ரோஜா முத்தையா நூலகத்தின் நூலகர் சுந்தரின் பேட்டியை வாசித்தேன் (‘வங்கத்திலிருந்து வருகிறார்கள்; இங்கிருப்பவர்கள் கண்டுகொள்ளவில்லை’, ‘இந்து தமிழ்’ ஆகஸ்ட்-14). அதில் நூலகர் சுந்தர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்: “1994-ல் இந்த நூலகம் தொடங்கப்பட்டது. அப்போது, நாங்கள் கைகளில்தான் புத்தகங்களைப் பட்டியலிட்டு வந்தோம். பிறகு, கணினிகள் மெல்ல மெல்ல ஊடுருவ, நாங்கள் கணினிக்கு மாறினோம்.”
இது உண்மை அல்ல; இப்படிக் கூறுவது ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் முதல் இயக்குநரும், நூலகத் துறையில் நீண்ட பயிற்சி பெற்று, கணினிவழி நூற்பட்டியலைத் தயாரிப்பதில் குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்தவருமான ப.சங்கரலிங்கத்தின் பங்கை இருட்டடிப்புச் செய்வதாகும். இந்நூலகத்தின் ஆரம்பகட்டப் பணிகளில் சங்கரலிங்கத்துடன் இணைந்து செயலாற்றியவன் என்னும் முறையில் என்னால் இதை உறுதியாகச் சொல்ல முடியும்.
1990-1991-லேயே சங்கரலிங்கம் கணினியைப் பயன்படுத்தி இந்திய மொழி ஆவணங்களுக்கு நூற்பட்டியல் தயாரிக்கும் முயற்சியில் முழுவதுமாக ஈடுபட்டிருந்தார். இப்படிச் செய்வற்கான வாய்ப்பு புதுவை பிரெஞ்சு நிறுவனம் மூலம் அவருக்குக் கிட்டியது. தன் நூலகத்தில் இருந்த இந்திய மொழி ஆவணங்களுக்குக் கணினிவழி நூற்பட்டியல் தயாரிக்கும் பொறுப்பை சங்கரலிங்கத்துக்கும் அவருடன் பணியாற்றிய பேராசிரியர் கே.எஸ்.ராகவனுக்கும் இந்த நிறுவனம் அளித்தது. இந்தத் திட்டம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூலகத் துறையிலிருந்து செயல்பட்டது.
ரோஜா முத்தையாவின் புத்தகச் சேகரிப்பில் ஆர்வம் கொண்ட சிகாகோ பல்கலைக்கழகத்தின் சார்பாக ஜேம்ஸ் நை, டிசம்பர் 1992-ல் சென்னைக்கு வந்தார். அவர் நோக்கம் தமிழ்நாட்டில் எந்த நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பொறுப்பை ஏற்பது என்று தெரிந்துகொள்ள முயல்வது. ‘மொழி அறக்கட்டளை’யுடன் தொடர்புகொண்டிருந்த ஏ.கே.ராமானுஜன், நை என்னைச் சந்திக்க வேண்டும் என்று யோசனை சொல்லியிருந்தார். ஆகவே, நை என்னுடன் பேசினார். அப்போது அவரிடம் சங்கரலிங்கத்தின் முயற்சிகளைக் குறிப்பிட்டு, நை சங்கரலிங்கத்தின் திட்டப் பணிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் சொன்னதன்பேரில் டிசம்பர் 11-ம் தேதி நாள் முழுவதும் சங்கரலிங்கத்துடன் கழித்து, அவருடைய கணினிவழி நூற்பட்டியல் பணிகளை நை கேட்டறிந்தார். அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் நூலகத் துறையில் சங்கரலிங்கம் ஒருவர்தான் இந்த முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டிருந்தவர்.
இந்தச் சந்திப்புதான் சிகாகோ பல்கலைக்கழகம் மொழி அறக்கட்டளையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தை நிறுவ வேண்டும் என்ற முடிவுக்குக் காரணமாக அமைந்தது. சங்கரலிங்கம் ‘மொழி அறக்கட்டளை’யின் அறங்காவலர்களில் ஒருவராக இருந்தார். சங்கரலிங்கம் கடுமையான உழைப்பாளி. தன் துறையில் புதிய அறிவைப் பெற, இரவும் பகலும் உழைப்பார். இந்தக் கடின உழைப்பின் விளைவாகத்தான் 1996 இறுதியிலேயே ரோஜா முத்தையா நூலகத்தில் இருந்த அனைத்துப் புத்தகங்களுக்கும் கணினிவழி நூற்பட்டியல் தயாராகிவிட்டிருந்தது. கணினிப் பயன்பாட்டினாலேயே அவர் இதைச் சாதிக்க முடிந்தது. 1994-ல் கையால் நூற்பட்டியல் தயாரிக்க வேண்டியிருந்தால், 1996-ல் இந்தச் சாதனை சாத்தியப்பட்டிருக்குமா?
ஆக, 1994-ல் நூலகம் சென்னைக்கு வந்த உடனேயே கணினிவழி நூற்பட்டியல் வேலையும் தொடங்கிவிட்டது. அப்போது நூலகத்தின் பணியில் சுந்தர் சேர்ந்திருக்கவில்லை!
- ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன், அகராதியியலாளர், பதிப்பாளர் -
க்ரியா பதிப்பகம்.
தொடர்புக்கு: creapublishers@gmail.com