவியலில் சிறந்து விளங்குவதற்கான உரிய ‘தகுதி’ இல்லாததால்தான் பின்தங்குகிறோம்.

நம் நாட்டு அறிவியல் நிர்வாகமும் தரமுள்ளவர்களை உருவாக்க உதவியாக இல்லை. மத்தியில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் அரசுகள் அபரிமிதமாக ஊக்குவிப்பு அளித்தும்கூட நிலைமை மாறவில்லை. ஒரு சில தனி நபர்களிடம் மிதமிஞ்சிய அதிகாரம் தரப்படுவதுதான் இதற்குக் காரணம். தாங்கள் அளிக்கும் நிதிக்கேற்ற பலன்கள் கிடைக்காதது குறித்துப் பதிலளிக்கும் பொறுப்பு அறிவியல்-தொழில்நுட்பத் துறைக்கும் பிற முகமைகளுக்கும் இல்லை. எனவே, கோடிக்கணக்கான ரூபாயைச் செலவிட்டு, சில புத்தகங்களை மட்டுமே பிரசுரிக்கின்றனர். ஆய்வு உதவி நிதியையும் ஊக்குவிப்புகளையும் பெற யாரை அணுக வேண்டும், யாரிடம் பேச வேண்டும் என்பது அறிவியலாளர்களுக்கு அத்துப்படியாகத் தெரிந்திருப்பதால் அதிகப் பலன் வாய்ந்த ஆராய்ச்சிகள் நடைபெறாவிட்டாலும் பணம் மட்டும் செலவாகிறது.

உணரப்படாத மகத்துவம்

மிகச் சிறப்பானதன் முக்கியமான தன்மையை நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. மிகப் பெரிய சாதனையை யாரும் தனியாக நிகழ்த்திவிட முடியாது. அது கலாச்சாரம் சார்ந்தது, குறிப்பிட்ட அணுகுமுறை இருந்தால்தான் சாத்தியமாவது. அறிவியலில் மிகப் பெரிய கண்டுபிடிப்பைச் செய்ய வேண்டும் என்றால் கலை, இலக்கியம், மானுடவியல் துறைகளில் முழுச் சமூகமே பெரிய பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

போட்டி, திறமை ஆகியவை அறிவியல் துறைக்கு மட்டுமே தேவைப்படுவது என்று நம் கல்வி முறை ஒதுக்கிவிட்டது. எனவே, பிற துறைகளின் மகத்துவம் உணரப்படுவதில்லை. வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய குழந்தைகள் அதற்கான வாய்ப்பு தரப்படாமலேயே நிர்பந்தப்படுத்தப்பட்டு அறிவியல் படிக்கிறார்கள். அதேவேளையில், கலைத் திறமையும் ஆற்றலும் உள்ள பல கலைஞர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்ட சூழலும் வாய்ப்பும் கிடைக்காமல் மனதுக்குள் புழுங்கிக் கிடக்கின்றனர். மிகச் சிறந்த எழுத்தாளர்கள், நிகழ்த்துகலை நிபுணர்கள், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் போன்றோருக்கு மாத ஊதியம், வருங்கால வைப்புநிதியம், ஓய்வூதியம் போன்ற நிதிப் பாதுகாப்பு இல்லை. சராசரிக் கல்வியாளரின் கல்விச் சாதனையைவிட தரமுள்ள ஆக்கத்தைத் தங்களுடைய துறையில் சுய முயற்சியில் அளிப்பவர்கள் அவர்கள்தான்.

இசை, கலை, இலக்கியம், தத்துவம், விளையாட்டு ஆகியவை செழித்து வளரும் கலாச்சாரத்தில்தான் மாபெரும் அறிவியலும் தோன்றும். அறிவியல் தொடர்பாகக் குறுகிய கண்ணோட்டம் கூடாது. அறிவியல் கல்வியில் மேலாதிக்கம் செய்பவர்களுக்கு இடம்தரக் கூடாது. அறிவியல் நிர்வாகத்தில் தொழில்முறை அணுகுமுறை அவசியம். இவை இல்லாதவரை பீல்ட்ஸ் மெடல், நோபல் விருது ஆகியவற்றை நம்மால் பெற முடியாது!

- சுந்தர் சருக்கை, தத்துவப் பேராசிரியர்

 தமிழில்: சாரி,   ‘தி இந்து’ ஆங்கிலம்.

SCROLL FOR NEXT