கடந்த 1950 காலகட்டங்களில் ஆந்திராவில் பிரகாசம் மற்றும் விஸ்வநாதம் ஆகிய தலைவர்கள் தலைமையில் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி (கேஎம்பி) தொடங்கப்பட்டது. பின்னாளில் சோஷலிஸ்ட் கட்சியுடன் அது இணைந்து ராம் மனோகர் லோகியா தலைமையில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியாக (பி.எஸ்.பி) உருவானது. இக்கட்சி, அகில இந்திய அடிப்படையில் கொள்கைகளை மறுவடிவமைக்கும் நோக்கத்துடன் ஒரு பரந்த சோஷலிச சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது.
பிரஜா சோஷலிஸ்ட் கட்சி என்று அழைக்கப்பட்ட சோஷலிஸ்டுகள் கடந்தகால இந்திய அரசியல் களத்தில் முக்கிய அங்கம் வகித்தனர். நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து கிட்டத்தட்ட 1975 வரை இந்தியாவில் சோஷலிஸ்டுகளின் அரசியல் களம் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. ஆச்சார்யா நரேந்திர தேவ், ஜெயபிரகாஷ் நாராயணன், ஜே.பி.கிருபளானி, முன்னாள் பிரதமர் சந்திரசேகர், அசோக் மேத்தா, சின்கா, சியாம் சுந்தர்தாஸ் ஆகியோர் பி.எஸ்.பி.யின் முக்கிய தளகர்த்தர்களாக செயல்பட்டனர். 1951-ல் தொடங்கப்பட்ட இந்த அரசியல் கட்சியில் இருந்து, வடபுலத்தில் மட்டுமின்றி தமிழகத்திலும் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தக் கட்சிக்கு குடிசை சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.
பின்னாளில் பி.எஸ்.பி.யின் முக்கியத் தலைவராக இருந்த ராம் மனோகர் லோகியா பிரிந்து 1955-ம் ஆண்டில் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி (எஸ்.எஸ்.பி.)-ஐ உருவாக்கினார் என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தேன். இதில், மதுலிமாயி, இந்திராவை தோற்கடித்த ராஜ்நாராயணன், அனந்தராம் ஜெய்ஸ்வால் என பலர் இருந்தனர். இதன் சார்பிலும் தமிழகத்தில் சில உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குச் சென்றார்கள். இக்கட்சிக்கு ஆலமரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த 1960 காலகட்டத்தில் கிருபளானி பி.எஸ்.பி.யிலிருந்து விலகியேதாடு கட்சி அரசியலுக்கும் முழுக்கு போட்டுவிட்டார். அதைத்தொடர்ந்து, 1964-இல் அசோக் மேத்தாவும் இக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். பின், ஜார்ஜ் பெர்னாண்டஸ் 1969-இல் எஸ்.எஸ்.பியின் பொறுப்பை ஏற்றார்.
முதல் நாடாளுமன்ற தேர்தலில் 10.41% வாக்குகள் பெற்று 19 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றனர். பின்னர் நடந்த தேர்தலில் 6.81% வாக்குகளைப் பெற்று 12 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றனர். 1967 தேர்தலில் 3.06% வாக்குகள் பெற்று 13 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றனர். 1971-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 1.04% வாக்குகளை பெற்று 2 இடங்களில் மட்டுமே சோஷலிஸ்ட்கள் வெற்றி பெற்றனர். இவ்வாறாக இக்கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வந்தது.
1947-ல் பிரதமராகப் பதவியேற்ற பண்டித நேரு காலத்திலிருந்து; கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகளின் கடுமையான அரசியல் விமர்சனத்துக்கு காங்கிரஸும், நேருவும் உட்பட்டனர்.
அன்றைய காலகட்டத்தில் வடபுலத்தில் தீவிரமாக இருந்த இந்தக் கட்சி, தென்இந்தியாவில் கேரளாவிலும் பட்டம் தாணுபிள்ளை தலைமையில் 1954, மார்ச்சில் சோஷலிஸ்ட் அமைச்சரவை அமைந்தது என்பது வரலாறு. புதிய நவ கேரளம் அமைந்த பின்னரும் 1962 செப்டம்பர் வரை தாணுபிள்ளை ஆட்சியை தொடர்ந்தார்.
