சிறப்புக் கட்டுரைகள்

சோம்நாத் சாட்டர்ஜி: எதிர்க்கட்சிகளாலும் நேசிக்கப்பட்ட தலைவர்!

சுவோஜித் பக்சி

சட்ட அறிஞரையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர், மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி.  இந்திய அரசியலின் சிக்கலான முடிச்சுகளைத் தனது தந்தை நிர்மல் சந்திர சாட்டர்ஜியிடம் கற்றவர் அவர். பாரிஸ்டர் பட்டம் பெற்றவரான நிர்மல் சந்திர சாட்டர்ஜி, நீதிபதியாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். எல்லாவற்றுக்கும் மேல், அனைத்திந்திய இந்து மஹாசபையின் தலைவராகவும், காங்கிரஸுக்கு வெளியில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர் அவர்.

இந்து தேசியவாதியான நிர்மல் சந்திரா, 1951-52-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தெற்கு வங்கத்திலிருந்து முதன்முதலாக வெற்றிபெற்றார். அவரது வெற்றிக்குத் துணை நின்றவர், ஜனசங்க நிறுவனரான சியாமா பிரசாத் முகர்ஜி.  அதேசமயம், 1959-ல் மத்திய வலதுசாரிக் கட்சியான சுதந்திரா கட்சியுடனும் சிறிது காலம் இணைந்திருந்தார். 1963 மக்களவைத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவில் வென்றார்.

இந்து தேசியவாதக் கொள்கையில் ஊறியவரான நிர்மல் சந்திரா, வலதுசாரித் தலைவர்களுடனும் இடதுசாரித் தலைவர்களுடனும் நல்லுறவைப் பேணினார். இந்து மஹா சபையைச் சேர்ந்தவர்களுக்கு மத்தியில் மிதவாதத் தலைவர்களில் ஒருவர் நிர்மல் சந்திரா என்று பாரதிய ஜன சங்கத்தின் வரலாற்றை எழுதியவரும் வரலாற்றாசிரியரும் அமெரிக்கத் தூதரக அதிகாரியுமான கிரெய்க் பாக்ஸ்டர் குறிப்பிட்டது இதனால்தான். இதன் மூலம், அரசியலில் எல்லாத் தரப்பிலும் நண்பர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தனது மகனான சோம்நாத் சாட்டர்ஜிக்குப் புரியவைத்தார் என்றும் சொல்லலாம்.

1968-ல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, பாஜக உறுப்பினர்கள் உட்பட அனைத்துக் கட்சியினருடனும் சுமுகமான உறவைப் பேணினார். வாழ்க்கை முறை, சிந்தனை தொடங்கி அரசியல் எதிரிகளைக் கடுமையாகச் சாடும் தீவிர கம்யூனிஸ்ட் தலைவராகத் தன்னால் இருக்க முடியாது என்று சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் சோம்நாத் சாட்டர்ஜி கூறியிருந்தார்.

1929-ல், அசாம் மாநிலம் தேஜ்பூரில் பிறந்த சோம்நாத் சாட்டர்ஜி, கொல்கத்தாவில் பள்ளிக் கல்வி பயின்றார். கல்லூரி, பல்கலைக்கழகப் படிப்பையும் கொல்கத்தாவிலேயே முடித்தார். 1950-களின் தொடக்கத்தில், பி.ஏ. படிப்பதற்காக கேம்பிரிட்ஜ் சென்றார். பிரிட்டனில் சட்டம் பயின்று கொல்கத்தா திரும்பினார். அரசியலில் நுழைவதற்கு முன்னர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணிபுரிந்தார்.  அரசியலில் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக இருந்தார். அதனால்தான், 14-வது மக்களவைத் தலைவராக அவரைத் தேர்வுசெய்வதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது ஆதரவை வழங்கியது. ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சோம்நாத் சாட்டர்ஜி.

 ‘மக்களவையின் தற்காலிகத் தலைவராக இருப்பவரே, மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுதான் முதல் தடவை’ என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் அப்போது எழுதிய கட்டுரையில் திமுக எம்.பி. இரா.செழியன் குறிப்பிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 50 ஆண்டு கால வரலாற்றில் மக்களவைத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்ட முதல் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜிதான். அவரது நெருங்கிய நண்பரான செழியன், அவரை அவரது தந்தை நிர்மல் சந்திராவுடன் ஒப்பிட்டிருந்தார்.