தமிழகத்திலும் சோஷலிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1967 தேர்தலில் அண்ணா தலைமையிலான திமுக கூட்டணியில் 7 தொகுதியில் போட்டியிட்டனர். அதில் 2 தொகுதிகளில் சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். தமிழகத்தில் சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், தொழிற்சங்கத் தலைவராக இருந்த எ.சுப்பிரமணியம், எம்.சுரேந்திரன், பட்டுக்கோட்டை எ.ஆர். மாரிமுத்து ஆகியோராவர். பிற்காலத்தில் ஏ.ஆர்.மாரிமுத்து, காங்கிரசில் இணைந்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருந்தார், இவர்களெல்லாம் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள்.
மேலும், பூதலூர் ஆறுமுகம் சாமி சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். இவர் என் மீது அதீத பாசம் கொண்டவர், ‘இஸ்கஸ்’ என்ற அமைப்பில் அவரோடும் என்.டி.சுந்தரவடிவேல், என்.டி. வானமாமலை ஆகியோரோடும் நான் பணியாற்றிய காலங்கள் மறக்க முடியாதவை. கோவில்பட்டி சோ.அழகர்சாமி மூத்த தலைவராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சட்டமன்ற கட்சி தலைவராகவும், ஜெ.பி தலைமையில் தொடக்கத்தில் இருந்தே சோஷலிஸ்டாகவும் இருந்தவர்.
அன்பு வேதாச்சலம், பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்த முன்னாள் தமிழக சட்ட மேலவை உறுப்பினர் மதுரை அய்யன் அம்பலம், சோலை இருசன், மதுரை ராமர், ஹெச்.எம்.எஸ் என்ற தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராமையா, திருக்கோவிலூர் சுந்தரம் போன்றவர்களெல்லாம் சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தார்கள்.
மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து சுரேந்திரன், பட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து எ.ஆர். மாரிமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோவை சிங்காநல்லூர் தொகுதியிலிருந்து பி.வேலுச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்லடத்தில் இருந்து கே.குமாரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்றைக்கு கச்சத்தீவை இலங்கைக்கு பிரதமர் இந்திரா காந்தி வழங்கியபோது சோஷலிஸ்ட் உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அதேபோல், காவிரி பிரச்சினை குறித்து ஈரோடு ஆர்.நல்லசிவன், சின்னத்துரை ஆகியோர் சட்டப்பேரவையில் கடுமையாக வாதிட்டனர். இவர்களெல்லாம் லோகியோவுடைய ஆதரவாளர்களாக இருந்தனர். மேலும், பெருந்துறை பாலசுப்ரமணியனும் லோகியோவை தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தார். இவர்களைப் பற்றியெல்லாம் இன்றைக்கு பலருக்கு தெரிந்திருக்கு வாய்ப்பில்லை. பிற்காலத்தில் சோஷலிஸ்ட் கட்சியில் இருந்த பலரும் காங்கிரஸில் இணைந்து விட்டனர்.
ஈரோடு ஆர்.நல்லசிவன் 1952 முதல் 1971 வரையிலான காலகட்டங்களில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றும் கொடுமுடியில் அவருடைய துணைவியார் மிகவும் சாதாரணமான வீட்டில் வசித்து வருகின்றார். 1950-களில் தமிழ் மொழிக்காக போராடி சிறைசென்ற சோஷலிஸ்ட் கட்சியினர் இன்றும் அதற்கான மொழிக்காவலர் உதவித்தொகை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் 1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக, திமுக தலைவராக இருந்த அண்ணா மாபெரும் கூட்டணி அமைத்தார். ராஜாஜியும் அந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்தார். இக்கூட்டணியை ‘வானவில் கூட்டணி’ என்று சொன்னார்கள். இக் கூட்டணியை விமர்சிக்கும் விதமாக கழுதைமேல் 7 கட்சி கூட்டணி என்று பிரபல பத்திரிகை ஒன்றில் கார்ட்டூன் வெளியானது. இதுகுறித்து ராஜாஜியிடம் கேட்டபோது, ‘அந்தக் கழுதை மெதுவாக நகர்ந்து சென்னையிலுள்ள கோட்டையை அடைந்துவிடும், கவலைப்பட ஒன்றுமில்லை’ என்று வேடிக்கையாக பதிலளித்தார்.
இத்தேர்தலில், பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதியில் அன்றைய அமைச்சரும் நிலக்கிழாருமான நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியாரை தோற்கடித்து வெற்றி பெற்றவர்தான் தீரன் சின்னமலை குடும்பத்தின் வாரிசான பாலசுப்பிரமணியம்.
அன்றைக்கு பி.எஸ்.பி,, எஸ்.எஸ்.பி என்று இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அவர்களை சோஷலிஸ்டுகள் என்றே அண்ணா அழைத்தார் . 1969-இல் கிட்டத்தட்ட 6 - 7 உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குச் சென்றார்கள். பல பிரச்சினைகளை கையில் எடுத்து சட்டமன்றத்தில் அறிவுப்பூர்வமாக அவர்கள் பேசியதெல்லாம் மறுக்க முடியாதது. 1960 - 70 காலகட்டங்களில் சோஷலிஸ்டுகளின் பங்கு தமிழகத்தில் முக்கியமானதாக இருந்தது. மிகவும் எளிமையாக இருந்தார்கள். தொழிற்சங்கவாதிகளாகவும் திகழ்ந்தார்கள். ஏ. சுப்பிரமணியம், ஹெச்.எம்.எஸ் ராமையா போன்ற சோஷலிஸ்ட் தொழிற்சங்க தலைவர்கள், தமிழகத்தில் தொழிற்சங்கங்களை திறம்பட வளர்த்தார்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
லோகியோவின் சம்யுக்த சோஷியலிஸ்ட் கட்சிக்கு தமிழகத்தில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள், சட்டமன்றத்தில் நடந்த பல்வேறு விவாதங்களில் கடுமையாக வாதாடினார்கள். அதுபோலவே ஜெ.பி தலைமையில் இருந்த எஸ்.எஸ்.பி உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் அறிவுப்பூர்வமாக பல கருத்துகளை முன்வைத்தனர். மாநிலங்களுடைய அதிகாரங்கள் பறிபோகக்கூடாது என்று வாதாடினார்கள். சட்டப்பிரிவு 356-ஐக் கொண்டு, மத்திய அரசு மனம்போன போக்கில் மாநில அரசுகளை கலைக்கக் கூடாது என்று பேசினார்கள். இவர்களது கருத்துகள் எல்லாம் இன்றைக்கும் சட்டமன்ற குறிப்புகளில் உள்ளன.
இந்த வரலாற்றை எல்லாம் நாம் அடுத்த சந்ததிக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பது மிகவும் அவசியமானதாகும். இவற்றை எல்லாம் இன்றைய தலைமுறை அறிந்து கொள்ளாமல் போனது யாருடைய பிழை? இன்றைக்கு உள்ள அரசியலை மட்டுமல்ல, கடந்தகால அரசியலையும் அறிந்து கொண்டால்தான் இன்றைக்குள்ள அரசியலுக்கான சரியான புரிதல் வரும். அரசியலாளர்களுக்கு பொருளாதாரம் தெரியவேண்டும், உலக நாட்டு அரசியல் தெரிய வேண்டும், உலக நாட்டு உறவுகள் தெரிய வேண்டும். அகில இந்திய அரசியலில் என்ன நடந்தது என்று தெரியவேண்டும். இந்த தாக்கம் இல்லாமல் அரசியலுக்கு வந்து என்ன செய்ய முடியும்?