 ‘கூட்டாட்சித் தத்துவம், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு, அலுவலக மொழியாக ஒற்றை மொழியைத் திணிக்கும் நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாக நாங்கள் எழுப்பிய விவாதங்களின்போது, நிர்மல் சந்திராவின் ஆதரவைப் பெற்றோம். அவையில் சிறந்த பேச்சாளராக இருந்துவரும் சோம்நாத் சாட்டர்ஜி, இனி மக்களவைத் தலைவராக இருப்பார். பிரிட்டிஷ் மக்களவையான ‘ஹவுஸ் ஆஃப் காமன்’ஸின் மரபிலேயே மக்களவைத் தலைவர் என்பவர் அவையில் பேசுபவராக மட்டுமல்லாமல், அவைக்காகப் பேசுபவராகவும் இருப்பார்’ என்று அக்கட்டுரையில் செழியன் குறிப்பிட்டிருந்தார்.

தெற்கு வங்கத்தைச் சேர்ந்த மூன்று மக்களவைத் தொகுதிகளிலிருந்து 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோம்நாத் சாட்டர்ஜி. 1971 தேர்தலில் பர்தமான் தொகுதியில் வென்ற அவர், 1977 மற்றும் 1980 தேர்தல்களில் ஜாதவ்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985 முதல் 2004 வரை போல்பூர் தொகுதியிலிருந்து ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். 1984 தேர்தலில் மட்டும் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து நின்று வென்றவர் மம்தா பானர்ஜி. அரசியலில் தனது பரம எதிரியான மம்தா பானர்ஜியுடனும் நல்லுறவைப் பேணினார் சோம்நாத் சாட்டர்ஜி.

அரசியலில் எதிர்க்கட்சிகளிடம் அவர் காட்டிய நெகிழ்வுத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் கட்சியின் நலனுக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கட்சிக்குள் அவர் மீது விமர்சனங்கள் இருந்தன. பெரிய அளவிலான வணிகங்களுக்கு நெருக்கமானவராக இருக்கிறார் என்று வங்கத்தில் அவர் மீது குற்றம்சாட்டியவர்கள் உண்டு என்று அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவரே கூறியிருக்கிறார். “ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் ஒருவரிடம் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் என்னிடம் இல்லாமல் இருக்கலாம். அவற்றை நான் கொண்டிருக்க வேண்டும்” என்று சோம்நாத் சாட்டர்ஜி ஒருமுறை குறிப்பிட்டார்.

2009 ஜூலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக்கொண்டதைத் தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அவருக்கும் இடையிலான உறவு முற்றிலுமாக முறிந்தது. இடதுசாரிகள், மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டாலும் மக்களவைத் தலைவர் பதவியிலிருந்து விலக அவர் மறுத்துவிட்டார். ஜூலை 21-ல் நடக்கவிருந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடருக்கு முன்னதாக அவர் பதவி விலக வேண்டும் என்று கட்சி எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் அதை ஏற்கவில்லை. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமையிலான பொலிட் பீரோ அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றியது.

சோம்நாத் சாட்டர்ஜியின் நண்பரும் வழிகாட்டியுமான ஜோதிபாசு, கட்சியின் முடிவுக்கு ஆதரவாகவே இருந்தார். அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை. பொதுவெளியில் கட்சிக்கு எதிராக அரிதாகவே பேசும் சோம்நாத் சாட்டர்ஜி, ஜோதிபாசுவின் முடிவு ஏமாற்றமளித்ததாக, நெருங்கிய வட்டாரங்களிடம் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார். எனினும், எந்த ஒரு பேட்டியிலும் இதை அவர் குறிப்பிட்டதில்லை. அதேசமயம், அடுத்தடுத்த தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைச் சந்தித்தபோது, கட்சியின் உயர் மட்டத் தலைமையை அவர் விமர்சித்தார்.

இந்திய அரசியலின் முதுமகனான சோம்நாத் சாட்டர்ஜி, மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவரைப் பற்றித் தவறாகச் செய்தி வெளியிட்டதாக, பத்திரிகையாளர் ஒருவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்தார். ஆனால், அந்தப் பத்திரிகையாளர் மீது அவர் வழக்குப் பதியவேயில்லை. “அவரை எச்சரிக்கவே விரும்பினேன், தண்டிக்க அல்ல” என்றார்.

‘கீப்பிங் தி ஃபெயித்: மெமரீஸ் ஆஃப் எ பார்லிமெண் டேரியன்’ எனும் அவரது சுயசரிதை, விற்பனையில் சாதனை படைத்த புத்தகம். சோம்நாத் சாட்டர்ஜியின் வாழ்வும் அனுபவங்களும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வழிகாட்டும் பாடமாக இருக்கும்.

-சுவோஜித் பாக்சி

‘தி இந்து’ ஆங்கிலம்

தமிழில்: வெ.சந்திரமோகன்

SCROLL FOR NEXT