அந்த வகையில் எஸ்.எஸ்.பி., பி.எஸ்.பி-யின் கொள்கைகளை தெரிந்து கொள்வது அவசியம். திராவிட இயக்கத்துக்கு எப்படி கொள்கைகளை அண்ணா வகுத்தாரோ, அதேபோல சரிசமமாக, அரசியலுக்கு ஏற்றவாறு, நேர்மையோடும் மக்களுக்கு ஏற்றவாறும், மக்கள் நல அரசியல் என்றும் கட்சியை வளர்த்தவர்கள் சோஷலிஸ்ட் கட்சியினர்.
தேர்தலில் போட்டியிட்ட கவிஞர் கண்ணதாசன்: தமிழகத்தில் முன்னதாக, 1957-ம் ஆண்டு முதன்முதலில் திமுக தேர்தலில் போட்டியிட்டது. அப்போது திமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்பதால் அனைத்து வேட்பாளர்களும் சுயேட்சைகளாகத்தான் போட்டியிட்டார்கள். திமுகவினர் பெரும்பாலானோர் சேவல் சின்னத்தில் போட்டியிட்டனர். அறிஞர் அண்ணாவும் சேவல் சின்னத்தில்தான் போட்டியிட்டார்.
திமுகவின் அப்போதைய முக்கியத் தலைவர்களில் ஒருவரான கவிஞர் கண்ணதாசனும் அந்த தேர்தலில் போட்டியிட்டார். ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடுமாறு அவரது நண்பர்கள் வற்புறுத்தினாலும், தனது சொந்த ஊரான சிறுகூடல்பட்டியை உள்ளடக்கியிருந்த திருக்கோஷ்டியூரில் போட்டியிட்டார்.
நாட்டுக்கோட்டை நகரத்தார் சில ஊர்களில் கூட்டம் போட்டு, அங்கு கண்ணதாசனை வரவழைத்து, வாக்குகள் கேட்கச் சொன்னார்கள். அவரும் கலந்துகொண்டார். கூட்டத்தார் முன் நின்று தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்கவும் செய்தார். எனினும், கேட்டுக்கொண்டபடி வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. ஏனென்றால், நகரத்தார் கூட்டங்களில் வாக்குகள் கேட்பவர் கூட்டத்தின் முன் கீழே விழுந்து வணங்கிக் கேட்க வேண்டும் என்பது அப்போது நடைமுறையில் இருந்த மரபு. கண்ணதாசன் அதற்குத் தயாராக இல்லை. நின்றுகொண்டே கும்பிட்டுவிட்டுத் திரும்பிவிட்டார். வெற்றியோ தோல்வியோ வாக்குகளுக்காக ஒருவர் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை என்று பின்னர் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தேர்தலில் கண்ணதாசன் 20.15 சதவீத வாக்குகள் (9,389) பெற்று மூன்றாம் இடம் பெற்று தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் என்.வி.சொக்கலிங்கம் 44.22 சதவீத வாக்குகள் (20,611) பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எஸ்.சண்முகம் 24.75 சதவீத (11,533) வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
பின்னாளில், கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து, எம்.பி.சுப்பிரமணியம் (பிற்காலத்தில் 1980களில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரானவர்), கண்ணதாசன், பழ.நெடுமாறன், வாழப்பாடி ராமமூர்த்தி, கோவை செழியன், பொறையூர் ஜம்பு, ஆர்.எஸ்.பாண்டியன், கரு.தமிழழகன், மதுரை ஆ.ரத்தினம், பிள்ளப்பன் போன்ற பலர் திமுகவில் இருந்து விலகி ஈ.வி.கே.சம்பத் தலைமையில் தமிழ் தேசியக் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜாஜியின் அறிவுறுத்தலின்படி அன்றைக்கு சீர்திருத்த காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பசும்பொன் தேவர் பெருமகனார் பிரச்சாரம் செய்த செய்திகளை எல்லாம் அடுத்து காண்போம்.
(தொடர்வோம்...)
> முந்தைய அத்தியாயம்: நூற்றாண்டு கண்ட இயக்கங்கள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 64